நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி
நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை.
விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.
நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.
ஆக்சிஜன் அமுதசுரபி
சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது. எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
No comments:
Post a Comment