மீட்டர் போடாமல் டாக்சி, ஆட்டோ
ஓட்டுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் மும்பைவாசிகள்
மும்பையின் அன்றாட போக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்குவது, ஆட்டோ மற்றும் வாடகை டாக்சிகள். அரசு போக்குவரத்துக் கழகம், புறநகர் ரயில் என, பல்வேறு போக்குவரத்து வசதி இருந்தாலும், மக்கள் தொகை அதிகம் உள்ளதால், ஆட்டோ, டாக்சிகளை பயணிகள் பெரிதும் நாடுகின்றனர். ஆனால், அவற்றின் டிரைவர்கள் கேட்கும் கட்டணம், பயணிகளை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலான ஆட்டோ, டாக்சிகளில் மீட்டர் போடுவது இல்லை. அப்படியே போட்டாலும், மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீட்டரில் முறைகேடு செய்வது, வாக்குவாதத்தில் ஈடுபடும் பயணிகளை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகள் சாதாரணமாக அரங்கேறுகின்றன.
இந்த முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மும்பையின் மூன்று முக்கிய விளம்பர நிறுவனங்கள், மிகப் பெரிய அளவிலான பிரசாரத்தை துவக்கியுள்ளன. "மீட்டர் ஜாம்' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த பிரசாரத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "ஆட்டோ, டாக்சிகளை புறக்கணித்து விட்டு, அரசு பஸ் மற்றும் ரயில்களில் பயணம் செய்யுங்கள்' என்பது தான், அந்த பிரசாரம். பெரும்பாலான பயணிகள், இந்த பிரசாரத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில், "கல்லூரிக்கு வரும்போது, டாக்சி, ஆட்டோகளை புறக்கணித்து விட்டு, வேறு வாகனங்களில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளோம். நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வோருக்கு, இது தான் சரியான பதிலடி. மிக குறுகிய தூரம் செல்ல வேண்டியிருந்தால், நடந்தே சென்று விடுவது என்றும் முடிவு செய்துள்ளோம்' என்றார்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் கூறியதாவது: டாக்சி, ஆட்டோகள் என்பது, பொதுமக்களுக்கு சேவை செய்பவை. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இந்த போக்குவரத்து முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பது இல்லை. செல்ல வேண்டிய தூரத்துக்கான கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கின்றனர். இதுபோல் பிரசாரம் செய்வதன் மூலம், மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் வழியிலேயே பதில் கூறும் வகையில் இந்த பிரசாரம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மும்பை டாக்சி யூனியன் சங்க தலைவர் குவத்ரோஸ் கூறுகையில், "ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் போராடுவதற்கும், தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிப்பதற்கும் உரிமை உள்ளது. நான் அதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் பயணிகள் தேவையை விட, மிக குறைந்த அளவே டாக்சிகள் உள்ளன' என்றார்.
"தமிழ்நாட்டுல அதுவும் குறிப்பா சென்னைல இவனுக கொட்டத்தை அடக்க எதாச்சும் உருப்படியா ஐடியா கொடுங்கப்பா. "
No comments:
Post a Comment