ஐ.ஐ.டி.,"சூப்பர்-30' சாதனை :
வழிகாட்டுகிறார் ஆனந்த்குமார்
பாட்னா : சாதாரண உடை. கூரை
வேய்ந்த வகுப்பறைகள். ஆடும் நிலையில் உள்ள மர பெஞ்சுகள். இதுதான்
பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்
"சூப்பர்-30' எனும் ராமானுஜன் கணித மையத்தின் தோற்றம்.
வெளித்தோற்றத்துக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
சிறிதும் தொடர்பில்லை. தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட
பாதை. இதுதான் "சூப்பர்-30' பயிற்சி நிறுவனத்தின் வெற்றிரகசியம்.
இப்பயிற்சி மையத்தின்
தலைவர் ஆனந்த்குமார். ஒரு போதும் ஐ.ஐ.டி.,யில் படித்ததில்லை. ஆனால் இவரிடம்
பயின்றவர்களில் ஏராளமானோர் ஐ.ஐ.டி., முடித்துள்ளனர். ஆனந்த்குமாருக்கு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த போது, அதற்குரிய கட்டணம்
செலுத்த அவரிடம் பணம் இல்லை. யாரும் உதவி செய்யவில்லை. இது அவரது மனதில்
ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஏழையான, திறமையான மாணவர்களின்
உயர்படிப்பு ஒரு போதும் தடைபட்டு விடக்கூடாது என்று கருதினார். அதன்
விளைவே "சூப்பர்-30'. ஐ.ஐ.டி.,யில் பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ.,
எழுதித்தான் சேர முடியும். இந்தியாவில் மிக கடினமான நுழைவுத் தேர்வு இது.
இந்த தேர்வில் ஏழை மற்றும் திறமைமிக்க 30 மாணவர்களை தேர்வு செய்து
ஐ.ஐ.டி.க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆனந்த் குமார் விரும்பினார்.
2002ல் இம்மையத்தை அவர் துவக்கினார். 2003 தேர்வில் 30 பேரில் 18 பேரும்,
2004ல் 22 பேரும், 2005ல் 26 பேரும், 2007ல் 28 பேரும் தேர்வானார்கள்.
2008, 2009 மற்றும் 2010 ஆகிய மூன்று ஆண்டிலும் தொடர்ச்சியாக 30 பேரும்
தேர்வாகி "ஹாட்ரிக்' சாதனை புரிந்தார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளில்
சிறப்புப் பயிற்சி பெற்ற 240 பேரில் 184 பேர் ஐ.ஐ.டி.,யில்
இடம்பெற்றிருக்கின்றனர். இவரது மையத்தில் சேர்வதற்காக ஆண்டுதோறும்
பீகாரிலிருந்து 5 ஆயிரம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஏழை
மற்றும் நான்காம் தர அரசுப்பணியில் உள்ளவர்களின் பிள்ளைகளில் 200 பேர்
தேர்வு செய்கிறார். அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கிறார். அதில்
நன்கு தேர்ச்சி அடையும் 30 பேரை இறுதியில் தேர்வு செய்கிறார். ஐ.ஐ.டி.,
பயிற்சிக்கு 40 ஆயிரம் முதல் சில லட்சங்களை வரை செலவாகும் இக்காலத்தில்,
இவர் ஏழு மாதங்களுக்கு 4 ஆயிரம் மட்டுமே கட்டணமாகப் பெற்று பயிற்சி
அளிக்கிறார். அதே சமயத்தில் கட்டணம் இங்கு பிரச்னையாக இருந்ததே இல்லை. அதை
கட்டமுடியாதவர்களுக்குக் கூட இங்கு பயிற்சி இலவசம். இதில் ஆனந்த்குமார்
தனக்கு என ஊதியம் பெற்றுக் கொள்வதில்லை.
பல்லாயிரக்கணக்கான கோடி
ரூபாயை கொட்டினாலும் ஏழை மாணவர்களின் கல்வியில் எதிர்பார்க்கும் இலக்கை
எப்போதும் எட்ட முடியாத மத்திய மாநில அரசுகள், திட்டங்களை எப்படி
செயல்படுத்தினால் இலக்கை அடைய முடியும் என்று ஆனந்த குமார் சில
மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விளக்கினார்.
சூப்பர் 30 நிறுவனம் "டைம்' இதழால் 2010ம் ஆண்டின் தலைசிறந்த ஆசிய
அம்சங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முதல் 30
பேருக்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளவும்
திட்டம் உள்ளது. ஐ.ஐ.டி.,யில் பிள்ளைகளைச் சேர்ப்பதைக் கனவாகக்
கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இன்னும் ஆயிரம் ஆனந்த்குமார்கள்
தேவைப்படுகின்றனர். வருவார்களா?
No comments:
Post a Comment