Wednesday, July 23, 2014

பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

                         ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது வாசலில் உள்ள கூடையில் பால் பாக்கெட் கிடக்கிறது. பால் கொண்டுவந்து தருபவரின் முகத்தைக்கூடப் பார்த்தது கிடையாது. தனியார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பால் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கறக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. நகரவாழ்வில் பால்மாடுகள், ஆடுகள் போன்றவை கண்ணில் பார்ப்பதே அரிது.
குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடின்றி அருந்தும் பால்தான் இன்றைய உணவுச் சந்தையில் அன்றாடம் அதிகம் விற்பனையாகும் திரவப் பொருள். தனியார் நிறுவனங்கள் கைக்குப் போய்க்கொண்டிருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் பாலே.
ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்தான் பால் உற்பத்தியில் முன்னணியில் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மெள்ளப் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன.
பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி வழியாக ஆண்டுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் ஈட்டப்படுகிறது. பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என்றபோதும், பால் விற்பனையில் உருவாகிவரும் பலத்த போட்டியும் வணிகத் தந்திரங்களும் நுகர்வோர்களை முட்டாள் ஆக்கவே செய்கின்றன.
உலகின் எல்லா உணவுப் பண்பாடுகளிலும் பாலும் பால் சார்ந்த வெண்ணெய், நெய், தயிர், பன்னீர் போன்ற உணவுப் பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உணவுக்காக மனிதர்கள் மற்ற விலங்குகளிடம் இருந்து பாலைப் பெறும் வழக்கம் கற்காலத்திலேயே தொடங்கியது என்கிறார்கள். 3,000 ஆண்டுகளுக்கு முன் ஆடுகள், மாடுகளின் பால் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பின் பால் தருவதற்காகவே விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன.
ஒரு லிட்டர் பாலில் 30 முதல் 35 கிராம் புரதம் உள்ளது. அத்துடன் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, கே ஆகியவையும் தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின் ஆகிய அமிலங்களும் கலந்துள்ளன. அத்துடன் பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. லாக்டோஸ் பாலுக்கு இனிப்புச் சுவையைத் தருகிறது.
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதை அடிப்படையாகக்கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் வர்கிஸ் குரியன் முக்கியமானவர். கேரளாவில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர். பின்னர், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்; அமெரிக்காவின் மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு வந்ததும், அவர் கொஞ்ச காலம் டாட்டா நிறுவனத்தில் வேலை செய்தார்.
குஜராத்தில் கைரா மாவட்டத்தில் ஆனந்த் என்ற இடத்தில், மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கத்தை 1940-ல் திரிபுவன் படேல் தொடங்கிய நாளில் இருந்து அமுல் வரலாறு தொடங்குகிறது. ஆனந்த் பால் கூட்டுறவு இணையம் என்பதே அமுல் என அழைக்கப்படுகிறது.
பொறியாளராகப் பணியாற்றி வந்த வர்கீஸ் குரியன் தனது பதவியைத் துறந்து, அமுல் நிறுவனத்தில் இணைந்து மிகப் பெரிய வெண்மைப் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தார். இந்தப் பணிக்கு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் அமிர்தா படேலும் காட்டிய ஊக்கமே முக்கிய உறுதுணையாக அமைந்தன.
சுமார் 30 ஆண்டுகள் வர்கீஸ் குரியனும் அமிர்தா படேலும் ஆற்றிய சேவையால் கூட்டுறவு இயக்கம் கொடிகட்டிப் பறந்து பால் பஞ்சம் தீர்ந்தது.
உலகெங்கும் பசுவின் பாலில் இருந்தே பால் பவுடர் தயாரிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரித்தது வர்கீஸ் குரியன்தான். இந்தியா முழுமைக்கும் பால் உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிய வர்கீஸ் குரியன், பால் குடிக்கப் பிடிக்காதவர் என்பது தனி விஷயம்.
குரியனின் முயற்சியால் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் உலகமயமாதலைக் காரணம் காட்டி பால் உற்பத்தியில் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கூட்டுறவு பால் உற்பத்தி பாதிக்கப்படத் தொடங்கியது.
சமீபத்தில் சீனாவில் கலப்படப் பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டதால், 53 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். விற்பனைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பால் பவுடரை உட்கொண்ட சீனக் குழந்தைகளுக்குத் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். வணிகச் சந்தையின் போட்டியே இதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள்.
இந்தியாவில் காலாவதியான பால் பவுடர் டின்களை விற்பதும், அதைக் கண்டுகொள்ளாமல் வாடிக்கையாளர்கள் வாங்கிப்போவதும் நடைமுறையாக உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் காலாவதியான பால் பவுடர்கள் நூற்றுக்கணக்கில் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றபடும் செய்தி நாளிதழ்களில் வெளியாகின்றன. ஆனாலும் இதுகுறித்து இன்னமும் மக்களிடம் விழிப்பு உணர்வு உருவாகவில்லை. மற்றொரு புறம் பிரபலமான பால் பவுடர் நிறுவனங்களின் போலிகள் விற்பனையாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சந்தையில் இன்று 10-க்கும் மேற்பட்டவிதங்களில் பால் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில்அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் பிராசஸிங் எனப்படும் முறையில் மிகை வெப்பத்தால் சூடாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஹிபிஜி பால், ஆறு மாதங்களுக்குக் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
உணவுப் பண்பாடு என்றாலே பெரியவர்களுக்கான உணவு முறைகளைப்பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், நாம் கவனம் கொள்ளாத, அதிகம் அக்கறைகொள்ள வேண்டிய உணவு முறை குழந்தைகளுக்கான உணவு.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 முதல் 25 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகளுக்கான உணவுச் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 19,400 கோடி ரூபாய். அதிகப் போட்டியின்றி இந்தச் சந்தையைத் தனது கட்டுபாட்டுக்குள் ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்கள் வைத்துள்ளன.
மற்ற உணவுப் பொருட்களைப்போல உள்ளூர் தயாரிப்புகள் குழந்தை உணவில் அதிகம் விற்பனையாவதும் இல்லை. பிரசவித்த பெண் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் குழந்தைகளின் ஆரம்ப உணவுப் பழக்கம் குறித்தும் இன்னும் போதுமான விழிப்பு உணர்வு ஏற்படவில்லை.
குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதைக்கூட விளம்பரப்படுத்தித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடிவது இல்லை. ஆண்களுக்குக் குழந்தைகள் என்பது கொஞ்சுவதற்கான விஷயம் மட்டுமே. அதன் அடிப்படை உணவுகள், உடல்நலம், உறக்கம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஆணைக் காண்பது அபூர்வம்.
மாறிவரும் குடும்பச் சூழலில் கைக்குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தூங்கவைத்து வளர்த்தெடுப்பது பெரும் சவாலாக உருமாறியிருக்கிறது. அதிலும், காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் பலர் தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மா தன்னோடு இல்லையே என ஆதங்கப்படுவதும், இதற்காகத் தெரிந்தவர் யாராவது வந்து உடன் வாழ மாட்டார்களா என ஏங்குவதும் வெளிப்படையான பிரச்னை.
பள்ளிக்குச் செல்லும் வயது வரை குழந்தைகளுக்குத் தரப்படும் உணவு வகைகள் பற்றிய அடிப்படை அறிதல்கூட பலரிடமும் இல்லை. ஊடக விளம்பரங்களையும் இதழ்களில் வெளியாகிற தகவல்களையும் மட்டுமே நம்புகிறார்கள்,
தாய்ப்பால் போதவில்லை. ஆகவே, பால் பவுடர்களை வாங்கிப் புகட்டுகிறோம் என்று கூறுபவர்கள் எந்த அடிப்படையில் குழந்தைக்கான பால் பவுடர் டின்னை தேர்வுசெய்கிறார்கள் என்றால், வெறும் விளம்பரங்களின் துணையைக் கொண்டு மட்டுமே. அதில் எவ்வளவு புரதச்சத்து, கால்சியம், கொழுப்பு உள்ளது… குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதா என்பதைப் பற்றி, துளிகூட சிந்திப்பது இல்லை.
முந்தைய காலங்களில் கிராமப்புறங்களில் அரிதாக யாரோ ஒருவருக்குத் தாய்ப்பால் போதவில்லை எனப் பால்பவுடர் டின் வாங்குவார்கள். அப்படியும் பால் டின் கிடைக்காது; தட்டுப்பாடாக இருக்கும். அதற்காக மருந்துக்கடையில் சொல்லி வைத்து வாங்குவார். இன்று அப்படி இல்லை.
பல்பொருள் அங்காடியில் பால் பவுடர் விதவிதமான டின்களிலும் பாக்கெட்டுகளிலும் பல்வேறு எடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, நிறைய இலவசப் பொருட்களும் தருகிறார்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பால் பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முன்பெல்லாம் தாய்ப்பால் குறைவாக உள்ள பெண்கள் பசும்பாலைக் காய்ச்சி குழந்தைகளுக்குத் தருவார்கள். இன்றுள்ளதுபோல பேபி ஃபார்முலாக்கள் அன்று கிடையாது. புட்டிப்பால் குடித்த வளர்ச்சியும், தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தையின் வளர்ச்சியும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுகிறது என்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு நிகராக எதுவும் இல்லை. புதிய புதிய ஃபார்முலா உணவுகளைத் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று வணிக விளம்பரங்கள் உரத்துக் கூவுகின்றன. ஆனால், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரே உணவு. குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகப் பிரசவித்த பெண்கள் சிறப்பு உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகப் பாலில் பூண்டுகளை மெல்லியதாக நறுக்கிப் போட்டு வேகவைத்து, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து பால்கோவா போலத் தயாரித்துச் சாப்பிடுவார்கள். அசைவ உணவுக்காரர்களுக்கு ‘பிள்ளை சுறா’ மீன் மிகவும் சிறந்தது. இது பால் சுரப்பினை அதிகமாக்கும் என்பார்கள். இப்படியான சிறப்பு உணவுகளை வீட்டில் செய்வதற்கு மாற்றாக, டின்களில் அடைக்கப்பட்ட தாய்மார்களுக்கான உணவு வகைகளைக் கடைகளில் வாங்கி உண்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு மாற்றாகப் பசும்பால் இருந்த நிலை மாறி, பால் பவுடர்கள் இந்தியாவுக்குள் அறிமுகமாகி நூறு ஆண்டுகளே கடந்துள்ளன. பால் பவுடர் எப்படி உருவானது, எப்படி இவ்வளவு பெரிய சந்தையை அது கைப்பற்றியது என்பது சுவாரஸ்யமான சரித்திரம்.
நன்றி விகடன்

Tuesday, July 15, 2014

இயற்கை வழி வேளாண்மை

                                         



                   இயற்கை வழி வேளாண்மை பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசாரத்தை ஆரம்பித்தோம். ஒரு கரும்பு விவசாயி, 'உரம் வேண்டாம்...' என்று கூறி, அதற்குரிய பணத்தை பெற்று, 3,000 ரூபாய்க்கு சாணம் வாங்கி, நிலத்தில் கொட்டி, தண்ணீர் பாய்ச்சி பயிர் வளர்த்தார்.இதைக் கண்ட வேளாண்மை அதிகாரி, 'இந்த ஆண்டு நீ, விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க மாட்டாய்...' என்றார். ஆனால், அந்த விவசாயியோ, 70 டன் கரும்பை வெட்டினார். அதிலிருந்து, இயற்கை வேளாண்மை, வேகமாக மக்களிடையே பரவியது. சத்தியமங்கலத்தில் பரவி, பின், மாவட்டம் முழுவதும் பரவியது.

                    கடந்த, 2004ல், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மற்றும் அதன் கடற்கரையோர கிராமங்களில், கடல் நீர் புகுந்ததால், 'ஐம்பது ஆண்டுகளுக்கு, அந்த நிலத்தில் எதுவும் பயிரிட முடியாது...' என்றனர்.நாங்கள் அப்பகுதி கிராமங்களில், இயற்கை வழி வேளாண்மையை பயன்படுத்தினோம். தெற்கு பொய்கை நல்லூர் என்ற கிராமத்தில், 450 ஏக்கரில், இயற்கை விவசாய இடு பொருட்களை தூவி, அந்த ஆண்டே விளைச்சலை காண வைத்தோம்.அதிகாரத்தில் இருக்கிற விவசாய விஞ்ஞானிகள், உரக் கம்பெனிகளுக்கு, தரகு வேலை செய்கின்றனர். அவர்கள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ஒட்டு விதை போன்றவற்றை, எப்படி விற்பது என்பது பற்றி தான், சிந்திக்கின்றனர். இதனால் தான், நம் உணவு விஷமாகிப் போனது.




- காலம் சென்ற இயற்கை விவசாய விஞ்ஞானி, நம்மாழ்வார், ஒரு பேட்டியில்.

Thursday, July 10, 2014

ஒரு ஐ.டி. ரெய்டு - கார்ப்பரேட் காட்டுக்குள் ஒரு ஜாலி டிரெய்லர்

                                  இன்ஜினீயரிங் கவுன்சலிங், தள்ளுமுள்ளு தகராறாகிவிட்டது இந்த வருடம். போகட்டும்… எப்படியும் ஏதோ ஒரு ‘நகரத்துக்கு மிக அருகில்’ அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்து, நான்கு வருடங்கள் முட்டி மோதி படித்து, அரியர்ஸ் களைந்து, ‘இன்ஜினீயர்’ பட்டத்துடன் வெளியே வந்து காலர் நிமிர்த்தவிருக்கும் நண்பர்களே… ‘ஐ.டி ஜாப்’ என்ற கலர் கலர் கனவுகளுடன் காத்திருப்பீர்கள். ஆனால், அந்த கார்ப்பரேட் காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா? ஒரு ஜாலி டிரெய்லர் அடிக்கலாமா?!
                         கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐ.டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த நாளில் இருந்தே, நம்மை ஒரு சிறந்த பலி ஆடாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 3 மணிக்கு எழுப்பி, ‘டெல் அபவ்ட் யுவர்செல்ஃப்’ என்று யார் கேட்டாலும், சிறுவயதில் டிபன் பாக்ஸைத் தொலைத்ததில் இருந்து சரளமாக ஒப்பித்தால், இன்டர்வியூவின் முதல் ரவுண்ட் வாய்ப்பு பிரகாசம். இரண்டாவது கட்டமாக, காலை 10 மணிக்கு இன்டர்வியூ வந்தவனை, சேனல்களில் ‘கில்மா டாக்டர்கள்’ வரும் இரவு ஸ்லாட் ஒளிபரப்பாகும் வரை பல ரவுண்டுகள் சோதிப்பார்கள். அப்போதும் வேலை கிடைப்பது, கிடைக்காமல்போவது எல்லாம் ஒருவனின் அன்றைய ராசிபலனைப் பொறுத்தது. ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால், குறிப்பாக ‘ஃப்ரெஷ்ஷர்’கள் என்று சொல்லப்படும் ஆட்டுக்குட்டிகளுக்கு, அப்போதுதான் போர் ஆரம்பம்!
 
பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா?
முதல் நாள் வேலைக்குச் சென்றவுடன் ஏ.சி குளிர், வெஸ்டர்ன் டாய்லெட், கட்டாய ஷூ பாலீஷ் போன்றவற்றைவிட அசௌகரியம் தரும் ஒரு சடங்கு இருக்கிறது. அது, எவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களை ‘சார்’, ‘மேடம்’ என்று அழைக்காமல், பெயர் சொல்லியே கூப்பிட வேண்டும். யாராவது வெள்ளையாக, அதுவும் கண்ணாடி போட்டிருந்தாலே அனிச்சையாக ‘சார்/மேடம்’ என்றே அழைத்துப் பழக்கப்பட்ட நமக்கு, அந்தச் சாங்கியம் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தும். அலுவலகச் சடங்காக இருந்தாலும், ‘பேரைச் சொல்லிக் கூப்பிடுறானே..!’ என்ற கடுப்போ என்னவோ, ஃப்ரெஷ்ஷர்களுக்கு இந்த சீனியர்கள் ‘டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்’ கற்றுக்கொடுக்காமல் ஏங்கவிடுவார்கள். ஆனால், ஃப்ரெஷ்ஷர் பெண்ணாக இருந்தால், உடனே சில ‘மகளிர் மட்டும்’ நாசர்கள் ‘control F’ போட்டு அவர்களைக் கண்டுபிடித்து வந்து அன்பு ஒழுகப் பேசி, வேலை உட்பட எல்லா விஷயத்திலும் நேசக்கரம் நீட்டுவார்கள். அதுவே பையனாக இருந்தால்… அவன் ‘புதுப்பேட்டை’ தனுஷைவிட மிக மோசமாகப் போராடி முன்னுக்கு வர வேண்டும்!
காபி மெஷினுக்கு ‘அண்டா’ கா கசம்!
ஐ.டி அலுவலகங்களில் கடினமாக உழைத்துக் களைப்பவர்களுக்கு, ஜீவாதாரத் தெம்பு ஊட்டுவது ‘காபி மெஷின்’. அதனுடைய வயிற்றில் டிகாக்ஷன், பால், சுடுதண்ணி போன்ற திரவப் பொருட்கள் அடங்கி இருக்கும். நாம் அதன் நெற்றிப்பொட்டில் அழுத்தி ஒரு கைநாட்டு வைத்தவுடன், விணுச்சக்கரவர்த்தி காறித் துப்புவதுபோல சத்தம் எழுப்பிவிட்டுப் பிறகு அதன் சேவையைச் செய்யும். இதற்காக கம்பெனியோ, காபி மெஷினோ நம்மிடம் நயாபைசா வாங்குவது இல்லை. ஆனால், இலவசமாகத் தருவதை ஏன் ‘தம்துண்டு’ குடிக்க வேண்டும் என்று, சில மொடா முழுங்கிகள் சிறிய காகிதக் கோப்பைகளைப் பயன்படுத்தாமல், அண்டா சைஸ் ‘மக்’ கொண்டுவந்து மெஷினின் உள் டப்பியைக் காலி செய்துவிட்டுப் போவார்கள்!
கலாசாரம் காப்பாத்தலையோ… கலாசாரம்!
கார்ப்பரேட் கம்பெனிகளில் ‘எத்னிக் வியர்’ என்றொரு சடங்கு நாள் இருக்கிறது. அதாவது பண்டிகை மற்றும் தேசியத் தினங்களில் நம் நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக, பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்று நிர்வாகத்தார் அன்புக் கட்டளை இடுவார்கள். ‘சும்மா இருக்கும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி’ இந்த வைபவ தினத்தின்போது சில அல்டாப்பு பக்கிகள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் பாரம்பரியம், அதிகபட்சமாக பெல்ட் உதவியுடன் வேட்டி கட்டிக்கொண்டு வருவதோடு முடிந்துவிடும். ஆனால், சில ஆர்வக்கோளாறுகள் அன்று ஒருநாள் மட்டும் ‘அனந்த் வைத்தியநாதனாக’ தன்னை மாற்றிக்கொண்டு வாடாமல்லி, ஆகாய நீலம் போன்ற நிறங்களில் சுடிதார் அணிந்து வந்து, நாள் முழுக்கத் துப்பட்டாவைச் சரிசெய்து கொண்டிருப்பார்கள். சுதந்திர/குடியரசு தினங்களில் ஆம் ஆத்மி குல்லா சகிதம், ரயில்வே கேன்டீன் சர்வீஸ் பாய் போல ஃப்ளோரில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
தேவதைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பாரம்பரியம், கலாசாரம் என்றதும் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது புடைவை. இ-மெயில் சர்க்குலர் வந்தவுடனேயே அன்றைய தினம் என்ன கலரில் வரவேண்டும், அளவு ஜாக்கெட்டுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் இறங்கிவிடுவார்கள். ‘சம்பவத் தினத்தன்று’ எக்ஸ்ட்ரா கோட்டிங் கெட்டப்பில் அருமையான ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வரை, பொருட்காட்சியில் பிள்ளையைப் பறிகொடுத்ததுபோல அங்கும் இங்கும் அல்லோலகல்லோலம்தான். இதில் சில பெண்கள், லீப் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சேலை கட்டுவார்கள் என்று எளிதில் இனங்கண்டுகொள்ளலாம். மாறுவேடப் போட்டிக்காக டீச்சர் கெட்டப் போட்டு வந்த தோரணை அவர்களிடம் இயல்பாக இருக்கும். சேலைக் கசகசப்பு காரணமாக எப்போதும் மைல்டு எரிச்சலில் இருப்பார்கள். அப்போது அவர்களிடம் சென்று, ‘ஹேய்… நீ வி.டி.வி ஜெஸ்ஸி மாதிரியே இருக்க’ என்று கிசுகிசுப்பதோடு தனிப்பட்ட முறையில் அதையே மெசேஜாக அனுப்பினால் (ஸ்மைலி போடக் கூடாது), ஓரளவு சகஜமாகிவிடுவார்கள்.
மேனேஜர்ஸ்களுக்கும் இதுமாதிரி ஜிகுஜிகு ஆடைகள் மீது லவ் இருந்தாலும், தாங்கள் மேலதிகாரிகள் என்பதால், உயர்தர லினென் மெட்டீரியலில் ஜிப்பா அணிந்து வருவதோடு நிறுத்திக்கொள்வார்கள். அதோடு விடுமுறை தினம் அதுவுமாக, தன் அடிமைகள் வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களைக் குஷிப்படுத்தும் வகையில் கேபினுக்கு வந்து நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். ‘இப்போ போறியா… இல்ல வாய்க்குள்ள கத்தியை விட்டுச் சுத்தவா?’ என்று மனதுக்குள் தோன்றினாலும், அடுத்த அப்ரைசலை மனதில் வைத்துக்கொண்டு ஒருவாறாகச் சிரித்துச் சமாளிக்க வேண்டும்!
லிஃப்ட்டாலஜி!
லிஃப்ட்டை முன்னிட்டு நடக்கும் அழிச்சாட்டியங்களும் அநேகம். லிஃப்ட்டில் இருப்பவர்கள் வெளியே வரும் நபர்களுக்குக்கூட வழிவிடாமல், உலக மக்களை வேற்றுக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லும் கடைசி பஸ்போல லிஃப்ட்டைக் கருதுவார்கள். இன்னும் சில ஆர்வக்கோளாறுகள் லிஃப்ட்டில் இருக்கும் இரண்டு நிமிடங்களுக்குள் சந்தானத்தைவிட அதிக ஜோக்குகளைச் சொல்லி, உள்ளிருக்கும் பெண்களை வசீகரிக்க முயல்வார்கள். ஆனால், அந்தப் பெண்கள் செம உஷார். பையன், என்னதான் கர்ணம் அடித்தாலும் மன்மோகன்ஜி மாதிரி முகத்தை வைத்துச் சமாளித்து, பிறகு அவன் இல்லாத நேரத்தில் ‘சிரிச்சாப் போச்சு’ ரவுண்ட் முடிந்தது போல சிரிப்பார்கள்!
ஆன்சைட் மச்சி!
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதில் இருக்கும் மிகப் பெரிய கொடுப்பினையே, உள்ளூர் எம்.ஜி.ஆர் சமாதியைக்கூடப் பார்த்திராத முருகேசன்கள் எல்லாம் ஆன்சைட் என்ற பெயரில் வெளிநாட்டுக்குச் சென்று ஷேக்ஸ்பியர் சமாதிக்கு முத்தம் கொடுத்தபடி போட்டோ அப்லோடிக்கொண்டிருப்பார்கள். பழைய ஃபிலிம்ரோல் கேமரா என்றால், ஒரு ஆன்சைட்டுக்குச் சென்று இவர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்குக் குறைந்தது 5,000 ஃபிலிம் ரோல்கள் காலி ஆகியிருக்கும் என்று ஃபேஸ்புக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. க்ளிக், டெலிட் டிஜிட்டல் யுகம் என்பதால், அந்தச் செலவு இப்போது மிச்சம். ஆன்சைட் செல்லும் பேர்வழிகள் சரக்குப் பாட்டில், சென்ட் பாட்டிலோடு கொஞ்சம் திமிரையும் அங்கு இருந்து எடுத்து வருவார்கள். ‘நாங்கள்லாம் யாரு?’ என்கிற மொழி முகத்தில் கொஞ்ச நாளுக்கு ஜாடை பேசும். ஆனால், காலத்துக்கு ஈவு இரக்கமே இருக்காது அல்லவா? ஆன்சைட் போய்விட்டு வந்தாலே டவுசர் கிழியும் அளவுக்கு வேலை, அதோடு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு வேறு எந்த கம்பெனிக்கும் நகர முடியாத அக்ரிமென்ட் இதெல்லாம் சேர்ந்து, ஆன்சைட் ஆசாமிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அமிஞ்சிகரைப் பேருந்து நிறுத்தத்தில், தயிர் டப்பா டப்பர்வேரோடு நிறுத்தும்!
வரலாற்றில் இன்று!
வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அலுவல்ரீதியாக நம் வாழ்க்கையையே கைமா போடும் மகத்தான நாள், தனி அறையில் மேனேஜருக்கும் நமக்கும் குடுமிப்பிடிச் சண்டை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்… ‘அப்ரைசல்’ தினம். (‘ஆ’ நெடில் அல்ல… ‘அ’ குறில்!)
‘நீங்க நல்லாத்தான் பெர்ஃபார்ம் பண்ணீங்க… பட் உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். ஸோ, நெக்ஸ்ட் டைம் இதைவிட நல்லா ரேட்டிங் தர்றேன். உங்களுக்கு வேற பிளான் வெச்சிருக்கேன். அது உங்களால முடியும். பிகாஸ், உங்ககிட்ட ஸ்கில் இருக்கு… ஸ்கேல் இருக்கு…’ என்று சூப்பர் சிங்கர் ஜட்ஜ்போல கமென்ட்களை மேனேஜர் வழங்கிக்கொண்டிருக்க, நம் கண்களோ குங்கும நிறத்துக்கு மாறிக்கொண்டிருக்கும். மொக்கை ரேட்டிங் ஒன்றைக் கொடுத்துவிட்டு, ‘இதை வெளியில யார்கிட்டயும் சொல்லிடாதீங்க…’ என்று அவர் கடைசியாகச் சொல்லும்போதுதான் ‘பரதேசி’ அதர்வா போல முழங்காலிட்டு, ‘நியாயமாரே…’ என வான் நோக்கிக் கதற வேண்டும்போல இருக்கும்.
ஒன் டு ஒன் நடந்த ரூமில் இருந்து வெளியே வந்தவுடன், ரெஸ்யூம் ரெடி பண்ணியே ஆக வேண்டும் என நண்பர்களிடம் நல்ல ஃபார்மெட் கேட்டு ஆலோசனைகள் நடக்கும். இன்னொரு பக்கம் ‘சொம்படிப்பது எப்படி?’ என எங்காவது கோச்சிங் கிளாஸ் நடத்துகிறார்களா என்று மனம் கூகுளில் தேடச் சொல்லும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் ஒருபக்கம் இருக்க, கைவசம் வேலை இருந்தால் போதும் என்று நைட் ஷிஃப்ட், ரொட்டேஷனல் ஷிஃப்ட், கிரேவ்யார்டு ஷிஃப்ட்… என உலகத்தில் இருக்கும் அனைத்து நாட்டுக் கடிகாரங்களின் நேரப்படியும் நாம் வேலை செய்து உடம்பில் உள்ள போட்டி, தலைக்கறி, கல்லீரல், கணையம் முதலானவற்றைக் கண்டமாக்கிவிட்டு மருத்துவர்களின் அப்பாயின்மென்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருப்போம்!
சார் பேப்பர்!
‘பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று ராஜினாமா கடிதம் தருவதற்கு கார்ப்பரேட் மொழியில் ‘பேப்பர் போடுவது’ என்று பெயர். இந்த விஷயத்திலும் சில அவசரக்குடுக்கைகள் இருக்கின்றன. ‘மேனேஜருடன் ரேப்போ சரியில்லை… கஃபேடீரியாவில் சாம்பார் சுவை இல்லை’ போன்றவற்றுக்கு எல்லாம் கோபித்துக்கொண்டு பேப்பர் போடுவதற்குப் பதிலாக, அம்மா ஆட்சியில் தரும் விலையில்லா ஆடுகளை வாங்கி மேய்க்கலாம். அதுவும் அடுத்த கம்பெனியின் ஆஃபர் லெட்டர்கூட கைவசம் இல்லாமல், அரசனை நம்பி புருஷனை விடுவது ரொம்ப ரிஸ்க். டீம் லீடருடன் வாய்க்கால் தகராறு, டீம்மேட்டுடன் காதல் கசப்பு இத்யாதிகளுக்கு எல்லாம் சால்வையைப் போத்திக்கொண்டு வெளியேறுவது அக்மார்க் முட்டாள்தனம். இதேபோன்ற பாடாவதி பிரச்னைகள் அடுத்த கம்பெனியிலும் இருந்தால், அந்த ஏரியா கவுன்சிலரிடம் சென்றா முறையிட முடியும்? வேறு வழி இல்லாமல் எவ்வளவுதான் அசிங்கப்பட்டாலும் ‘எஜமான்… எஜமான்…’ என்று ‘முத்து’ படத்தில் ரஜினி, சரத்பாபுவைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, விரக்தி வெடித்து, ‘என்ன பெரிய வேலை?’ என்று ஆக்ரோஷத்துடன் ராஜினாமா லெட்டர் டைப் செய்துகொண்டிருக்கும்போது, அடுத்த இ.எம்.ஐ-க்கான மெசேஜ் அலர்ட் வந்து சத்குருவின் சீடர் போல நம்மை அந்தக் கணமே சாந்தப்படுத்தும்!
ஆனால், இது எதுவுமே தெரியாமல் பி.பி.ஓ./ ஐ.டி நிறுவன ஆட்கள் எல்லாம் பப், கிளப் என எப்போதும் ஜாலியாகச் சுத்துவார்கள், அனிருத் பாடலைப் பாடிக்கொண்டே ஆபீஸில் வேலை செய்வார்கள், லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்… என மங்கலான சில எண்ணங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் அதுபோன்ற சுகபோகங்கள் அமைவது இல்லை. இது புரியாமல் நம் சொந்தக்காரர்கள், குடும்பத்தார்கள் ‘என்னப்பா சிவனாண்டி ஐ.டி-ல இருக்க. உன்னால இதை வாங்க முடியாதா?’ என்று சோஷியல் பிரஷரை ஏற்றிச் செல்வார்கள்.
காலவரையற்ற வேலை நேரம், முறையற்ற உணவு முறை, சீரானத் தூக்கமின்மை, டிப்ரஷன், சப்ரஷன், அப்ரஷன் போன்ற மேலும் பல ‘ஷன்’கள் கார்ப்பரேட் ரோபோக்களின் வாழ்க்கையில் நடுவுல கொஞ்சம் பக்கங்களைத் தொலைப்பது யாருக்குமே தெரியாது!
(இதை… என் மேனேஜர் படிக்காமல் இருக்கணும் மாரியாத்தா!?)
நன்றி விகடன்

Saturday, July 5, 2014

நாம் சாப்பிடும் கத்திரிக்காய், தக்காளிக்குப் பின்னே சர்வதேச சதிவலை

                              பொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும் காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப் பெற்றுவிடலாம்.
இப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக, விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.
வறுமையைப் போக்கவும் விளைச்சலை அதிகப்படுத்தவும் உதவும் தொழில்நுட்பம் என முன்வைக்கப்பட்டபோதும், இதன் பின்னே ஒளிந்திருப்பது முழுமையான வணிக முயற்சி. இந்த முயற்சியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. இன்று அமெரிக்காவில் விளையும் மக்காளச்சோளத்தில் 90 விழுக்காடு மரபணு மாற்றம் செய்தவை.
மரபணு மாற்றம் நல்லதுதானே, உயர்தொழில்​நுட்​பத்தை ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழுக்கூடும். தொழில்நுட்பம் நல்லதுதான். ஆனால், அது யாருக்குப் பயன்படுகிறது, எப்படிப் பயன்படுகிறது, அதன் எதிர்விளைவுகள் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும் இல்லையா?
பொதுவாகத் தக்காளிகள் பழமாக மாறும்போது ஆங்காங்கே பச்சை நிறம் கொண்டு சில இடங்களில் காயாக இருக்கும். இதனை மாற்றி முழுப் பழமும் சிவப்பாக உருமாறினால் விற்பனை கூடும் என நினைத்தார்கள். இதற்காக ‘பொசிஷனல் குளோனிங்’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. இப்படி மாற்றம் செய்யப்பட்ட தக்காளிகள் பார்க்க அழகாக ஒரே சிவப்பு நிறத்தி​லிருக்கும். ஆனால் நாட்டுத் தக்காளி போலச் சுவையிருக்காது. சத்தும் குறைவு.
அத்துடன் மரபணு மாற்றம் காரணமாகத் தக்காளியில் உள்ள சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுவதால் அதன் இயல்பு மாறிவிடும். இந்த வகைச் செயற்கை தக்காளி வகைகள் விளைவிக்கப்படுவதற்கு ஒரே நோக்கம்தானிருக்கிறது. அது கொள்ளை லாபம். மனித உயிர்களுடன் விளையாடி லாபம் சம்பாதிக்க நினைக்கும் கொள்ளையர்களே இதன் ஆர்வலர்கள்.
1994-ல் அமெரிக்காவில் வாசனை மிக்கத் தக்காளி ரகம் ஒன்றை உருவாக்கி விவசாயம் செய்வதாகப் பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அந்தத் தக்காளி விளையும்போதே பயனற்றுப் போய்விட்டது. தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த வாசனை தக்காளி திட்டம் உடனே கைவிடப்பட்டது. பூச்சி மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து செடிகளைக் காப்பாற்றவே மரபணு மாற்றம் செய்​கிறோம், இதனால் விளைச்சல் அதிகமாகும் என விஞ்ஞானிகள் முழங்கி வருகிறார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தது போல மரபணு மாற்றம் மோசமான பின்விளைவுகளை உருவாக்​கியதுதான் நம் காலத்தின் நிஜம்.
பூச்சிகளிடமிருந்து பருத்திச் செடிகளைப் பாதுகாக்க நுண்கிருமியின் மரபணுவை செடியின் விதையில் செலுத்தினார்கள். அப்படி உருவான பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் செத்து விழுந்தன. பருத்தி எடுக்கப் போன பெண்களுக்கு சுவாச ஒவ்வாமையும் இருமலும் உருவானது. சிலருக்குத் தோல் நோய்கள் உருவாகின. இதுதான் மரபணு மாற்ற பருத்தியின் விளைவு.
இதுபோல மரபணு மாற்றம் செய்த உருளைக் கிழங்கினை பரிசோதனை எலிக்குக் கொடுத்தார்கள். அதற்கு ஒரு மாத காலத்தில் குடல்நோய் உருவானது​டன் புற்றுநோய் உருவாவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன. இதுவும் ஜி.எம். உணவின் எதிர்விளைவே. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் மூலம் நிலம் பாதிக்கப்படுவதுடன் உடல் நலமும் பாதிக்கப்படும். ‘அவை பொய் எனச் சொல்லும் விஞ்ஞானிகள், வணிக நிறுவனங்களின் கைக்கூலிகளாகச் செயல்படுகிறவர்’ என்று எச்சரிக்கை செய்கிறார் சுற்றுச்சூழல் அறிஞர் வந்தனா சிவா.
புதிதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிலத்தில் பயிர்செய்து சோதனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தடை விதித்தது. ஆனால், இந்தத் தடை உத்தரவுவை மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரி, தக்காளி, வெண்டைக்காய், நெல், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டுச் சோதனை செய்ய, சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எந்தப் பன்னாட்டு நிறுவனமும் இதுபோன்ற மரபணு மாற்ற பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். அதற்காக ஒரு பண்ணை அமைத்துக்கொள்ளலாம். அவற்றுக்குக் கண்​காணிப்பும் கட்டுப்பாடும் கிடையாது. இந்திய நிலத்தைப் பன்னாட்டு நிறுவனங்களின் சோதனைக் களமாகத் திறந்துவிட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது.
அடுத்த தலைமுறை மனிதர்களுக்கு, தக்காளி என்பது ஒரு மாதம் இருந்தாலும் கெட்டுப் போகாது. ஒரு தக்காளி இரண்டு கிலோ வரை எடையிருக்கும். ஒரு செடியில் இருந்து 100 கிலோ வரை விளைச்சல் இருக்கும் என்றெல்லாம் பன்னாட்டு விதை வணிகர்கள் கதைவிடுகிறார்கள். ஒருவேளை இவை உண்மையாகக்கூட மாறலாம். ஆனால் இதைச் சாப்பிடும் மனிதன் 50 வயதுகூட உயிர் வாழ்வானா என்பது குறித்து எந்த நிறுவனமும் கவலை கொள்ளவில்லை. அதுதான் யோசிக்க வைக்கிறது.
சமீபத்தில் ஸ்பெயினில் விளைவிக்கப்பட்ட மரபணு மாற்ற வெள்ளரிக்காய் சாப்பிட்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒரு நாளிதழ் செய்தியை வாசித்தேன். அதையொட்டி ஆஸ்திரியா நாடு ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, பெரிய மஞ்சள் வாழைப் பழம் உள்ளிட்ட அனைத்து மரபணு மாற்றப்பட்ட காய்கறி பழங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதுபோலவே ஜெர்மனியிலும் ஸ்பெயின் நாட்டுக் காய்கறி, பழங்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் 2002-ல் மரபணு மாற்றப்பட்ட கடுகும் 2003-ல் பருத்தியும் அனுமதிக்கப்​பட்டன. அரிசி, கோதுமை, மக்காச்சோளம், துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, கேழ்வரகு, கம்பு, மிளகு, ஏலக்காய், தேயிலை, கரும்பு, சோளம், நிலக்கடலை, சோயா, கடுகு, பருத்தி, சணல், மூங்கில், ஆமணக்கு, ரப்பர், புகையிலை என 74 விதமான பயிர் வகைகளில் மரபணு ஆய்வுகள் நிகழ்த்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
40 நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்​பட்ட விளைபொருட்களைத் தடை செய்துள்ளபோதும், இந்தியா அதைக் கண்டுகொள்ளவே இல்லை. பன்னாட்டு வணிகர்களின் கமிஷன்களுக்குக் கைமாறாக இந்திய விவசாயத்தைத் தாரைவார்க்க தயாராக இருக்கிறார்கள். ‘முகலாயர்கள் சிறிய அளவில் நமது வேளாண் முறையை மாற்றியமைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அதைப் பெரிய அளவில் மாற்றியமைத்தார்கள். பிறகு சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் – தனியார் நிறுவனக் கூட்டணி இதை மோசமான நிலைக்குக் கொண்டுபோயிற்று. விவசாயம் குறித்த எண்ணிக்கையற்ற பொய்கள் நமது பாடப் புத்தகங்களில் உள்ளன. ஊடகங்களும் இந்தப் பொய்களை உற்பத்தி செய்கின்றன. தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகளைச் சிறந்த தெளிப்பான்களாகப் பாடப் புத்தகங்கள் சிபாரிசு செய்வது வேடிக்கையானது’ என்கிறார் ஆய்வாளர் சங்கீதா ஸ்ரீராம். இவர் பசுமைப் புரட்சியின் எதிர்விளைவுகள் குறித்துத் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
தென்கிழக்கு இத்தாலியின் தக்காளித் தோட்டங்​களில் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அகதியாக வருபவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்துகின்றன தக்காளித் தோட்டங்கள். ஒரு நாளைக்கு இவர்களுக்குச் சம்பளம் வெறும் ஐந்து யூரோ மட்டுமே. ஆனால், காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை வேலைசெய்ய வேண்டும். கூடாரங்களில் தங்கி வாழும் அடிமைகள் தப்பிப் போய்விட முடியாதபடி வேட்டை நாய்கள் ரோந்து சுற்றுகின்றன. கடுமையான தண்டனை, இரண்டு வேளை உணவு, நோய் ஆகியவை ஒன்றுசேர்ந்து இவர்களைத் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன. கானா தேசத்திலிருந்து இத்தாலிக்கு வரும் அகதிகளின் உழைப்பில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள், திரும்பவும் கானாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலிய தக்காளிகளின் வரவால் கானாவின் நாட்டுத் தக்காளி உற்பத்தி மோசமான பாதிப்பை சந்தித்தது. ஆகவே, அங்குள்ள விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை நடத்த இத்தாலிக்கு அகதிகளாக வரும் சூழல் ஏற்படுகிறது. தக்காளித் தோட்டங்கள் வணிகச் சந்தையில் கொள்ளை லாபம் தருகின்றன என்பதால் துப்பாக்கி ஏந்திய ஆட்களைக் கொண்டு அகதிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்கிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர் பேப்ரிஜியோ கேதி.  இந்த இத்தாலிய தக்காளிகளைக் கொண்டே நாம் சாப்பிடும் சுவையான பன்னாட்டு உணவக கெட்சப் தயாரிக்கப்படுகிறது. அந்த உண்மையை நாம் அறிந்துகொள்ளவே இல்லை.
நாம் சாப்பிடும் கத்திரிக்காய், தக்காளிக்குப் பின்னே சர்வதேச சதிவலை பின்னப்பட்டிருக்கிறது. இதனால் லாபம் அடையப்போகிற வணிகர்கள் தங்களின் சுயதேவைகளுக்கான வேட்டைக் களமாக இந்தியாவை வளைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை அறியாமல் நம் மக்கள் சமோசாவுக்குக் கெட்சப் நல்லது என ரசித்துச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி விகடன்

Infolinks

ShareThis