உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி சில வாரம் முன்பு வெளியானது. உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படும் மார்டினா நவரத்திலோவா மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அது. அதனை நவரத்திலோவாவும் ஒரு இணையதள செய்திப் பத்திரிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
" I Cried " என்று நவரத்திலோவா கூறியுள்ளதாகத் தலைப்பிட்டு அச்செய்தி நிறுவனம் இதனை வெளியுட்டுள்ளது. தற்போது 53 வயதாகும் நவரத்திலோவாவின் பயாப்ஸி ரிப்போர்ட் அவரது இடது புற மார்பகத்தில் புற்று நோயை உறுதி செய்துள்ளது.
வெட்னஸ்டே ரிப்போர்ட் என்ற செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இப்புற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இம்மே மாதம் முதல் ஆறு வார ரேடியேஷன் தெரபி சிகிச்சையை நவரத்திலோவா மேற்கொள்ளவுள்ளார். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சீக்கிரம் குணமடையும் என்று நம்பலாம்.
ஷெல்லி ஹ்வாங் என்ற சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்க்கையில், ஆண்டு தோறும் சுமார் எழுபதாயிரம் அமெரிக்கப் பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஐந்தில் ஒருபங்கு பேருக்கு புதிதாகக் கண்டறிபட்டிருக்கும் ஒருவகைப் புற்றுநோய் தாக்க்குவதாகவும் தெரிவிக்கிறார்.
ஒன்பது முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மார்டினா, இப்பொழுதும் தொடர்ந்து டென்னிஸ் மற்றும் ஐஸ் ஹாக்கி விளையாடி வருகிறார். செக் குடியரசைச் சேர்ந்த மார்ட்டினா நவரத்திலோவா 1981 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். 18 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் பட்டங்களை வென்றுள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் போன மாதம் வந்த கட்டுரை உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதன் தமிழாக்கம் கீழே...
மார்ட்டினாவுக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாக கடந்த பிஃப்ரவரியில் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றி மார்ட்டினா தெரிவிக்கையில்," எனக்கு இது தனிப்பட்ட முறையிலான செப்டெம்பர் 11 போன்றதாகும். எனது பின்புறத்தில் பலமாகத் தாக்கப்பட்டது போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்". அதிர்ஷ்டவசமாக இவரது மார்பகத் திசுக்களை இன்னும் புற்றுநோய் தாக்கவில்லை. அது மேலும் பரவாமல் தடுக்கவும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும், இம்மேமாதம் துவங்கி ஆறு வார காலத்திற்கான ரேடியோக்ராம் சிகிச்சையும் மேற்கொள்ளவுள்ளார். கடந்த வாரம் வரை இச்செய்தியை உலகிடமிருந்து மறைத்தே வைத்திருந்த மார்ட்டினா, கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேரடி ஒளிபரப்பு பேட்டியில் இதனை வெளிப்படுத்தினார். அதுவும் மற்ற பெண்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும்படியும், தன்னைப் போல் யாரும் மெத்தனமாக இருந்து விட வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை நேரடி ஒளிபரப்பில் பகிரங்கப்படுத்துவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் லியாண்டரை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், ஆனால் இது குறித்து எதுவும் அவரிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் மார்ட்டினாவின் குரலில் ஒலித்த மாற்றத்தால் அதனை உணர்ந்த லியாண்டர், என்னவென்று வினவியபோது, பிறகு அழைக்கிறேனென்று தொலைபேசியிணைப்பைத் துண்டித்துவிட்டார் மார்ட்டினா. அப்போதே ஏதோ விபரீதம் என்று நான் உணர்ந்து விட்டேன் என்று லியாண்டர் கூறினார்.
லியாண்டருக்கு இச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது. மார்ட்டினாவிடம் தொலைபேசியில், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று வினவியதற்கு, மார்டினாவின் பதில், "இப்போது நீ என்னுடைய சாம்பியனாக இரு, தினமும் என்னை இரவு 9 மணிக்கு அழைப்பவனாக இரு" என்பதே. இவ்வார்த்தைகள் லியாண்டரின் இதயத்தைத் தைத்தன, மேலும் லியாண்டரை அவருடைய 2003 ஆம் ஆண்டின் நினைவுகளுக்கு இட்டுச் சென்றன. அப்போது வியாதியுடன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த லியாண்டருக்குப் பக்கத் துணையாக இருந்தவர் மார்ட்டினா. "வாழ்க்கையாகட்டும் அல்லது டென்னிஸ் கோர்ட்டாகட்டும், மார்ட்டினாவின் துணையிருந்த போது, மேலும் முன்னேறக் கூடும் என்ற நம்பிக்கை இருந்தது" என லியாண்டர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு இரவும் 9 மணிக்கு மார்ட்டினா தொலைபேசி மூலம் அழைத்து நலம் விசாரிப்பார், அதற்கு முன்னர் 8.45 ற்கே எனது மருத்துவரைத் தொடர்பு கொண்டு, அன்றைய என்னுடைய உடல்நிலை முன்னேற்றம் பற்றிய அறிக்கை முழுவதையும் கேட்டறிந்திருப்பார். இப்போது தினமும் அவரை ஒன்பது மணிக்கு அழைக்க வேண்டியது என்னுடைய முறை!! நாங்கள் எப்போதுமே தொலைபேசி தொடர்பிலிருப்போம். வாழ்க்கை என்பது ஓரு முழுமையான சக்கரம் போன்றது.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.
No comments:
Post a Comment