தேர்தலில் எந்த நேரமும் வன்முறை ஏற்படலாம் என அச்சத்துடனும், பதட்டத்துடனும் அனைத்து தரப்பினரும் பார்த்த மதுரை நகரில், ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்காமல், போலீசார், தங்கள் சீருடை காலரை தூக்கி கொள்ளும் வகையில், பணிபுரிந்து, எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்கினர். இதற்கு மூலகாரணமாக இருந்தவர், தேர்தல் கமிஷனால் தேடி நியமிக்கப்பட்ட கமிஷனர் பி.கண்ணப்பன்.
கடந்த, 23 ஆண்டுகளாக போலீஸ் துறையில் இருக்கும் இவர், இதுவரை தன் பணிக்காலத்தை அதிகம் செலவிட்டது தென்மாவட்டங்களில் தான். டி.எஸ்.பி., யாக செஞ்சி, அறந்தாங்கியில் இருந்துவிட்டு, கமுதிக்கு வந்தவர், பதவி உயர்வு பெற்று சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை எஸ்.பி., என, தென்மாவட்டங்களில் ஒரு, "ரவுண்ட்' வந்தார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில், 16 பேர் பலியாயினர். சம்பவத்திற்கு பிறகு, அங்கு பதட்டம் தணிக்க, அந்நகர போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் எஸ்.பி.,யாக இருந்த கண்ணப்பன், கோவை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டது, இவருக்கு கிடைத்த அங்கீகாரம். தென்மாவட்டங்களில் சாராய விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில், சாராய தொழிலில் இருந்து விடுபட முடியாமல் தவித்த மக்களுக்கு, கறவை மாடு வளர்ப்பு போன்ற மாற்றுத்தொழிலில் ஈடுபட விதையாக இருந்தார். வியாபாரிகள் மட்டுமின்றி, பின்னணியில் இவர்களை இயக்கியவர்களையும் மாற்றுத் தொழிலில் ஈடுபட வைத்தார். இவரை, "ரோல்மாடலாக' ஏற்றுக்கொண்டு, மற்ற மாவட்ட எஸ்.பி.,க்களும் அதிரடியில் இறங்கினர்.
சென்னையில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பேற்றபோது, அரசுக்கு சவாலாக இருந்த, வருவாய் இழப்பை ஏற்படுத்திய தனியார் லாட்டரி விற்பனை குறித்து விசாரித்து துணிச்சலாக அரசுக்கு அறிக்கை தந்தார். லாட்டரியை அரசு தடை செய்து, இன்று வரை அந்த தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை.தினமும் ஒரு கொலை என, ஜாதி பிரச்னை மாவட்டமாக இருந்த நெல்லையில், டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார். சில மாதங்களிலேயே மக்களுக்கு நெல்லை மீதான பயத்தை போக்கி, இயல்பான நகராக்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல, மத்திய அரசு பணியிலும் இவர் திறமை வெளிப்பட்டது. கேரளாவில் சி.பி.ஐ., எஸ்.பி.,யாக இருந்த போது, மைசூரில் பிரின்ட் அடித்து திருவனந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ரிசர்வ் வங்கியின், 50 லட்ச ரூபாய் கொள்ளை போனது. இவர் தலைமையிலான தனிப்படை, கர்நாடகா வரை சென்று விசாரித்ததில், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் சிலரின் உடந்தையோடு கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பணம் மீட்கப்பட்டது.
இப்படி பல சாதனைகளை படைத்த கண்ணப்பனுக்கு, மதுரையில் நடந்த தேர்தல் ஒரு சவாலாக இருந்திருக்கலாம். எந்த வேலை கொடுத்தாலும், அதை திறமையாக செயல்படுத்திக் காட்டுவது என்பது இவருக்கு கை வந்த கலை என்பதால், கண்ணப்பனும் அலட்டிக்கொள்ளவில்லை.தேர்தல் நேரத்தில் இவர் பொறுப்பேற்றதும் இரண்டு விஷயங்களை இவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஒன்று சட்டம் ஒழுங்கு; இன்னொன்று ஓட்டுக்கு பணம்.பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் கூட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், அமைதியாக தேர்தல் நடந்தது. சில இடங்களில் பணம் தரப்பட்டதாக புகார் எழுந்தது. அதை முடிந்தளவு கட்டுப்படுத்தினார்.ம
துரையில் அமைதியான ஓட்டுப்பதிவு எப்படி சாத்தியமானது என கேட்டபோது, கமிஷனர் கண்ணப்பன் கூறியதாவது:கடந்த தேர்தலில் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணப் பட்டுவாடா செய்தார்களோ, அந்த வழிகளை இத்தேர்தலில் அடைத்து, முடிந்தளவு பட்டுவாடாவை தடுத்தோம். போலீசாரும் கட்சி பாகுபாடில்லாமல், தைரியமாக பிடித்து, விசாரித்து, வழக்கு பதிவு செய்தனர்.போலீசாரிடத்தில் தன்னம்பிக்கையும், தைரியமும் இருப்பதை நானே பார்க்கிறேன். மதுரை நகரில் ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு நான் மட்டும் காரணமல்ல. எல்லாருடைய கூட்டுமுயற்சிதான். நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புதிதாக நான் எதுவும் செய்யவில்லை. இருக்கிற போலீசாரை பயன்படுத்தினேன். ஒரு அரசு ஊழியன் என்ற முறையில் மட்டும் என் கடமையை செய்து வருகிறேன். இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.
தேர்தலின் போது, புதிதாக வந்தவர் கமிஷனர் கண்ணப்பன் மட்டுமே. மற்ற அதிகாரிகள், போலீசார் ஏற்கனவே இங்கு இருந்தவர்கள் தான். தலைமை எப்படி இருக்கிறதோ, அப்படியே அவரது கீழ் உள்ள அதிகாரிகளும் இருப்பர்.கண்ணப்பன் நேர்மையாக சார்பு இல்லாமல் பணியாற்றியதால் போலீசார் தைரியமாக பணியாற்றினர். "தேர்தலில் கம்பீரமாக பணியாற்றினோம்' என்ற மனநிறைவோடு, இப்போது மதுரை போலீஸ் வலம் வருகிறது