Thursday, August 19, 2010

சுதந்திர தின தேநீர் விருந்து

 ஜூனியர் விகடன் கட்டுரை..

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம்.

தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் போடப்பட்ட மேஜைகளில் விருந்து நிகழ்ச்சி நடைபெற.. நடுநாயகமாக கவர்னரும், முதல்வரும் பங்கேற்பார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்.

தேநீர் விருந்து என்றதும் வெறும் டீ, காபி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிர்பானம், காஜர் அல்வா, சாக்லேட் பிரெளனி, ஜிலேபி, பிஸ்தா கேசரி போன்ற இனிப்பு வகைகளும், டால் கச்சோரி, வெங்காயம் மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய ச்சீஸ் க்ராய்சன்ட், புளிச் சட்னியுடன் கூடிய சமூசா, மின்ட் சட்னியுடன் கூடிய டோக்லா போன்ற கார வகைகளோடு வெண்ணிலா ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற அயிட்டங்கள் அனைத்தும் பரிமாறப்படும். இந்த அயிட்டங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யப்படும். 3000 பேருக்கு விருந்து ஆர்டர் செய்வார்கள்.

இந்த விருந்துக்கான செலவுகளை தமிழக அரசின் பொதுத்துறைதான் பொறுப்பேற்றுச் செய்கிறது. அழைப்பிதழ் அச்சடித்தல் தொடங்கி, விருந்து முடியும்வரையில் உள்ள எல்லா ஏற்பாடுகளும் இவர்கள் பொறுப்புதான். நடனக் கலைஞர்களுக்குப் பொன்னாடை, பரிசுப் பொருட்கள், மேடை அலங்காரம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துச் செலவு, ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களுக்குத் தினக்கூலி என்று விருந்துக்காக நிறைய செலவாகும்.

கடந்தாண்டுக்கான சுதந்திரம் மற்றும் குடியரசு தின விருந்துக்காக தலா 3000 அழைப்பிதழ்கள் அச்சாயின. அரசு அச்சகத்தில் அச்சானாலும் இதற்காக 34 ஆயிரத்து 503 ரூபாய் செலவானது. இவற்றை விநியோகம் செய்வதற்காக 10,836 ரூபாய் செலவாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூரில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மையம் செய்யும். கடந்தாண்டு இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 1,72,960 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போது தேநீர் விருந்துக்காக ஜி.ஆர்.டி.கிராண்ட் ஹோட்டலில் உணவுப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டது.

இப்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு 4,92,225 ரூபாயும், குடியரசு தினத்துக்கு 5,98,619 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

ஆண்டு வாரியாக செலவழிக்கப்பட்ட தொகையைப் பாருங்கள்..


ஆண்டு        -           சுதந்திர தினச் செலவு       -         குடியரசு தினச் செலவு
 
1994               -                     1,05,702                 -                      97,660
 
1995                -                    1,98,609                 -                    1,28,359
 
1996                -                    6,29,643                 -                    4,70,115
 
1997                -                    6,85,866                 -                    6,01,452
 
1998                -                    7,71,003                 -                    6,06,399
 
1999                -                    6,08,732                 -                    7,43,266
 
2000                -                    6,94,306                 -                    7,72,607

2001                -                    5,35,712                 -                    8,61,075

2002                -                    4,39,712                 -                    5,47,154
 
2003                -                    4,33,274                 -                    5,03,654
 
2004                -                                                   -                    1,87,563
 
2005                -                     4,22,648                -
 
2006                -                     3,52,441                -                    4,96,621
 
2007                -                     5,38,026                -                     5,74,887
 
2008                -                     6,86,005                -                     5,87,230
 
2009                -                     4,92,225                -                     5,98,919


No comments:

Post a Comment

Infolinks

ShareThis