Saturday, January 4, 2014

நம்மாழ்வார்


நம்மோடு வாழ்வார் நம்மாழ்வார்...




ஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை... அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது.. --இப்படி விவசாயிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை.
வேளாண் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனாலும், படித்து கற்றுக்கொண்டதை நிராகரித்துவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட உண்மைகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய நம்மாழ்வார் அப் பணியை உதறித் தள்ளினார். "இங்கே செய்யப்படுபவை எல்லாம், விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள். அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்' என்று வெளிப்படையாக அறிவித்தவர் .
பின்னர், கிருஷ்ணகிரி மலைப் பகுதி கிராமங்களில் தன்னார்வப் பணிகள் செய்தார். "இந்த மக்களிடம் பழகிய பின்னர்தான், தான் கற்றவை எல்லாம் அறிவே அல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்கிறது' என்றுணர்ந்து அந்த மக்களிடம் இருந்து தான் கற்ற விவசாய நுட்பங்களை சமூகம் முழுமைக்கும் பரப்பியவர்.
ரசாயன வேளாண்மை மட்டுமே பரவலாக செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக களம் இறங்கினார். ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை முறைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அவர் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து பணியாற்றினார். விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளன. அவரது இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் நூற்றுக் கணக்கில் உருவாகியுள்ளன.
நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாதவை என ஒதுக்கப்பட்டன. நம்மாழ்வார், அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் . தமது பணிகளுக்கென பலருடைய ஒத்துழைப்போடு உருவாக்கிய பண்ணையம்தான் வானகம் இன்றைக்கு இயற்கையை நேசிக்கும் ஆயிரக் கணக்கானோரின் ஆலயம்போல விளங்குகிறது.
வாழ்நாள் முழுதும் சூழலையும் மரபு வளங்களையும் பாதுகாப்பதற்காகப் பணியாற்றியவர் நம்மாழ்வார். நம் முன்னோராவது வாடிய பயிருக்காக வாடியதோடு நின்றனர், ஆனால் பயிர் வாடக் காரணம் என்ன, பயிரை பெற்றெடுக்கும் மண் மலடாகாமல் காக்க வழி என்ன என்பதை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து எந்ந மாதிரியான விவசாயம், உழவு, உண்ணும் உயிரினங்களுக்கும் அதை உற்பத்தி செய்யும் மண்ணுக்கும் ஏற்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்து, அந்த மாதிரியான விவசாயத்தை செய்து காட்டி வெற்றியும் பெற்றவர் .
நஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை வளங்களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. "தொட்டனைத் தூறும் மணற்கேணி'' என்பதுபோல தமக்குள் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.
இயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் லாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
இயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் முழங்கிய நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்வழி நிற்பதாகும். இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது... காற்றாக...மழையாக...வெயிலாக... அவர் நம்மோடு இருப்பார்... அவர் நம்மோடு விதைப்பார்.. அவர் நம்மோடு நாற்று நடுவார்... அவர் நம்மோடு களை எடுப்பார்.. அவர் நம்மோடு அறுவடை செய்வார்...
எண்டோ சல்பான் தெளிப்பா
மீத்தேன் குழாய் புதைப்பா
ஆற்று மணல் கொள்ளையடிப்பா
பிடி கத்தரிக்காய் விளைவிப்பா
வால்மார்ட்க்கு வரவேற்பா
எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்

நெளியும் மண்புழுவில்
உருண்டோடும் ஆற்றுநீரில்
பறக்கும் சிட்டுக்குருவியில்
எருவாகும் தழைச்சசத்தில்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

- எல்.முருகராஜ்

source: Dinamalar.com - http://www.dinamalar.com/news_detail.asp?id=887638

No comments:

Post a Comment

Infolinks

ShareThis