Saturday, March 8, 2014

நல்ல பெயர்


ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:



வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!


ஜீவா






பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்

அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.

போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ் என்று கேட்டார்".

என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? " என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.

உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.

"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க,

"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்.

"அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார்.

"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.

விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.

அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,

கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பது தான்.

இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.







ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 - ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டைதொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


Sunday, March 2, 2014

ஆவுடையார் கோவில் கொடுங்கை

புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். இது, தமிழகம் கோவில் கட்டட கலை மரபு சார்ந்த ஒரு செவிவழி செய்தி.



ஸ்தபதிகள் மத்தியில், அத்தகைய உச்சக்கட்ட சாதனையாக கருதப்பட்ட ஒன்று தான், ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' அதனால், 'ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், ஒப்பந்தம் போட்டுக் கொள்வர். கொடுங்கை என்பது, சாய்வான கல் கூரையின் வளைந்த மேல் பகுதி (படத்தை காண்க). கோடுதல் என்றால் வளைதல் என்று, பொருள்படும். இதுவே கொடுங்கை என்ற, சொல்லுக்கு மூலம். இன்றும், கோட்டம் என்ற, சொல், வளைவு என்ற, பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாய்வான கல் கூரை அமைப்பதே கடினம். அதிலும், மலரிதழ் போல வளைந்த கொடுங்கை அமைப்பது மிக மிக கடினம். இந்த கொடுங்கை தான், ஆவுடையார் கோவில், பஞ்சாட்சர மண்டபத்திற்கு சிறப்பு சேர்க்கும் அம்சம். இந்த மகத்தான மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் தான், சைவ, சமய குரவர் நால்வருள், நான்காமவரான மாணிக்கவாசகர், இந்த கோவிலை கட்டுவித்ததாக, தகவல் பொறிக்கப்பட்டு உள்ளது என்று, சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை படித்த, 'மாணிக்கவாசகர் மகாசபை' மாநில தலைவரும், என் நண்பருமான நந்தன் என்ற, தங்கம் விசுவநாதன், 'ஆவுடையார் கோவில் கொடுங்கைக்கு மாணிக்கவாசகருடன் தொடர்பு உண்டா' என, தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். எனவே, புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பனையூரை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராஜேந்திரன், புதுக்கோட்டை, மன்னர் கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரபோஸ் ஆகியோருடன் இணைந்து; நானும், நந்தரும் ஆவுடையார் கோவிலுக்கு சென்றோம். செல்லும்போதே, ''பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்வெட்டறிஞர் சுந்தரேச வாண்டையாரால், ஆவுடையார் கோவில் கல்வெட்டுகள் பல, வாசிக்கப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்ட விழா மலர் ஒன்றில், அந்த கல்வெட்டு வாசகங்கள் வெளிவந்து உள்ளன,'' என்று, பேராசிரியர் சந்திரபோஸ் தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில், ''சக ஆண்டு , 1524ல், அதாவது, கி.பி. 1602ல் பரதேசி முத்திரை, வாமதேவ பண்டாரம் என்பவர், பல திருப்பணிகளை நடத்துவித்தார் என்ற செய்தி, அந்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சில கல்வெட்டுகளின் முழுமையான வாசகங்கள் வெளியிடப்படாமல், அவற்றின் செய்தி சுருக்கம் மட்டும் வெளியிடப்பட்டது. அந்த சில கல்வெட்டுகளே, தற்போது, புதியதாக கண்டறியப் பட்டதாக, தவறான செய்தி வெளிவந்திருக்கலாம் என, நான் கருதுகிறேன்,'' என்று, சந்திரபோஸ் கூறினார். பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம். அதே போல், பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது. இந்த வகையில், 'துதிக்கும் சகாத்தம் இங்கொன்றரை ஆயிரம் சொல்லறு நான்கு' என, துவங்குகிற ஒரு பாடலில் ('துதிக்கும்' என்பது 'திதிக்கும்' என்பது போல, பொறிக்கப்பட்டு உள்ளது) 'பதிக்கச் செய்தா னெங்கள் மாணிக்கவாசகனே' என்ற, வரி இடம் பெற்று உள்ளது. இந்த கல்வெட்டு தான், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வரியின் பொருள், 'சகாப்தம் 1524ல் (கி.பி.1602) இந்த திருப்பணியை செய்து முடித்தவர் மாணிக்கவாசகரே' என்பது தான். மற்ற பாடல்களில் உள்ள தகவல்களோடு இணைத்து பார்த்தோமானால், இந்த மண்டபம் திருப்பணி கி.பி.1594ம் ஆண்டு அக்டோபர் - நவம்பரில் துவங்கி, 1602ம் ஆண்டு மார்ச் - ஏப்ரலில் நிறைவுற்றது என்பது விளங்கும். எனவே, மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலை கட்டுவித்தது தொடர்பான செய்தி ஏதும், இங்கு இல்லை. மற்ற தெய்வங்களால் ஆன காரியம் என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது போல, மாணிக்கவாசகருக்கும், பாடல்களில் சிறப்பு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாணிக்கவாசகரின் காலம், கி.பி. 8ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. அந்த நூற்றாண்டின் இடைப்பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின், திருத்தொண்ட தொகையில், மாணிக்கவாசகரின் பெயர் இடம் பெறாததால், சுந்தரருக்கு, சில ஆண்டுகள் பின்னர் தோன்றியவர் மாணிக்கவாசகர் என்ற, கருத்து உண்டு. இந்த கருத்து ஏற்கத்தக்கதே. மாணிக்கவாசகரின் சமகாலத்தில், சைவ, சமயக் கோவில் கட்டுமானப் பணிகள், பல நடைபெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆவுடையார் கோவில் ஊரை தொட்டடுத்து, வடக்கூர் என்ற, பகுதியில் தொல்லியல் அறிஞர்களின் கவனத்திற்கு வராத, ஒரு கோவில் உள்ளது.

'ஆதி கைலாச நாதர்' என, வழங்கப்படும், அந்த கோவில் பற்றி, மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் குறிப்பிட்டதால், அந்த கோவிலையும் ஆய்வு செய்தோம். அந்த கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, பொறிக்கப்பட்ட தூண் ஒன்று உள்ளது. 'திருப்பெருந்துறை கயிலாயமுடையார்' என, வழங்கப்பட்ட அந்த கோவில், மிக பழமையானது என, அந்த கல்வெட்டால் அறியமுடிகிறது. ஆயினும், மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை, செங்கல் தளியாக அக்கோவில் இருந்திருக்கும் என, தோன்றுகிறது. கோவிலின் சண்டிகேஸ்வரர் சிற்பம் கி.பி.8ம் நூற்றாண்டுக்குரியது. கோவிலின் வளாகத்தில், கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்த திருமால் சிற்பமும் உள்ளது. கோவிலுக்கு அருகில், கி.பி.8-9ம் நூற்றாண்டுகளை சேர்ந்த, அன்னை தெய்வங்கள் சிலவற்றின் சிற்பங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரரின் சிற்பமும், அன்னையர் சிற்பங்களும், மாணிக்கவாசகரின் சமகாலத்தவையாக இருக்கலாம். அதனால், இந்த கோவிலிலும், வடக்கூர் பகுதியிலும், மாணிக்கவாசகர் குறித்த தொல்லியல் தடயங்களும், மாணிக்கவாசகரின் சிவன் கோவில் குறித்த தடயங்களும், கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணிக்கவாசகரின் முயற்சியால், செங்கல் தளியாக உருவாக்கப்பட்டு, கி.பி.13ம் நூற்றாண்டில் கற்றளியாக, இந்த கோவில் மாற்றப்பட்டு இருக்கலாம் என்பது, எங்கள் யூகம். ஆத்மநாதர் கோவில், மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற, குருந்த மரத்தடி என்பதால், சிறப்பு பெற்ற தலமாக ஆகியிருக்க வேண்டும். இந்த இரண்டு கோவில்களும், திருவாவடுதுறை ஆதீனத்தாரால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அலுவலராக பணிபுரிந்த ச.கிருஷ்ணமூர்த்தி, 10 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவிலையும் பார்வையிட்டு, இதன் பழமை குறித்து, திருவாவடுதுறை ஆதீன இதழ் ஒன்றில், கட்டுரை எழுதி உள்ளார் என, தெரிய வருகிறது. இந்த தகவல்களின் பின்னணியில் பார்க்கும் போது, மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலை, கட்டுவித்ததற்கான, ஆதாரம் பஞ்சாட்சர மண்டப கல்வெட்டுகளில் இல்லை என, தெரிகிறது.

* ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு வட்ட தலைநகராக உள்ளது

* இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவராக, சிவலிங்கத்தின் ஆவுடையார் (பீடம்) மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என, வழங்கப்படுகிறது

* இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்

கடந்த மாதம், மூன்று நாளிதழ்களில், 'ஆவுடையார் கோவிலை கட்டியது மாணிக்கவாசகர்: கல்வெட்டுச் செய்யுளால் நிரூபணம்' என்ற, பொருள் உள்ள தலைப்பில், ஒரு செய்தி வெளியறானது. அதற்கு சான்றாக, ஒரு கல்வெட்டின் பகுதி புகைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த கல்வெட்டில் 'மாணிக்கவாசகனே' என்ற, எழுத்துக்கள் தெளிவாகவும் தெரிந்தன. ஆனால், அதன் அடிப்படையில், கோவிலை மாணிக்கவாசக பெருமான் கட்டியதாக கூறமுடியுமா என்ற, ஐயம் ஏற்பட்டதன் அடிப்படையில், தென்னிந்திய சமூக வரலாற்றாய்வு நிறுவனத்தின் எஸ்.இராமச்சந்திரன், ஆவுடையார் கோவிலுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

எஸ்.இராமச்சந்திரன், தென்னிந்திய சமூக வரலாற்றாய்வு நிறுவனம், சென்னை

 (Source Dinamalar - http://www.dinamalar.com/news_detail.asp?id=925724)

Infolinks

ShareThis