இயற்கை வழி வேளாண்மை பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசாரத்தை ஆரம்பித்தோம். ஒரு கரும்பு விவசாயி, 'உரம் வேண்டாம்...' என்று கூறி, அதற்குரிய பணத்தை பெற்று, 3,000 ரூபாய்க்கு சாணம் வாங்கி, நிலத்தில் கொட்டி, தண்ணீர் பாய்ச்சி பயிர் வளர்த்தார்.இதைக் கண்ட வேளாண்மை அதிகாரி, 'இந்த ஆண்டு நீ, விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க மாட்டாய்...' என்றார். ஆனால், அந்த விவசாயியோ, 70 டன் கரும்பை வெட்டினார். அதிலிருந்து, இயற்கை வேளாண்மை, வேகமாக மக்களிடையே பரவியது. சத்தியமங்கலத்தில் பரவி, பின், மாவட்டம் முழுவதும் பரவியது.
கடந்த, 2004ல், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மற்றும் அதன் கடற்கரையோர கிராமங்களில், கடல் நீர் புகுந்ததால், 'ஐம்பது ஆண்டுகளுக்கு, அந்த நிலத்தில் எதுவும் பயிரிட முடியாது...' என்றனர்.நாங்கள் அப்பகுதி கிராமங்களில், இயற்கை வழி வேளாண்மையை பயன்படுத்தினோம். தெற்கு பொய்கை நல்லூர் என்ற கிராமத்தில், 450 ஏக்கரில், இயற்கை விவசாய இடு பொருட்களை தூவி, அந்த ஆண்டே விளைச்சலை காண வைத்தோம்.அதிகாரத்தில் இருக்கிற விவசாய விஞ்ஞானிகள், உரக் கம்பெனிகளுக்கு, தரகு வேலை செய்கின்றனர். அவர்கள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ஒட்டு விதை போன்றவற்றை, எப்படி விற்பது என்பது பற்றி தான், சிந்திக்கின்றனர். இதனால் தான், நம் உணவு விஷமாகிப் போனது.
- காலம் சென்ற இயற்கை விவசாய விஞ்ஞானி, நம்மாழ்வார், ஒரு பேட்டியில்.
No comments:
Post a Comment