Friday, April 9, 2010

மனிதாபிமான வணிகம்

மனிதாபிமான வணிகம்

தங்கள் பழைய கீதை உரைகளைத் தற்போது வாசித்து வருகிறேன். சங்கடமான கேள்விகள் தோன்றுகின்றன. காலங்காலமாய்க் கேட்கப்பட்டவைதான், இருந்தும் விடைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இத்தனை ஞானம் பிறந்த மண்ணில் இப்படிச் சொல்லொண்ணா வறுமையும் இன்ன பிற துன்பங்களும். என்னுடன் பணியாற்றும், அடிக்கடி வேலை நிமித்தமாக இந்தியா செல்லும், அமெரிக்க நண்பர் கேட்டார், “சுனாமிப் பேரழிவின்போது ஏன் திருப்பதி போன்ற கோடிகள் குவிந்திருக்கும் கோவில்களிலிருந்து ஒரு பிடி அரிசி கொடுக்கக் கூட மனம் வரவில்லை? வைணவ, சங்கர மடங்கள் என்ன செய்தன? ஆனால் உதவப் போகும் ‘மதமாற்றி’ கிறித்துவர்களை மட்டும் ஏன் தூற்றுகிறீர்கள் ?” என்னிடம் எதற்கும் விடை சொல்லும் விஷய ஞானமும், முகமும் இல்லை.
baski
kbaski@gmail.com
அன்புள்ள பாஸ்கி,
உங்களை விட விஷயஞானம் இல்லாதவர்களால் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அல்லது ஐயங்கள் அவை என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அமெரிக்க நண்பர் அவரது மதமாற்றி நண்பர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை நம்பி சொல்கிறார். அப்படிச் சொன்னால் மட்டுமே அவரால் மேற்கொண்டு பணம் கொடுக்க முடியும்.
உங்கள் முதல் கேள்வி. இந்திய நிலத்தில் உலகின் மெய்ஞானம் முதிர்ந்த மூன்று மதங்கள் உருவாயின. இந்து, பௌத்த, சமண மதங்கள். பழங்குடித்தொகையாக இருந்த இந்த நிலத்தை பேரழிவுகள் இல்லாமல் ஒரு பண்பாட்டுவெளியாக அவை மாற்றின.
உலகில் பெரும்பண்பாடுகள் நிகழ்ந்த எந்த ஒருநாட்டிலாவது அவர்களின் அனைத்துப் பழங்குடிகளும், அத்தனை சிறு பண்பாடுகளும் அழியாமல் இன்றும் நீடிக்கின்றன என்றால் அது இந்தியாவில் மட்டுமே.
இதற்கு ‘மதசார்பற்ற’ நிபுணர்களின் சான்றிதழ் வேண்டும் என்றால் டி.டி.கோஸாம்பியின் ஆய்வுகளை வாசியுங்கள். எப்படி இந்த மாபெரும் சமரசவளர்ச்சி நிகழ்ந்தது என மிகமிக விரிவாக விளக்குகிறார் அந்த மார்க்ஸிய அறிஞர்.
அந்தப் பண்பாட்டு வளர்ச்சியினால்தான் இது குறைந்தது ஆயிரத்து ஐநூறு வருடங்களாக கல்வியும் கலைகளும் செல்வமும் செழித்த நிலமாக இருந்தது. உலகமே இந்த நிலத்தை தன் கனவுபூமியாக எண்ணியது. இங்கிருந்து சிந்தனை உலகமெங்கும் சென்றது.
அதன்பின்னர் ஒரு மாபெரும் வீழ்ச்சியின் காலகட்டம். இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நான் ஊகிக்கும் முக்கியமான காரணம் இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்த அதே விஷயமே மாறிவிட்ட காலகட்டத்தில் அரசியல் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பதுதான்.
அதாவது, தன்னை மையம் நோக்கிக் குவித்துக் கொள்ளாமல் இருப்பது இந்திய இயல்பாக இருந்தது. எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை அது அங்கீகரித்தது. பிரிந்து பிரிந்து வளர்வதே அதன் இயல்பு. இன்றுவரை அப்படித்தான். ஆகவே உறுதியான ஒற்றையமைப்புகள் இங்கே உருவாகவில்லை.
தன்னை உறுதியான ஒற்றையமைப்பாக திரட்டிக்கொண்டு மூர்க்கமான போர்வல்லமையுடன் வந்த தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியாவால் இயலவில்லை – அரசியல் ரீதியாக. முதலில் இஸ்லாமிய படையெடுப்புகள். பின்னர் பிரிட்டிஷ் ஆதிக்கம். பண்பாட்டு ரீதியான பன்மை இந்தியாவை அரசியல் ரீதியாகவும் பன்மையாகவே வைத்திருந்தது.
ஏறத்தாழ ஐநூறு வருடம் இந்திய நிலம் அரசியல் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியிருக்கிறது. இந்தியா எப்போதுமே முழுமையாக அடிமையாக இருந்ததில்லை. இந்திய நிலத்தில் எந்தக் கணத்திலும் மாபெரும் அரசியல் எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. ஆகவே ஒருபோதும் போர் ஓய்ந்ததில்லை.
அதைவிட தீவிரமாக பண்பாட்டு எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அதி உக்கிரமாக பண்பாட்டு அடக்குமுறை நிகழ்ந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் பண்பாட்டு மறுமலர்ச்சி நிகழ்ந்தது என்பது வரலாறு.
இஸ்லாமிய ஆட்சியின்போது இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்து உருவான நிலங்களை நோக்கி குடிபெயர்ந்த அறிஞர்களால்தான் வேதாந்தமும் பக்தியும் புத்துயிர்கொண்டன. சாயனர் போன்றவர்களால் வேதங்கள் முழுமையாக உரையுடன் மீட்கப்பட்டது விஜயநகர ஆட்சியிலேயே. மத்வர் பாஸ்கரர் போன்ற தத்துவமேதைகள் அப்போதுதான் உருவானார்கள்.
அதுதான் பிரிட்டிஷ் ஆட்சியிலும். இந்தியாவின் தனித்தன்மையும் கடந்தகாலச் சிறப்புகளும் முழுமையாக மறுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயணகுரு விவேகானந்தர் போன்றவர்களால் இந்து ஞானமரபு தன்னை மறு ஆக்கம் செய்துகொண்டு எழுந்தது.
ஓயாதபோர்கள் வழியாக உடைந்து சிதிலமாகிக்கிடந்த இந்திய நிலம் பிரிட்டிஷ் ஆட்சியால் முழுமையாகவே பொருளாதார ரீதியாகச் சுரண்டப்பட்டது. இந்தியாவிலிருந்த உபரிசெல்வம் முழுக்க உறிஞ்சி எடுக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷார் வந்த பிறகுதான் இன்று ஆப்ரிக்காவில் நிகழ்வதுபோல லட்சக்கணக்கில் மக்கள் இறந்த மாபெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தன. கோடிக்கணக்கில் மக்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டார்கள்.
1947ல் நாம் சுதந்திரம் அடைந்தபோது நம்மிடம் எஞ்சியது ஒரு பிச்சைக்கார தேசம். வெள்ளையர் செல்லும்போது பெரும் பஞ்சத்தில் நம்மை விட்டுச்சென்றார்கள். 1943 முதல் வட இந்தியாவில்  ஆரம்பித்த பஞ்சம் 1950களில்தான் கட்டுக்கு வந்தது. அத்துடன் அரசியல் நிலையில்லாமை. இந்தியாவை இரண்டாகப் பிளந்து மதமோதல்களின் நடுவே நம்மை விட்டுச்சென்றார்கள் வெள்ளையர்.
அனைத்துக்கும் மேலாக இந்தியாவை அவர்கள் ஒரேநாடாக விட்டுச்செல்லவில்லை, சம்ஸ்தானங்களுக்குச் சுதந்திரம் அளித்து, தனிநாடாகப் போகும் படி ஊக்குவித்து, ஒரு மாபெரும் அராஜகத்துக்கு வழிகோலிவிட்டுச் சென்றார்கள். இன்று பல ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்வது போல மாபெரும் உள்நாட்டு போர்களில் நாம் செத்து அழிவோம் என எதிர்பார்த்தார்கள்.
இந்தியா அந்த அராஜகங்களை அன்று எதிர்கொண்டமைக்கு ஒரே காரணம் அன்று இந்தியமக்கள் மானசீகமாக ஒன்றாக இருந்தார்கள் என்பதே. அந்த ஒற்றுமையை நிகழ்த்தியது இங்கே இருந்த பண்பாட்டு ஒற்றுமை. அது இந்து,சமண,பௌத்த மதங்களால் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு மக்களின் ஆழ்மனதில் நிலைநாட்டப்பட்டது. தனிந்தன்மைகளை தக்கவைத்துக்கொண்டே ஒன்றாக இருக்கும் தத்துவமும் மனநிலையும் அம்மதங்களின் கொடை
அந்த பஞ்சத்தில் இருந்து , அராஜகத்தில் இருந்து, இந்த அறுபது வருடத்தில் நாம் இன்றிருக்கும் இடத்துக்கு வந்ததே ஒரு சாதனைதான். சர்வாதிகாரமும் அடக்குமுறையும் இல்லாமல், ரத்த ஆறு ஓடாமல் இங்கே வந்திருக்கிறோம். இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும், ஆனால் இதுவரை வந்ததே சாதாரணமல்ல
இதற்கிணையான இன்னொரு சாதனையை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா என்ன? அமெரிக்கா அதன் பூர்வகுடிகளை வேருடன் பிடுங்கி வீசி இனநாசம் செய்து உருவானது. இயற்கையை அழித்து இன்றிருக்கும் நிலையை அது அடைய வறுமையும் அராஜகமும் நிறைந்த 100 வருடம் தேவையாகியது.  உலகைச் சுரண்டிக் குவித்த பிரிட்டன் அதன் வறுமையை கடைசிவரை ஒழிக்காமல் இன்றும் வைத்திருக்கிறது.
இந்தியாவை நாம் விமர்சிக்கலாம். ஆனால் நம்மை நோக்கி கைச்சுட்டிப்பேசும் தார்மீகமேதும் இவர்களுக்கு இல்லை.
கடைசியாக சுனாமி விவகாரம். ஒன்று, இந்த மதமாற்ற நிறுவனங்கள் இங்கே கொண்டு வரும் பணம் கடந்த காலங்களில் அடக்குமுறை மூலம் சுரண்டல் மூலம் மோசடிகள் மூலம் இங்கிருந்தே கொண்டுசென்றதன் சிறு பகுதி மட்டுமே. அவர்கள் தங்கள் மண்ணில் ‘நெற்றி வேர்வை சொட்டி’ உழைத்துச் சம்பாதித்தது அல்ல அது.
இரண்டு, அப்படி பணம் கொடுக்கும்போதுகூட மனிதாபிமானத்தால் கருணையால் கொடுக்க மனம் வரவில்லை. மதம்மாறவேண்டும் என்ற நிபந்தனையில்லாமல் பத்து பைசா அளிக்கக்கூட இவர்களின் கை நீளவில்லை. அப்படியானால் அது வணிகம். பணம் கொடுத்து மக்களை வாங்குகிறார்கள். இந்த முதலீடு நாளைக்கு ஒட்டுமொத்தமாக லாபம் தரும் என்று நினைக்கிறார்கள்.
அதை வணிகம் என்று சொல்லுங்கள். புனிதர் கிறிஸ்துவுக்காக இந்த பேரத்தை நிகழ்த்துவதாகச் சொல்லாதீர்கள். அந்த மகத்தான கருணையை இப்படிச் சிறுமைப்படுத்தாதீர்கள். மனிதாபிமானம், கருணை  என்ற சொற்களை தயவுசெய்து சொல்லும் தகுதி இந்த மதமாற்றிகளுக்கு இல்லை. அவர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் சமபந்தமில்லை.
உங்கள் தங்கையை பணம் கொடுத்து ஒருவன் பெண்டாளுகிறான் என்றால் அதை அவன் அளிக்கும் மனிதாபிமான நிதியுதவி என்றா கொள்வீர்கள்?
சுனாமி விவகாரத்தில் என்ன நடந்தது என தெரியுமா? இங்குள்ள கிறித்தவ அமைப்புகள் சுனாமி நிவாரணத்துக்காகச் செலவிட்ட தொகையைவிட பற்பல மடங்கு அதிகம் தொகை இந்து அமைப்புகளால் செலவிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தானமே பலகோடி ரூபாய் பணம் செலவிட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கணிசமானோர் கத்தோலிக்கர்கள். தமிழகத்தில் கத்தோலிக்க நிறுவனங்களின் சொத்துமதிப்பு மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள். ஐநூறு திருப்பதிக்குச் சமம். ஆனால் இந்து நிறுவனங்கள் கத்தோலிக்க அமைப்புகளை விட அதிக பணம் செலவிட்டன என்பதே உண்மை.
கிறித்துவ அமைப்புகள் தங்கள் மதமாற்ற நிறுவனங்கள் மூலம் இங்கே கொண்டு வந்த பணத்தில் பெரும்பகுதி எங்கே சென்றதென்றே தெரியவில்லை. நேர்மையான எந்த கிறித்தவரிடமும் கேட்டுப்பாருங்கள். அவற்றுக்கு முறையான கணக்குகள் கிடையாது. சிறுபான்மை உரிமை காரணமாக கணக்கு கேட்க முடியாது.
அவர்களுக்கு நடுவே நிகழும் மோதல்களால் கோடிக்கணக்கில் நிதி மோசடி நிகழ்ந்த தகவல்கள் நாளிதழ்களில் வந்தபடியே இருக்கின்றன. இதில் மீனவர்களை வெறுக்கும், ஒருநாள்கூட சுனாமி நிவாரணத்துக்கு வராத, சி.எஸ்.ஐ நிறுவனங்கள் கூட கோடிக்கணக்காக நிதி வசூல் செய்திருப்பது செய்திகளில் வெளிவந்தது!
உங்களுக்கு ஒரு தகவல். சுனாமி மீட்புக்கு மிக அதிகமாக நிதி செலவிட்டவர் மாதா அமிர்தானந்த மயி. அவரளவுக்கு அரசு கூட செலவிடவில்லை. கன்யாகுமரியில் கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்கள் மத அமைப்புகள் தங்களை கைவிட்டுவிட்டார்கள் என்று அவரிடம் வந்து மன்றாடிய நிகழ்ச்சி கூட நிகழ்ந்தது.
உண்மையில் சுனாமி ஒரு மதமாற்றச் சுனாமியை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.  மாதா அமிர்தானந்தமயி, சாயிபாபா, ரவிசங்கர் போன்ற இந்து அமைப்புகள், பல்வேறு தொழிலதிபர்கள், அமுல் போன்ற நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பால் அது நிகழவில்லை. இதுவே உண்மை. இந்த உண்மைக்கு எதிராகவே இப்போது அவதூறு கக்குகிறார்கள்.
உங்கள் அமெரிக்க நண்பரிடம் ஒன்று சொல்லுங்கள். கத்ரீனா புயலினால் பாதிக்கப்பட்ட கறுப்பர்களுக்கு நிவாரணம் அளிக்க அங்குள்ள அமைப்புகள் காட்டிய மெத்தனத்தில் நூறில் ஒரு பங்குகூட இங்கே நிகழவில்லை என. சுனாமி வீசிய மூன்று மணிநேரத்தில் மொத்த இந்தியாவே கண்ணீருடன் வந்து மீனவர்களுக்கு துணையாக நின்றது. உணவோ உடையோ நிவாரணமோ பதினைந்து நிமிடங்களேனும் தாமதிக்கவில்லை என களத்தில் நின்ற நான் சொல்கிறேன்.
ஒருமாதத்தில் சுனாமியின் தடயமே இல்லாமல் நம் கடற்கரைகள் மீண்டன. இன்று நம் கடற்கரையின் முகமே மாறிவிட்டது தெரியுமா? இன்று கட்டுமரம் என்ற ஊர்தியே காலாவதியாகிவிட்டது.  சாதாரண மீனவர்கள் இரண்டு மூன்று பைபர் படகுகள் வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக கடற்கரையை பாருங்கள் தெரியும். அவையெல்லாம் எந்த மதமாற்ற சக்திகளும் கொடுத்தவை அல்ல. இந்தியாவின் தொழில் நிறுவனங்களும் இந்து-பௌத்த-சமண மத நிறுவனங்களும் அளித்தவை.
உங்கள் நண்பரிடம் கேளுங்கள், ஏற்கனவே மதம் மாறிய கறுப்பு அமெரிக்கர்கள் புயலில் நடுத்தெருவில் கிடந்தால் கிறித்தவ மனிதாபிமானம் உதவாதா என்று. மதம் மாறாதவர்கள்பால் மட்டுமே அந்தப் பணம் பாயுமா என்று.
உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்து அமைப்புகள் எவற்றிடமும் பணம் இல்லை என்று. சபரிமலையோ பழனியோ காசியோ எல்லா பணமும் அரசுகளால் எடுக்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்படுகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தின் பணமும் பெரும்பகுதி அரசு கஜானாவுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. மிச்சபணத்தில் அது முந்நூறுக்கும் மேற்பட்ட கல்விநிறுவனங்களை நிகழ்த்துகிறது.
பணம் தேங்கிக்கிடக்கும் எந்த இந்து அமைப்பும் இன்று இல்லை. அமிர்தானந்தமயி சுனாமிக்காக தான் திரட்டிய பணத்தை தன்னிடம் தரவேண்டாம், நேரடியாகச் செலவிடுங்கள் என்றுதான் சொன்னார். அந்தப் பணத்தை ‘பிச்சை’ என்றுதான் அவர் குறிப்பிட்டார்.
இந்து,பௌத்த,சமண அமைப்புகள் தன் பணத்தை தன் மக்களுக்காகத்தான் செலவழிக்கின்றன. சுனாமிக்குச் செலவழிக்காமல் அமெரிக்கா வந்து கத்ரீனா புயலில் சிக்கிய கிறித்தவ கறுப்பர்களை மதம் மாற்றச் செலவழித்திருந்தால் உங்கள் நண்பர் என்ன சொல்வார்?
ஜெ
சுனாமி : மீட்சியின் இதிகாசம்
சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
மூதாதையர் குரல்
அள்ளிப் பதுக்கும் பண்பாடு
பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

No comments:

Post a Comment

Infolinks

ShareThis