Saturday, July 3, 2010

அரசுப்பள்ளியில் ஒரு கோடி ரூபாய் நூலகம்!

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அரசுப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்திருக்கிறார்கள்!” என்று நாம் கேள்விப்பட்ட செய்தியே ஆச்சரியமளித்தது. ‘அவ்வளவு பணத்தில் எவ்வளவோ செய்யலாமே, ஏன் குறிப்பாக நூலகம்?’ என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்குள் நுழைந்தோம்.

பேரூராட்சி நிர்வாகத்திலிருக்கும் ஊத்தங்கரையின் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு போர்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வூரின் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஊர்வளர்ச்சிக்கு அரசையே எதிர்பாராமல், நாமாகவே நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று மக்களை அழைக்கிறது அந்த போர்டு. வேறு சில தெருமுனைகளிலும் இதே போர்டை திரும்ப, திரும்ப பார்க்க முடிகிறது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி விசாலமான, தூய்மையான வளாகத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தூய்மையான பள்ளி என்று சான்றளிக்கப்பட்டு, யூனிசெஃப் அமைப்பின் தங்க மெடலை வென்றிருக்கிறது. 1957ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவருவதால் அக்கம், பக்கம் ஊர்களில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி மேனிலை வகுப்புகளில் ஒருவகுப்புக்கு தலா நூறு பேர் படிக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளியில், ஆசிரியர் பணிக்கு ஐந்து காலியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழி வகுப்புகளுக்கு இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து நடத்த வேண்டியிருக்கிறது. முன்னூறு மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பது என்பது கொஞ்சம் சோதனையான விஷயம்தான்.

ஆனாலும், சிறப்பான கற்பித்தலின் மூலமாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் எண்பத்தியெட்டு சதவிகிதமும், பண்ணிரண்டாம் வகுப்பில் எண்பத்தியிரண்டு சதவிகித தேர்ச்சியையும் எட்டியிருக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி.

இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இதுவரை நான்கு முறை நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார்கள். இங்கே படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியிலும், இன்னொரு மாணவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகிறார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே செயல்படும் இக்கழகம் மாவட்டத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறது. கற்பித்தலில் ஆசிரியர்களும், கற்றுக்கொள்வதில் மாணவர்களும் சிறப்பாக செயல்படுவதால் பெருமைக்கு மேல் பெருமையாக வந்து சேர்கிறது ஊத்தங்கரை அரசுப் பள்ளிக்கு.

விளையாட்டிலும் மாணவர்கள் கில்லி. மாநில அளவிலான சிறப்பான பங்கேற்பு இருக்கிறது. நான்கு பேர் தேசிய அளவில் மாநிலத்துக்காக கோ-கோ விளையாடுகிறார்கள். கோ-கோவில் தமிழக அணிக்கு கேப்டனாக இருக்கும் ரஞ்சித்குமார், இப்பள்ளியில் +1 படிக்கிறார். இந்திய அளவில் முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோ-கோவில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்திருப்பது இவரது தலைமையில்தான்.

இதுபோல ஏகப்பட்ட சிறப்புகள் அமைந்திருந்தாலும், சிறப்புக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் சுழல்வடிவ மின்னணு நூலகம் ஒன்றினை, ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியிலும் இவ்வளவு நவீன நூலகம் இருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளியின் பொன்விழாக் காலத்தின் போது ஒரு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது, இந்த மின்னணு நூலகம் அமைப்பது குறித்த யோசனைகள் வந்திருக்கிறது.

ஊத்தங்கரை பகுதியிலிருந்து ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ்-கள் உருவாவதில்லை என்ற குறை இப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது.

ஏராளமான நூல்களும், தங்குதடையில்லா இணையவசதியும் கொண்ட நவீன நூலகம் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய மாணவர்களை இங்கிருந்து தயார் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்துக்காக செலவினைப் பற்றி கவலைப்படாமல் இந்நூல் நிலையத்தை உருவாக்க முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டார்கள்.

அரசுப்பள்ளிகளை வசதிபடைத்தவர்கள் தத்தெடுத்துக் கொண்டு, வேண்டிய வசதிகளை செய்துத்தரலாம் என்று ஏற்கனவே அரசு சொல்லியிருக்கிறது. இவ்வகையில் ஊத்தங்கரைப் பள்ளியை தத்தெடுத்திருப்பவர், அங்கிருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் வே.சந்திரசேகர். அவரது தலைமையின் கீழ் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டது. சந்திரசேகரும் தன் பங்காக முப்பது லட்சரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஊத்தங்கரையில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் இவரது பங்கு நிச்சயமுண்டு என்பதை ஊர்க்காரர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதால் ஊரே சேர்ந்து, அவரவர் பங்களிப்பை மனமுவந்து தந்து இந்நூலகத்தை கட்டியிருக்கிறது.

கண்ணை கவரும் சுழல்வடிவ கட்டிடம். எட்டுலட்ச ரூபாய்க்கு பதிமூன்றாயிரம் புத்தகங்களை வாங்கி வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். முப்பது கணினிகள் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வசதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஊத்தங்கரை பொதுமக்களும் இந்நூலகத்தை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் இலவசமாகவே நூல்களை மட்டுமன்றி இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘UPSC - முயலகம்’ என்று தனியாக ஒரு அறையே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சிவில் சர்வீஸுக்கு தயார் செய்யும் மாணவர்கள், எந்த தொந்தரவுமின்றி இங்கே படிக்கலாம். நூலகத்தில் சிவில் சர்வீஸுக்கு தயார் செய்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் தனி அடுக்கில் அடுக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் அறை நீளமாக, வசதியாக இருக்கிறது.

பாடுபட்டு உருவாக்கிய நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா? அதற்காக பத்துலட்ச ரூபாய் மதிப்பில் வைப்புநிதி ஒன்றினையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நூலகரை பணிக்கு அமர்த்தி இந்நிதியிலிருந்தே சம்பளமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

“எங்களை உருவாக்கிய பள்ளிக்கு நாங்கள் தந்த பொன்விழாப் பரிசு இந்த நூலகம்!” என்கிறார் முன்னாள் மாணவரான வி.செல்வராஜ். பெங்களூர் தொழிலதிபரான இவர் மட்டுமே நூலகம் அமைக்க இருபது லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

தங்கள் ஊரில் இருந்து ஐ.ஏ.எஸ். / ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற கனவோடு ஊர்கூடி தேர் இழுக்கிறது. உன்னதமான முயற்சிகள் எதுவும் தோற்றதில்லை என்பது வரலாறு. கனவு நனவாக ஊத்தங்கரையை வாழ்த்துவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

1 comment:

  1. கனவு நனவாக ஊத்தங்கரை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!!!!

    ReplyDelete

Infolinks

ShareThis