அவர் விளக்கிய விதத்தில் என் மனதில் ஆழப் பதிந்திருந்த அந்த விஷயம் அதைத் தேடிப் படிக்க வேண்டும் என உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. புத்தகத்தை பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தேன். இந்த ஆண்டு விடுமுறையில் இந்தியாவில் எனது நண்பனின் புத்தகத் தொகுப்பில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். ஆனால் திரும்பித் தர வாய்ப்பில்லாததாலும் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்ததாலும் படிக்க முடியாமலேயே இருந்தது.
அப்படி என்னதான் நடந்தது? அப்படியென்ன பிரமாதம் இதில்?
நம்மில் பலருக்கு காந்தஹார் விமானக் கடத்தலும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் ஞாபகமிருக்கும். நமது ஜஸ்வந்த் சிங் தீவிரவாதிகளை காந்தஹாரில் பினைக்கதிகளுக்குப் பதிலாக விட்டு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்து வந்துவந்தார்.
இதே போன்றதொரு நிலை 1976ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கும் வந்தது. டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஒரு ஏர் பிரான்ஸ் விமானம் பறக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கடத்தல்காரர்களின் வசமாகிறது.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பலநாட்டவர் இருந்தாலும், கடத்தியவர்களின் குறி அதில் பயணம் செய்த இஸ்ரேலியர்கள். பாப்புலர் ஃபிரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பாலஸ்தின் - எக்ஸ்டெர்னல் ஆப்பரேஷன் என்ற இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் குழு விமானத்தைக் கடத்துகிறது. ( இந்தப்பேரை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கோ?)
விமானத்தை லிபியாவிற்குக் கொண்டு ( இங்கு ஒரு பெண் பிரசவ வலி வந்ததுபோல நடிக்க கீழே இறக்கி விட்டு விடுகிறார்கள்) சென்று எரிபொருள் நிரப்பிக்கொண்டு இறுதியில் உகாண்டாவின் எண்டப்பி விமான நிலயத்திற்கு விமானம் கொண்டுவரப்படுகிறது.
அங்கிருந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறார்கள் கடத்தல்காரர்கள். பிரிட்டன், அமெரிக்கா, கென்யா, மற்றும் இஸ்ரேலின் சிறைகளில் இருக்கும் அவர்களது ஆட்களை விடுதலை செய்வதே இந்தக் கடத்தலின் நோக்கம்.
கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமலும், தனது குடிமக்களை பலிகொடாமலும் எப்படி உகாண்டாவின் எண்டப்பிக்குச் சென்று எதிரிகளை வீழ்த்தி மீண்டு வருகின்றனர் என்பதை மிக அருமையாக எடுத்திருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கும் இஸ்ரேலின் சாதனை மலைப்பாக இருக்கிறது. உகாண்டாவிற்குச் செல்லும் முன்னர் அவர்கள் கடக்க வேண்டிய தடைகள் என்னென்ன? இது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவதுபோல காண்பிக்கப்படும் புனைவுத் தடைகள் அல்ல..இஸ்ரேல் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்த தடைகள்.
முதலில் பூகோள ரீதியாக இஸ்ரேலைச் சுற்றிலும் எதிரி நாடுகள்,
உகாண்டாவை அடைய பல எதிரிநாடுகளின் வான் வெளியைப் பயன்படுத்தியாக வேண்டும். நியாயமாய்க் கேட்டால் யாரும் அனுமதிக்கப்போவதில்லை. மேலும் எப்போது பறக்கும் சுட்டு வீழ்த்தலாம் எனக் காத்துக்கொண்டிருப்பர்.
அப்போதிருந்த காலகட்டத்தில் (1976) நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் கூட இருக்கவில்லை. ஓரிரு இடங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்ல வேண்டும்.
விமானம் சிறைவைக்கப்பட்டுள்ளதோ கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்படும், இஸ்ரேலுக்கு எதிரான இடிஅமீனின் இஸ்லாமிய அரசு.
மேலும் பல ஆண்டுகளாக ஒரு இஸ்ரேலியர்கூட எண்டப்பிக்குப் போனதில்லை. அதாவது அவர்களைப் பற்றி உளவுத் தகவல்கள் மிகக் குறைவு. அதனால் அந்த விமான நிலையம் எப்படி இருக்கும், இத்தனை ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கும் என்பதையெல்லாம் இஸ்ரேலியர்களே கணக்கிட வேண்டும்.
இத்தனை பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டு, திட்டமிட்டு, எப்படி தனது ஆட்களை விடுவித்தது இஸ்ரேல் என்பதை சொல்கிறது இத் திரைப்படம்.
வழக்கமாக ஆக்ஷன் திரைப்படங்கள் புனைவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும். அல்லது ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும், பேர்ள் ஹார்பர் போல. இது உண்மையில் நடந்த கற்பனைக்கு எட்டாத ஒரு ஆப்பரேஷனை திரைவடிவம் ஆக்கியிருக்கின்றனர்.
இறுதியில் ஒரே ஒரு ராணுவ வீரனை மட்டும் பலிகொடுத்து அடைக்கப்பட்டிருந்த அனைவரையும் மீட்கின்றனர் இஸ்ரேலியர்.
எப்படி இஸ்ரேலியர்களுக்கு இது சாத்தியமனது?
ஒற்றுமை. நாட்டின் மானம் குறித்த அக்கறை.
தெளிவான கொள்கை கொண்ட அரசு.
முடிவெடுக்கத் தயங்காத ஆளும் கட்சி, அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எதிர்க்கட்சியினர்.
திறமையான ராணுவமும், உளவுப் பிரிவும். கிடைக்கும் துப்புகளை லாவகமாகப் பயன்படுத்தும் திறன்.
சமயோஜிதமாக சிந்தித்தல்.
இடி அமின் குறித்தும் இங்கே சொல்லியாக வேண்டும்..
இந்த கடத்தல் நாடகமே அவரின் முழு ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது. ஆனால் இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பனிடம் ( இஸ்ரேல் சார்பாய் பேச்சுவார்த்தை நடத்துபவர்) ” நான் எதுவும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன்” என பொய் சொல்கிறார். கடத்தல்காரர்கள் என் பேச்சையெல்லாம் கேட்க மாட்டார்கள் என்கிறார்.
இஸ்ரேலியர்களுக்கு கடத்தல்காரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படியும், பாலஸ்தீனர்களுடன் அமைதியாகப் போகும்படியும் உபதேசம் செய்கிறார்.
படம் முழுக்க அவரைக் காண்பிக்கும்போதெல்லாம் கலர் கலரான ராணுவ உடை, ஐரோப்பிய உடை என வித விதமாய் வந்து பிணைக்கைதிகளுக்கு ஆதரவாக பேசுவதுபோல பேசிச்செல்கிறார். பகுதி பகுதியாக ஆட்களையும் விடுதலை செய்கிறார்கள், இஸ்ரேலியர்களைத் தவிர.
இடிஅமீன், அவர் வாழ்ந்த காலத்தில் செய்திகளில் அடிபடுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருந்தார். உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் வித்தியாசமான உடைகளை, கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் அணிந்து செல்வார். எப்படியாவது செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருப்பது அவரது இயல்பு.
மிக சீரியசான படத்தில் இவரின் இடம் மிகப் பெரிய காமெடிப் பீசாக இருக்கிறது. தன்னைப்பற்றிய அபரிமிதமான பெருமிதமும், படாடோபமான பேச்சுமாக எல்லாம் என் தலைமையில்தான் நடக்கிறது எனபதைப் போன்ற தோற்றத்தையும் அவர் செய்யும் உதவிகளை அவரே பட்டியலிட பிணைக்கதிகள் கைதட்ட வேண்டும் என எதிர்பர்க்கிறார். சமகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நமது ஆட்சியாளர்கள் மூலமாய் நாம் அடிக்கடிப் பார்க்கிறோம்.
இஸ்ரேல் ராணுவம் எண்டபியில் சென்று விமானத்தை மீட்டு வருவது என முடிவானவுடன் எப்படி திட்டமிடுகிறார்கள், அதில் வரப்போகும் பிரச்சினைகள், எப்படி எதிர்கொள்வது. ஆப்பரேஷனின் மொத்த நேரம் எவ்வளவு? என்னென்ன செய்யப்போகிறோம்?
எப்படி எதிரிகளின் வான் எல்லைகளில் பறக்கும்போது கண்ணில படாமல் தப்பிப்பது, எரிபொருள் எப்படி போகும் வழியிலேயே நிரப்புவது என எல்லாம் பக்காவாக திட்டமிடுகின்றனர்.
இஸ்ரேலிய ராணுவக் கமேண்டோக்கள் உகாண்டாவின் ராணுவத்தினரின் சீருடையில் செல்கின்றனர்.
பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் மொசாத் உளவுத் தகவல்களைப் பெற்று கடத்தல்காரர்களைப் பற்றிய அங்க அடையாளங்கள், தலைமுடி, உடல்வாகு எல்லாவற்றையும் கிட்டத்தட்ட கணித்து அவர்களைப் பற்ற்றிய படங்களைத் தயாரித்து விடுகின்றனர்.
ஆப்ரேஷனில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கமேண்டோவுக்கும் கடத்தல்காரர்களின் பட்டியல் படத்துடன் அளிக்கப்பட்டு இறங்கிய உடன் கவனச் சிதைவின்றி கடத்தல்காரர்களைதேடி அழிக்கும்படி பயிற்சி அளிக்கப்படுகிறது.
திட்டத்தின் உச்சமாக எண்டபியில் பிணைகைதிகள் இருக்கும் இடம் போல ஒரு மாடல் உருவாக்கி ( பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் இஸ்ரேல் கம்பெணி கட்டியது, அதன் வரைபடம் அந்தக் கம்பெனி வைத்திருந்ததைப் பயன்படுத்தியது ராணுவம்) எப்படிப் போகப் போகிறோம், யார் யார் எங்கு, எப்படி தாக்குதல் ஆரம்பம், பிணைகைதிகளுக்கு நாம் இஸ்ரேலியர்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி குழப்பத்தை உடனே குறைத்து அவர்களை ராணுவத்தின் ஆபரேஷனுக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்வது, தகவல் தொடர்புகள், என ஒவ்வொன்றையும் மிக அழகாக திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்த ஆபரேஷனை திட்டமிடும்போது இடிஅமீன் மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார். எனவே அவரே திரும்பி வருவதுபோல செட்டப் செய்து எண்டபிக்குள் இஸ்ரேலிய கமேண்டோக்கள் நுழைகின்றனர்.
ஆப்பரேஷன் நடந்து எல்லா இஸ்ரேலியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிடுகின்றனர்.
இதில் எண்டப்பியில் பிணைக்கைதியாய் இருக்கும் ஒரு பிரிட்டிஷ் கிழவிக்கு உடல் நலமில்லாமல் போகிறது. எனவே எண்டப்பியிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த தாக்குதல் நடக்கும் முன்னர் வரை மருத்துவமனையில் இருந்த கிழவி, தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போய்விட்டார் என்று உகாண்டா அரசு சொல்லிவிட்டது. அதாவது கோபம் கொண்ட உகாண்டா அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த ஒரே ஒரு கிழவியைக் கொன்று ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.
கடத்தல்காரர்களைக் காண்பிப்பதிலும் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார் இயக்குனர். அவர்களின் இலக்கு பாலஸ்தீனர்களை விடுவிப்பதே. ஒரே ஒரு இடத்தில் ஒரு பெண்ணிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்வது தவிர இதர இடங்களில் பயணிகளை நல்லவிதமாகவே நடத்துகின்றனர்.
இதர நாட்டவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு இஸ்ரேலியர்களை மட்டும் ஒரு தனியறையில் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போது ஒருவர் கடத்தல்காரர்களை கேட்பார், ஒருவேளை உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டல் என்ன செய்வீர்கள் என? கெடு முடிந்ததும் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிப்போம் என்பார் எந்தவித சலனமுமின்றி.
விமானத்திலிருந்து பயணிகளும், கமாண்டோக்களும் மகிழ்ச்சியுடன் டெல் அவிவ் விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வருவதுடன் படம் நிறைவு பெறுகிறது.
பெரும்பான்மையான நேரம் படம் இருட்டிலேயே நடக்கிறது. படம் முடியும்போது டெல் அவிவ் விமான நிலையத்தில்விமானம் இறங்கும்போது காலை நேரமாக இருக்கும். எல்லாப் பிரச்சினைகளும் விடிந்துவிட்டதுபோல...
.
நம் நாட்டு அரசியல்வாதிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.
No comments:
Post a Comment