அன்புள்ள ஜெயமோகன்
கீழ்க்கண்ட செய்தியைப் படித்தீர்களா? ஏற்கனவே தமிழ் நாடு முழுவதும் உள்ள சிற்பங்களை, கோவில்களை, ஓவியங்களை, குடைவரைக் கோவில்களை, மண்டபங்களை, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சி இடங்களை எல்லாம் பாதுகாத்து உரிய மதிப்பு அளித்து வைக்க வக்கில்லாதவர்கள், அக்கறையில்லாதவர்கள் இந்த மலையைக் குறி வைத்துக் குடையத் திட்டம் போடும் நோக்கத்தை உணர யாருக்கும் அதிக நேரம் பிடிக்காது.
சிற்பக் கலை ம்யூசியம் வைக்கிறேன் பேர்வழி என்று மலையை உடைத்து கிரானட்டைக் கொள்ளையடிக்கப் போடும் ஒரு மறைமுகத் திட்டமாகவே தெரிகிறது. அப்படி ஒன்றும் இவர்கள் ஏதும் புதிதாக சிற்பக் கலைக்கு அருங்காட்சியகம் வைத்துத் தொலைக்க வேண்டாம். அழிவில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொன்மையான இடங்களை எல்லாம் அழிவில் இருந்து பாதுகாத்தாலே போதுமானது.
அப்படியே ஒரு அருங்காட்சியகம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஆனை மலையைக் குடைந்துதானா வைக்க வேண்டும்? அதே மதுரையில் உள்ள புது மண்டபத்தை உருப்படியாக பாதுகாத்து வைக்கத் துப்பில்லாதவர்கள்தானா இந்த மலையைக் குடைந்து புதிதாக சிற்பக் கலையை முன்னேற்றப் போகிறார்கள்? முதலில் கப்பல் விட அகலப் படுத்துகிறோம் என்று பவளப் பாறைகளை இடித்து நாசமாக்கக் கிளம்பினார்கள். அங்கு கடல் மண்ணை அள்ளக் காசு, இங்கு மலையைக் குடையப் போகிறோம் என்று சொல்லி கிரானைட் கற்களுக்காக பாறைகளை வெட்டி எடுக்க இப்படி ஒரு பம்மாத்து.
ஏற்கனவே குடுமியான் மலை, நார்த்தாமலை பகுதிகளில் உள்ள மலைகள் எல்லாமே வெடி வைத்து காலியாகிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் கடலும், நதியும், மலையும், காடுகளும் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. காடுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் ஒரு சின்ன கல், மண் தூசு கூட யாரையும் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? ஆயிரக்கணக்கான வருடப் பாரம்பரியம் உள்ள இந்த மலைகளை அழிக்கும் உரிமையை யார் இவர்களுக்குக் கொடுத்தது? இந்த மலைக் குகைகளில்தானே இவர்கள் இன்று பிழைப்புக்காகப் பயன் படுத்தப் படும் தமிழ் வளர்ந்தது? இந்தக் குகைகளும் கல்வெட்டுக்களும் இல்லாமல் போனால் செம்மொழி ஏது?
ஏற்கனவே தமிழ் நாட்டு நதிகளைச் சாக்கடைகளாக மாற்றியாயிற்று, காடுகளை மொட்டை அடித்தாகி விட்டது, கோவில் நிலங்கள் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து முடித்தாயிற்று, இப்பொழுது இது போன்ற மலைகளின் மீது கண் வைத்திருக்கிறார்கள். இவர்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டாம் இருக்கும் இடங்களை அழித்துக் கொள்ளையடிக்காமல் இருந்தாலே புண்ணியமாகப் போகும். இப்படி கடல், மலை, காடு என்று கொள்ளையடித்துக் கொண்டு போக ஒரு அளவேயில்லையா? இந்த மலை மீது ஒரு சிலுவையோ ஒரு தர்காவோ இருந்திருக்குமானால் இப்படி கை வைக்க கனவில் கூட துணிந்திருந்திருப்பார்களா? சமணர் குகைகளையும், நரசிங்கர் கோவிலையும் அழித்தால் கேள்வி கேட்க்க நாதியில்லை என்ற நினைப்புத்தானே?
அருகில் உள்ள அழகர் கோவிலில் உள்ள மண்டபங்களும், வாயில் தோரணங்களும் அசிங்கப் படுத்தப் பட்டு இடிந்து அழிந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுத்துக் கட்ட யாருக்கும் அக்கறையில்லை, மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது யாரும் உள்ளே போகாதீர்கள் என்று பலகை வைக்கிறார்கள் வெட்கம் கெட்ட பிறவிகள். கோவில் வருமானம் மட்டும் வேண்டும் மண்டபங்கள் இடிந்து போக வேண்டும் இவர்களுக்கு. அழகர் கோவிலை இவர்கள் வைத்திருக்கும் அழகினை இந்தப் படத்தில் பாருங்கள்http://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#
அருகில் உள்ள அழகர் கோவில் மண்டபங்களை இடிய விட்டு விட்டு ஆனை மலையில் புதிதாகக் குடையக் கிளம்பி விட்டார்கள். நாகமலை கீழக்குயில் குடியில் உள்ள சமணர் மலையில் இருக்கும் சிற்பங்களைப்http://picasaweb.google.com/strajan123/SAMANARHILLS# பேண வழியில்லாதவர்களுக்கு, சித்தன்னவாசலை சிறப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குப் புதிதாகச் சிற்பக் கூடம் என்ன வேண்டிக் கிடக்கிறது? முதலில் இடிந்து கிடக்கும் அழகர் கோவில் மண்டபங்களை நேராக்கட்டும், புது மண்டபத்தை மீட்டெடுக்கட்டும், பிற சமணர் குகைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கட்டும் அப்புறம் சிற்பக் கலைக்கு இடம் தேடலாம் இவர்கள்.
அன்புடன்
ராஜன்
அன்புள்ள ராஜன்
நான் தஞை தமிழ்பல்கலைக்கு ஒருமுறை சென்றிருந்தேன். ஏராளமான கட்டிடங்கள் பாழடைந்து கிடந்தன. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்ட்மே இல்லை. ஆனால் இன்னொரு இடத்தில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தது. புதிய கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டுமானம் இல்லையேல் ஊழல் இல்லை. எல்லா அரசு கட்டுமானஙளும் 60 சதம் வரை ஊழலால் அமைக்கப்படுகின்றன என்பதே நடைமுறை உண்மை.
மெரினாவிலும் கன்யாகுமரியிலும் குப்பை அள்ள ஆள் இல்லை. ஆனால் வருடம் தோறும் கோடிகளை கொட்டி கட்ட்டுமானங்களை எழுப்புகிறார்கள். நூலகங்கள் அழிகின்றன. ஏரிகள் அழிகின்றன. நதிகள் அழிகின்றன. ஆனால் சிமிட்டி பூதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக முதலில் படித்த, விஷயமறிந்த வட்டத்தில் இருந்தாவது எதிர்ப்பு கிளம்ப வேண்டும். அதுவும் இங்கே நடப்பதில்லை. ஒவ்வொரு கட்டுமானமும் தமிழையும் பண்பாடையும் வளர்க்கிறதென நம்பும் கூட்டமே நம்மி அதிகம்
குறைந்தபட்சம் நீதிமன்றம் செல்லவாவது ஓர் அமைப்பை உருவாக்கியாகவேண்டும் இங்கே. இல்லையேல் எதுவுமே எஞ்சாது என்பதே உண்மை நிலை
ஜெ
No comments:
Post a Comment