மனித நேயத்துக்கு ஒரு ‘பாலம்’!
‘பாலம்’ கல்யாணசுந்தரம் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர். அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர். பின்னர் ஒரு ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இவர் விகடன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல்வேறு அலுவல்கள் காரணமாக இவர் விகடன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே பலமுறை வந்து போயிருக்கிறார். என்றாலும், எனக்கு இவரோடு பேசிப் பழகும் பாக்கியம் கிடைத்தது, சமீபத்திய இவரது வருகையின்போதுதான்!
இவரைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பே, எங்கள் சேர்மன் திரு. எஸ்.பாலசுப்ரமணியன் வாராந்திர ஆசிரியர் குழுக் கூட்டத்தில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிச் செய்தி வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்துமாறு விகடன் சேர்மனிடம் ஒருவர் வந்து பரிந்துரை செய்தாராம். “இப்படி சிபாரிசோடு வரும் யாரைப் பற்றியும் விகடன் எழுதாது. ஆனால், நீங்கள் சொல்கிற நபர் உண்மையிலேயே சிறந்த சமூக சேவகராக இருந்து, பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறவராக இருந்தால், விகடனே தேடிப் போய் அவரைப் பற்றிய விஷயங்களைச் சேகரித்து, நிச்சயம் அவரைப் பெருமைப்படுத்தி எழுதும். விகடனுக்கு யார், எவர் என்கிற பேதம் எதுவும் இல்லை” என்று சொல்லி, வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம்.
அதன்பின் பல ஆண்டுகள் கழிந்தன. இந்தச் சம்பவம் முற்றாக மறந்துபோன நிலை.
கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிக் கேள்விப்பட்டு, விகடன் ஒரு நிருபரை அனுப்பி, அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, அருமையான கட்டுரையை வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்தியது. அதன்பின் சில நாட்கள் கழித்து, மெலிந்த தேகமுடைய ஒருவர் விகடன் அலுவலகத்துக்கு வந்து, சேர்மனைச் சந்தித்து, கட்டுரை வெளியிட்டது குறித்துத் தன் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டாராம். “இப்போது எந்தச் சிபாரிசும் இல்லாமல்தானே அவரைப் பெருமைப்படுத்தினீர்கள்? அவருடைய சேவையில் தங்களுக்கு முழுத் திருப்திதானே?” என்று கேட்டுப் புன்னகைத்தாராம்.
அவர்தான் கல்யாணசுந்தரம். விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் முதன்முறையாக அப்போதுதான் கல்யாணசுந்தரத்தை நேரில் பார்க்கிறார்.
“என் மீதுள்ள அபிமானத்தால் என்னைப் பற்றி எழுதும்படி வேண்டுகோள் விடுத்து உங்களிடம் வந்து கேட்டுவிட்டார் என் சிநேகிதர். நீங்கள் சொல்லியனுப்பிய பதிலையும் சொன்னார். உங்கள் பதில்தான் என்னை இன்னும் தீவிரமாக சமூக சேவையில் ஈடுபடச் செய்தது. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகவே வந்தேன்” என்று கல்யாணசுந்தரம் சொன்ன பிறகுதான், சேர்மனுக்குப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்ததாம்.
விகடன் சேர்மன் பாலசுப்ரமணியனும், ‘பாலம்’ கல்யாணசுந்தரமும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்ச நஞ்சமல்ல.
சமீபத்தில் கல்யாண சுந்தரத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?” என்று கேட்டேன்.
புன்னகைத்தார். “ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!” என்றார்.
“உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்” என்றேன் நான். சிரித்தார்.
பின்பு பேச்சினூடே, “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்டார். “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்” என்றேன். “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது” என்று சிரித்தார். “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!” என்றேன். “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே” என்றவர், “நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!” என்றார்.
வேட்டி 100 ரூபாயும், சட்டை 150 ரூபாயும் இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும், நான் கொஞ்சம் உஷாராகக் குறைத்தே சொல்லுவோம் என்று, “வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்” என்றேன். “தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்” என்றார்.
“என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்றேன் வியப்போடு.
“உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!” என்று கிழிசல்களைக் காண்பித்தார் கல்யாணசுந்தரம்.
என் கண்களில் நீர் தளும்புவதைக் கட்டுப்படுத்திக்கொள்ள ரொம்பப் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.
‘பாலம்’ கல்யாணசுந்தரத்தைப் பற்றிய டாகுமெண்ட்டரி படம் ஒன்று தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம், இவரைப் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியாகவிருக்கிறதாம். அந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச் செலவும் யாருடையது என்று நினைக்கிறீர்கள்?
அவர் வேறு யாருமல்ல, பில்கேட்ஸ்!
http://www.clubstoday.com/view_article.asp?id=89
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=119326&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=
இந்த மாதிரி கூட மனுஷங்க இருக்கிறாங்களா? இன்னும் எல்லோர் காதிலேயும் விழும்படி சொன்னா நல்லா இருக்கும்
ReplyDelete