- நிர்பேசிங் கொலை.
சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில்(MGR (Deemed) University) B.Tech 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங்(Jharkhand boy Nirbhay Kumar Singh) என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா(Satyabhama (Deemed) University) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள். இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர்.
“We get up to Rs 50,000 per student depending on the capitation fee he pays,” said an ex-student of Satyabhama who lives near his old institute.
மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.
பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற
தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.
கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.
இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல்
படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.
இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.
உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.
ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.
தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.
No comments:
Post a Comment