கடந்த பத்தாண்டுகளில், சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளை அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகள் புறக்கணித்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், தேசத்தின் வளர்ச்சியில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முக்கிய பங்காற்றுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்காக இது எடுக்கப்பட்டாலும், கடந்த காலங்களில் நடந்த பாரபட்சத்தையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் இருப்பதாகச் சொல்கிறது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; இவற்றில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில், முதலிடத்தைப் பிடிப்பது சென்னை; அடுத்த இடங்களைப் பிடிப்பது, அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்.
சென்னையில், 46 லட்சத்து 81 ஆயிரத்து 87, காஞ்சிபுரத்தில் 39 லட்சத்து 90 ஆயிரத்து 897, வேலூரில் 39 லட்சத்து 28 ஆயிரத்து 106, திருவள்ளூர் மாவட்டத்தில், 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் வசிக்கின்றனர். கடைசி 4 மாவட்டங்களாக, கரூர், அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் உள்ளன. பரப்பில் சிறிய மாவட்டமான பெரம்பலூரில், 5 லட்சத்து 64 ஆயிரத்து 511 பேர் வசிக்கின்றனர்.மக்கள் தொகை அடர்த்தியைப் பொறுத்தவரையில், சென்னை மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ., பரப்பில், 26 ஆயிரத்து 903 பேர் வசிக்கின்றனர்; அடுத்த இடத்தை கன்னியாகுமரி (1106பேர்), திருவள்ளூர் (1049பேர்), காஞ்சிபுரம் (927பேர்), மதுரை (823 பேர்) மாவட்டங்கள் பிடித்துள்ளன. கடைசி இடத்திலுள்ள நீலகிரியில், ஒரு சதுர கி.மீ., பரப்பில், 288 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
இதே மாவட்டத்தில், கடந்த 2001 கணக்கெடுப்பின் போது, 299 பேர் வசித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது, நீலகிரியில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 பேர் வசித்தனர்; இப்போது, 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 பேர் வசிக்கின்றனர்; அதாவது, கடந்த பத்தாண்டுகளில், இந்த மாவட்டத்தில் 3.6 சதவீதம் அளவுக்கு மக்கள்தொகை குறைந் துள்ளது.இயற்கைப் பேரிடர்கள், கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுப்பாடுகள், பசுந்தேயிலை விலை வீழ்ச்சி என, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும், எந்த அரசும் கொண்டு வராததே முக்கியக் காரணம். இதனால்தான், அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், பிற மாவட்டங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.இதற்கு எதிர்மாறாக, சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில், கடந்த பத்தாண்டுகளில், ஏராளமான மக்கள் குடியேறியுள்ளனர்.
கடந்த 2001லிருந்து தமிழகத்தை ஆண்ட, இரு கழக அரசுகளும், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும், சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றிருப்பதே இதற்குக் காரணம்.குறிப்பாக, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், "நாளொரு தொழிற்சாலையும், பொழுதொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்' போடப்பட்டன. இவற்றில் ஒன்றிரண்டைக் கூட, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தென் மாவட்டங்களுக்கோ, பிற பகுதிகளுக்கோ கொண்டு செல்ல, தி.மு.க., அரசு அக்கறை காட்டவில்லை; அதற்காக எந்த மக்கள் பிரதிநிதியும் முயற்சி எடுக்கவுமில்லை.அதனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருப்போர், வேலை வாய்ப்பின்றி, சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெருகும் மக்கள் தொகையால், குடிநீர் பிரச்னை பெரிதாகி வருகிறது; நில மதிப்பு எகிறி வருகிறது; வாடகை வானை முட்டுகிறது; போக்குவரத்து நெரிசலால், நகரமே நரகமாகி விட்டது.
ஆனாலும், தற்போது வந்துள்ள அ.தி.மு.க., அரசும், சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே அதிக அக்கறை காட்டி வருகிறது. அதேபோல, பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், சென்னை நகருக்கே இரு அரசுகளும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
தாம்பரத்தைத் தாண்டிய தமிழகம் பற்றி, தலைவர்கள் கவலைப்படாததால், பிற பகுதிகளின் மக்கள் புறக்கணிக்கப்படுவதோடு, சென்னை மக்களும் நிம்மதியின்றி வாழ வேண்டியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, பரவலாக இருக்க வேண்டு@ம தவிர, சமூக சமநிலையற்ற நிலையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. சென்னையைப் பொறுத்தவரை, வளர்ச்சி பெறுகிறது என்பதை விட, வீக்கமடைந்து வருகிறது என்பதே உண்மை. இந்த விஷயத்தில் முதல்வர் ஜெ., தனிக்கவனம் செலுத்துவது அவசியம்; வளர்ச்சித் திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பரவலாக்காவிட்டால், தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முடியாது; தலைநகரையும், "அழகான சென்னை' யாக மாற்ற முடியாது.
வளர்ச்சிக்கு சாட்சி!கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்டம்தான் முதலிடத்தில் உள்ளது; 2001 கணக்கெடுப்பை விட, 38.7 சதவீதம், அங்கு மக்கள்தொகை அதிகரித்துள்ளது; சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் (35.2 சதவீதம்) மாவட்டம், இரண்டாமிடமும், பனியன் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் திருப்பூர் மாவட்டம், 28.7 சதவீதத்துடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. சென்னைக்கு அருகே நடந்துள்ள அதீத குடியேற்றத்துக்கு இதுவே சாட்சி.