Monday, November 10, 2014

டிராஃபிக் ராமசாமி

டிராஃபிக் ராமசாமி

Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html


                 தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.


 

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.

இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.,

இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.

பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு ‘டிராஃபிக்’ என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். “போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்” என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி.

1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன.

எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் “வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்” என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார்.

இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார்.



ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் “எனக்கு பெயில் கொடுங்கள்” என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார்.

இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர்.

கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார்.

இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.



82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி.


அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது.

முழுமையாகப் பாருங்கள்.


- Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html

No comments:

Post a Comment

Infolinks

ShareThis