ஐபில் பிரபலங்களின் ஆல்பம். எவ்வளவு நாளைக்கு தான் டெண்டுல்கர், தோனி, யுவராஜ் என்று ஆல்பம் தயாரிப்பார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த ஆல்பம்...
1. லலித் மோதி
இந்த ஆட்டங்களின் மிகப்பெரிய சூத்ரதாரி லலித் மோதி. ஐபிஎல் என்ற ஐடியாவையே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்தது இவர்தான். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் இவர். கொச்சி அணியின் பங்குதாரர்கள் பற்றி ட்விட்டரில் உளறப் போக இவரே இப்போது இமாலயச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்த அனுபவசாலி. பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களும் இவருக்கு நண்பர்கள்.
2. சுனந்தா புஷ்கர்
சுனந்தா காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர், தற்போது துபாயில் வசிப்பவர். என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுமளவிற்கு இவரது பெயர் ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் அடிபட்டது. வேர்வை சிந்தாமல் "sweat equity" என்ற ஓசி பங்குகள் இவருக்கு கிடைத்தது. எப்படி என்று கேட்க கூடாது.
3.சசி தரூர்
தனது நண்பிக்கு இலவச பங்குகள் பெற்றுத் தருவது முதல் கொச்சி அணியையே உருவாக்குவதற்கான சூத்ரதாரி என்று இவர் இவ்விவகாரத்தில் அறியப்படுகிறார். இவ்விவகாரத்தில் இவருக்கு கொலை மிரட்டல் வேறு!! இவ்விவகாரத்திலிருந்து விடுபட தனது பதவியையே விலையாகக் கொடுத்து விட்டார் இவர். அப்போதும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே இவரது ட்விட்டர் சர்ச்சைகளால் சங்கடத்திலிருந்த காங்கிரஸிற்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. உடனே இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் ஒரு பொறுப்புடைய கட்சி என்று மார்தட்டிக் கொண்டது. External affairs minister ஆனால் internal affairsல் மாட்டிக்கொண்டார்.
4. சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே மத்திய அமைச்சர் ஷரத் பவாரின் மகள், சதானந்த் அவரது கணவர். இவர்கள் இருவருக்கும் ஐபிஎல்லின் சில அணிகளில் பங்கிருப்பதாகத் தகவல். அவர்களும் அதனை மறுத்தவண்ணம் இருக்கிறார்கள். இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், அவரது பின்னணி அப்படி. ஷரத் பவார் பிசிசிஐயில் உயர் பதவி வகித்தவர், இப்போது ஐசிசியின் தலைவர் பதவியை ஏற்கவிருப்பவர். எனவே இவரது மகளுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அவரது ஆதரவு வேறு காங்கிரஸிற்கு மத்தியிலும் மாநிலத்திலும் வேண்டியிருப்பதால், விவகாரம் முழுமையாக வெளிவருவது சற்றே சிரமம்தான். இவர்களுக்கு 10% பங்கு உண்டு என்று சொல்லுகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பார்களோ ?
5. ப்ரஃபுல் படேல், பூர்ணா படேல்
ப்ரஃபுல் படேலும் ஷரத் பவாரின் கட்சி சகா. இவரது மகள் பூர்ணா படேல், லலித் மோதிக்கு மிகவும் வேண்டியவர். லலித் மோதியின் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முன்னர் சில முக்கிய ஆவணங்களைக் கடத்திய மர்மப் பெண் என்ற விவகாரத்தில் இவருடைய பெயரும் அடிபடுகிறது. தவிர சசி தரூரிற்கு கொச்சி அணியின் ஏலம் பற்றிய விவரங்களை ரகசியமாக இவரது தந்தை மூலமாக மெயில் அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது, கொச்சி அணியை யாரும் எதிர்பாராத வகையில் ரந்தேவு ஸ்போர்ட்ஸ் ஏலம் பெற்றதற்கே இந்த மெயில்தான் காரணம் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. பூர்ணா பட்டேலும், சில ஐபிஎல் வீரர்களும் பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்ட்டட் ப்ளைட் புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானமே புறப்படுவது கேன்ஸல் செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு ப்ரஃபுல் படேலின் செல்வாக்கு பூர்ணாவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் எங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பது வேடிக்கை. மன்மோகன் சிங் பாவம் இவர்கள் என்ன என்ன தப்பு செய்தார்கள் என்று பிரணாப் முகர்ஜியிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறார்.
6. ஷரத் பவார்
ஐபிஎல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் ஷரத் பவார் எந்த பதவியையும் வகிக்கவில்லை. லலித் மோதிதான் ஒன்மேன் ஆர்மியாகச் செயல்பட்டு வந்துள்ளார். தவிர ஷரத் பவாரின் முழு ஆதரவும் லலித்தின் பக்கம் இருந்தது. இப்பிரச்சனைகள் வெடித்தவுடனேயே லலித்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் திடீரென்று எதிர்நிலை எடுத்துள்ளார். காரணம் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விவகாரத்தில் அடிபட்டதால் சசி தரூர் பதவியிழந்தார். லலித் மோதிக்கெதிராக பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து, தானும் சர்ச்சைக்குள் புக ஷரத் பவார் விரும்பியிருக்க மாட்டார். தவிர வெகு சமீபத்தில் ஐசிசி தலைவர் பதவியேற்கவிருக்கும் இந்நேரத்தில் இது தேவையிற்ற தலைவலி என்று எண்ணியிருக்கலாம்.
7. வருமானவரித்துறை
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஆயிரங்கள் நடமாடும் இடத்திலேயே ஊழலும், லஞ்ச லாவண்யங்களும் திளைத்திருக்கும். இங்கு ஆயிரக்கணக்கான கோடிகள் புரள்கின்றன. எனவே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் கேட்க வேண்டியதில்லை. இந்திய அரசு வழக்கம் போல மீடியாவில் வந்த பிறகு உஷார் ஆகிவிடும். இப்போது நடத்தப்படும் வருமானவரித்துறை ரெய்டுகளும் வெறும் கண் துடைப்பா அல்லது உண்மையான நடவடிக்கையா என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் முந்தைய லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிபிஐயும், வருமான வரித்துறையும் சிலரின் வாயைப் பூட்டுவதற்கான மிரட்டல் கருவியாகத்தான் பயன்பட்டது. இங்கும் அப்படி சிலரின் வாயை மூடுவதற்காகப் பயன்படுத்தப்படலாம். யார் மாட்டுகிறார்கள் என்பதை பொறுத்து தகவல் வெளியே வரும்.
8. நட்சத்திரங்கள்
ஐபில் அணிகள் சிலவற்றிற்கு சில பாலிவுட் நட்சத்திரங்கள் முதலாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி மற்றும் ஷாருக் கான் போன்றோர் அவர்கள். இவ்வளவு ஆயிரக்கணக்கான கோடிகள் கொடுத்து ஒரு அணியை விலைக்கு வாங்க அவர்களுக்குப் பணம் எங்கிருந்து கிடைத்தது? ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷில்பா ஷெட்டி போன்றோர்கள் அதிக பட்சமே வைத்துக் கொண்டாலும் 200 படங்களில் நடித்திருப்பர், ஷாருக் உட்பட (இந்த பட எண்ணிக்கை மிக அதிகம்). அப்படியிருக்க எவ்வாறு இவர்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது? இவர்கள் ஏதேனும் அரசியல்வாதிகளுக்கு பினாமியாக இருக்கலாமோ? அந்த பணத்திற்கெல்லாம் என்ன கணக்கு?அல்லது எல்லாம் அண்டர் கிரவுண்ட் தாதாக்களின் பணமா ? இவர்கள் எல்லோரும் மோடிக்கு சப்போர்ட் வேற செய்கிறார்கள் !
9. ஸ்ரீமான் பொதுஜனம்தான்
ஐபில் பண விவகாரம், இந்தியாவின் ஒருவருடத்திற்கான பட்ஜெட்டை விட அதிகம். இந்நிலையில் அதில் ஊழல் நடைபெறுவதிலும், அதில் அதிகாரம் பெறுவதில் நடக்கும் போட்டிகளிலும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இதில் முழுக்க முழுக்க முட்டாளாக்கப்படுவது, ஒரு போட்டியை ஒண்ணேகால் லட்சம் பெறுமான டிக்கெட் கொடுத்துப் பார்க்கும் ஸ்ரீமான் பொதுஜனம்தான். இதில் சச்சின் அடித்தார், தோனி கேட்ச் பிடித்தார் என்று டிவிட்டும் மக்களை என்ன சொல்லுவது ? பெண்கள் வேற ஐபில் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கொடுமை!. கிரிக்கெட் பொழுது போக்கு, விளையாட்டு என்ற நிலையெல்லாம் கடந்து, கோடிகளும், சூதுகளும் புரளும் ஒரு மிகப்பெரிய வர்த்தகம் என்ற நிலையை எய்திவிட்டது.
10. நித்தியானந்தா
ஐபில் விவகாரம் சூடு பிடித்ததால் இவர் கைது விஷயம் மீடியாவில் இரண்டாம் பக்கம் சென்றுவிட்டது. யார் கண்டது, இன்னும் தோண்டினால் நித்தியா கூட ஓர் அணிக்கு ஓனராக இருக்கலாம்.
No comments:
Post a Comment