Sunday, November 18, 2012

மாமாவின் மருமகனும், மருமகளின் மருமகனும்

சுதந்திரம் என்பது, அன்னியரை விரட்டும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் நிகழ்ந்துவிடாது. நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து, ஏழை, எளிய மக்களை ஏமாற்றாமல், ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும். இதை புரிந்து செயல்பட்டவர்களில் ஒருவர் தான், பெரோஸ் காந்தி. இந்திராவும், அவரின் வழிவந்த நண்டு, சுண்டைக்காய்களும் தன் பெயருக்கு பின்னால், "காந்தி' என்று சேர்க்க காரணமாக இருந்தவர், பெரோஸ் காந்தி.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பலமுறை சிறை சென்றவர். நேரு மாமாவின் அரசியல் தவறுகளை, சுட்டிக் காட்ட சிறிதும் அஞ்சாத மருமகன்.

                          கடந்த 1942-மார்ச், 26ம் தேதி, இந்திராவை, நேருவின் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்த பெரோஸ் காந்தி, அதே ஆண்டு நடைபெற்ற, "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில், தன் மனைவி இந்திராவுடன் கலந்து கொண்டார். 1942- செப்., 10ம் தேதி கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, அலகாபாத்தில் உள்ள, "நெய்னி' மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

                         பின், 1952ல், சுதந்திர இந்தியாவில் நடைப்பெற்ற முதல் பொது தேர்தலில், "ரேபெரலி' தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். சுதந்திரம் அடைந்தபின், தொழில் அதிபர்கள் பலர், அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். காரணம், பல சலுகைகளை அனுபவிக்க, இந்த அரசியல் தொடர்பு பெரிதும் உதவும் என்பதால் தான். தன் மாமா நேருவின் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டத் துவங்கினார் பெரோஸ் காந்தி.
        
                    ராம் கிருஷ்ணன் டால்மியா எனும், கோடீஸ்வரர், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக எப்படி மாறினார் என்றும், மேலும் ராம் கிருஷ்ணன் டால்மியா கைப்பற்றியுள்ள, "பென்னட் அண்ட் கோல்மன்' நிறுவனத்திற்கு, நிதியுதவி செய்ய பொது நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை, விளக்கமாக பார்லிமென்டில் பேசினார்.
காப்பீடு நிறுவனங்களின் ஊழலை, பெரோஸ் காந்தி வெளிபடுத்திய பின், வேறு வழி இல்லாமல், அப்போது இந்தியாவில் இருந்த, 245 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, 1957 ஜூன் 19ல், சட்டம் இயற்றப்பட்டது.
                       
இது இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் பிறந்த கதை. இன்று அன்னிய நேரடி முதலீடு என்று தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் காப்பீடு தொழிலை துவங்கிவிட்டன. காரணம், தேன் வடியும் இடம், தேன் எடுப்பவனுக்கு தெரியாமலா இருக்கும்!
                            
                          மருமகன் ஊழலை சுட்டிக்காட்ட, மாமா நேரு, காப்பீடு நிறுவனங்களை தேசிய மயமாக்கினார். 1957, டிச., 16ம் நாள், இந்திய பார்லிமென்ட்டின் மக்களவையில், பெரோஸ் காந்தி பேசியதை மறக்க முடியாது. இதோ...
                   
                          "மிக பெரிய பலம் வாய்ந்த காப்பீடு நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீடு கழகம், இந்த பார்லிமென்ட்டினால் உருவாக்கப்பட்டது. அதை எவ்வாறு விழிப்புடன் நடத்த வேண்டும், இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பணம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என பார்ப்போம்' என்ற தன் உரையின் மூலம், ஹரிதாஸ் முந்திரா ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார், பெரோஸ் காந்தி.

                     
             ஹரிதாஸ் முந்திரா என்பவர், கோல்கட்டா நகர மின் விளக்கு வியாபாரி. 1956ல் மும்பை பங்கு சந்தையில், போலி பங்குகளை விற்பனை செய்தவர். ஹரிதாஸ் முந்திராவின், ஆறு நிறுவனத்தின் பங்குகளை, 1.25 கோடி ரூபாய்க்கு வாங்கி, இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் முதலீடு செய்தது. அரசியல் வாதிகளின் துணையோடு நடைப்பெற்ற இந்த முதலீட்டில், இந்திய ஆயுள் காப்பீடு கழகம் தன் பணத்தை இழந்தது. பொது மக்கள் பணம் இவ்வாறு விரயம் செய்யப்பட்டதை, பெரோஸ் காந்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
                       தன் அமைச்சரவைக்கு, இப்படி ஒரு களங்கம் வரும் என, பிரதமர் நேரு கனவில் கூட எண்ணிப்பார்த்திருக்க மாட்டார். வேறு வழியின்றி, மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில், இந்த விசாரணை குழு தன் விசாரணையை துவங்கியது. 24 நாட்களில், இந்த குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
                     "எனக்கு தெரியாமல், இந்த ஊழல் நடந்துவிட்டது' என கூறி, மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாசாரியார், பதவியை ராஜினாமா செய்தார்.
டில்லியில், ஆடம்பர விடுதியில் கைது செய்யப்பட்ட ஹரிதாஸ் முந்திரா சிறையில் தள்ளப்பட்டார். 24 நாட்களில், ஒரு குழு விசாரணையை முடித்து விட்டது.

                 இன்று, எந்த அளவிற்கு ஊழல் நடந்து உள்ளது என, கண்டறியவே, பல மாதங்கள் உருண்டு ஓடி விடுகிறது. மதுரையில், மலையை எவ்வளவு குடைந்து பதுக்கி உள்ளனர் என, கண்டறியும் முன்பே, ஆட்சி முடிவடைந்து விட்டாலும், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், அன்று நாடு நல்லவர்கள் கையில் இருந்தது.
              
              ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று, எல்லாராலும் பாராட்டப்பட்ட பெரோஸ் காந்தி, பார்லிமென்ட்டில் மத்திய மண்டபத்தில் அமர்ந்து, எல்லாருடனும் பேசும் இடம், "பெரோஸ் கார்னர்' என்று அழைக்கப்பட்டது. டாடாவின், "டாடா மோட்டார்ஸ்' எனப்படும் டெல்கோ நிறுவனம், ஜப்பானில் ரயில் இன்ஜின்கள் வாங்கி, அதிக லாபம் சம்பாதிப்பதால், அதை தேசிய மயமாக்க வேண்டும் என, பெரோஸ் காந்தி வலியுறுத்தினார். தன் "பார்சி' இனத்தவராக டாடா இருந்தபோதும், நாட்டின் நன்மையே முக்கியம் என்று, பெரோஸ் காந்தி கருதினார்.

ஆனால் இன்று...
போபால் விஷவாயு வழக்கில், குற்றவாளி தப்பி ஓட தனி விமானம் தரப்பட்டது.

இத்தாலி ஆயுத தரகன் மீது இருந்த, "ரெட் கார்னர்' நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு, வழக்கை மத்திய புலனாய்வு துறை முடித்து கொண்டது.

 கழிவு பொருள்கள் என்று, பல கலை பொருள்கள் நாடு கடத்தப்பட்ட வழக்கு, வாய் மூடி உள்ளது.

 ஸ்காட்லாந்து நாட்டு பெண்மணி மவுலின், அவரின் இந்திய கணவருக்கு பிறந்தவர், ராபட் வதேரா.

 இத்தாலி நாட்டு பெண்மணி, பெயர் மாற்றிய சோனியா, அவரின் இந்திய கணவருக்கு பிறந்தவர் பிரியங்கா.

 அந்த இரண்டு வெளிநாட்டு பெண்மணிகளின் குடும்பத்தை இணைக்க உதவி புரிந்தவன், "போபார்ஸ்' தரகர் குத்ரோச்சி.


        இன்னும், "பிரியங்கா காந்தி' என்று தான் அழைக்கப்படுகிறார். பிரியங்கா வதேராவாக மாறவில்லை. "காந்தி' என்ற குடும்ப பெயரை பயன்படுத்துவதால், கரன்சி நோட்டில் உள்ள மகாத்மா காந்தியை விட்டு வைத்தனர். ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் போல, அதிகாரத்தை பயன்படுத்தும் இவர்கள் பெயரில், நாணயங்களையும், கரன்சியையும் அச்சிட்டு இருப்பர். இன்னும் பல வெளிநாட்டவர், இந்தியாவை ஆட்சி செய்வது, மகாத்மா காந்தி குடும்பம் தான் என, எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் சுவீகார புதல்வர்கள், இவர்கள் மட்டும் தான்; யாராலும் தட்டிக் கேட்க முடியாது.

         
பிக்பாக்கெட் அடிப்பவன், ஒருவனின் பர்சில் உள்ள பணத்தை மட்டும் அடிக்கிறான். கொள்ளை அடிப்பவன், ஒருவனின் வாழ்நாள் உழைப்பு, சேமிப்பை அடிக்கிறான். ஆனால், லஞ்சம், ஊழல் என்று சம்பாதிப்பவன், ஒரு நாட்டையும், வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுகின்றான்.

                "சுதந்திரம் எனும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும்' என, காந்தி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் பெயரை சொல்லி, மகாத்மாவிற்கு தொடர்பு இல்லாத இந்த, "காந்திகள்' வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

                கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை, இந்த மண்ணில் அனுமதித்ததால், வியாபாரம் எனும் போர்வையில், அரசியல் மற்றும் ஆட்சி வேர்விட்டது. அதை அகற்ற, 300 ஆண்டுகள் போராட வேண்டிவந்தது.
இன்று, அன்னிய முதலீடு என்று, பல துறைகளில், பல நிறுவனங்கள், தங்கள் கடையை திறந்து விட்டனர். நாளை முதலீட்டை விட, பலமடங்கு லாபத்தையும் எடுத்து செய்வர்.

அன்று, மாமாவும், மருமகனும் அன்னியரை விரட்டி, மக்களுக்காக பாடுபட்டனர்.
இன்று, மருமகளும், அவரின் மருமகனும், அன்னிய முதலீட்டிற்கு அடிமையாக்கி, மக்களை பாடாய் படுத்த போகின்றனர்.

"காந்தி' எனும் பெயரை பயன்படுத்தி, தன் சந்ததிகள் இப்படி ஊழல் புரிவர் என்று பெரோஸ் காந்தி கனவு கூட கண்டிருக்க மாட்டார். அவரின் ஆன்மா, சத்தியமாக அழுதுகொண்டு தான் இருக்கும்.

எஸ்.எ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்

source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=587679

No comments:

Post a Comment

Infolinks

ShareThis