Thursday, June 3, 2010

நீ செத்துப்போ தாத்தா!


அண்மைக்காலமாய் தமிழ் சினிமா குழந்தைகளைக் குறிவைக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கவும் அவை தயங்குவதில்லை

‘நீ செத்துப்போ தாத்தா!’

உங்கள் வீட்டில் உள்ள ஐந்து வயதுக் குழந்தை உங்களையோ உங்கள் அப்பாவையோ பார்த்து இப்படிச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு ஐந்து வயதுக் குழந்தை இப்படிப் பேசுமா என எதிர்க் கேள்வி கேட்காதீர்கள். கேட்கும். அது சினிமாவில் வருகிற குழந்தையாக இருந்தால்.

அண்மையில் வெளியான ரெட்டச் சுழி என்ற திரைப்படத்தில் ஒரு ஐந்து வயது குழந்தைதன் தாத்தாவைப் பார்த்துப் பேசுகிற வசனம் இது. சரி, தாத்தா ஏன் செத்துப் போக வேண்டும்? நாட்டின் சுதந்திரத்திற்காகவா? மொழி உரிமை கோரியா? லஞ்சத்தை எதிர்த்துப் போராடியா?

இல்லை இதற்காகவெல்லாம் இல்லை. உறவுக்கார சிறுசுகளின் காதலை ஏற்க மறுக்கிறார் அவர். அதனால் அவர் சாக வேண்டும்.

காதல் என்பது ஏதோ வளர்ந்தவர்களின் விஷயம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் தமிழ் சினிமாவின் பக்கம் தலைவைத்துப் படுக்காத ஓர் பழங்கால ஆசாமி. தமிழ் சினிமா காதலை குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் ஒரு பொருளாகப் பலகாலமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஜோடிகள் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து காதல் ரசம் சொட்ட்ச் சொட்டப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது சில்மிஷம் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மரத்திற்குப் பின்னால் இருந்தோ, கிணற்றடியிலோ அதைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இப்படி ஒரு காட்சியை அந்த காலத்து முந்தானை முடிச்சிலிருந்து எத்தனை படங்களில் பார்த்தாயிற்று?

சமீபத்தில் வந்த ‘குட்டி’ திரைப்படத்தில் கூட கதாநாயகன், கதாநாயகியை காதலிக்க நிறைய குட்டீஸ் ஐடியா தருகிறார்கள். உதவுகிறார்கள்.

மணிரத்தினம் குழந்தைகள் அதிகம் விரும்பிப் பார்த்த ’அஞ்சலி’யில் மொட்டைமாடி மொட்டைமாடி என்று ஒரு பாடல் காட்சியே வைத்திருந்தார்.

குழந்தைகள் காதலுக்கு உதவுவது இருக்கட்டும். குழந்தைகளே காதலிப்பது என்று விபரீதக் கட்டத்துக்கும் தமிழ் சினிமா என்றோ இடம்பெயர்ந்து விட்டது.

பெரும் வெற்றியடைந்த பருத்திவீரன் படத்தில் ஒரு பெண் குழந்தை கிணற்றில் விழுந்து விடுகிறாள். இன்னொரு ஆண் குழந்தை குதித்து காப்பாற்றுகிறான். காப்பாற்றியவனே தன் கணவன் என்று பெண்குழந்தை மனதுக்குள் அவனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகிறாள்.

ரேணிகுண்டா என்றொரு படம். ஹீரோவுக்கு பதினேழு, பதினெட்டு வயது இருக்கலாம். பதிமூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையை காதலிக்கிறான். இவர்கள் காதலை சேர்த்து வைப்பது இன்னொரு பதிமூன்று வயதுள்ள குழந்தை.

‘காதல்’ என்பதை கதாநாயக/நாயகி சாகஸமாக தமிழ் சினிமா முன்னிறுத்துவது கூட பெரிய பிரச்சினையில்லை. ஆனால் குழந்தைப் பருவக் காதலையும் சாகஸமாக சித்தரிக்கும்போது, படம் பார்க்கும் குழந்தைகளுக்குள் ஏற்படும் மனோபாவ மாற்றம் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைமுறையை தவறான முறையில் திசைதிருப்பக் கூடும் அல்லவா?

குழந்தைகள் முழு சினிமாவையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ, அதில் இடம் பெறும் காமெடிக் காட்சிகளை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்கள்தான் இப்போது வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் காமெடிச் சானல்களின் பலமே.

ஆனால் நம் சினிமாவின் காமெடிக் காட்சிகளும் குழந்தைகளைப் பதம் பார்ப்பதாகவே அமைந்திருக்கின்றன. குழந்தை ஒன்று வடிவேலுவை ஏமாற்றி, பிளாக் மெயில் செய்து தனக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கிக் கொள்வதாக முருகா படத்தில் ஒரு காட்சி. இன்னொரு படத்தில் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தை ஒன்று காட்டிக் கொடுத்ததற்காக வடிவேலுவைப் போட்டு மொத்தும் காட்சியும் உண்டு.

கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பசங்க’ கூட குழந்தைகள் பெரிய மனுஷத்தனமாய் நடந்து கொள்வதைப் போன்ற காட்சி அமைப்பைக் கொண்டதுதானே?

குழந்தைகள் பெரிய்வர்களைப் போல நடந்து கொள்வதாக சித்தரிக்கும் காட்சிகள்-குறிப்பாக காதலுக்காகச் செத்துப் போகச் சொல்வது (emotional blackmail), காதலை ’வேடிக்கை’ பார்ப்பவர்களாக (Voyerism) தந்திரமாக ஏமாற்றுபவர்களாகக் காட்டுவது(con), பெரியவர்களை அடிப்பதாகக் காட்டுவது (violence) - படம் பார்க்கும் குழந்தைகள் மனதை எந்த அளவு பாதிக்கும்?

“மனித மூளையின் வேலை என்ன? பார்ப்பதை கேட்பதை சம்பவங்களை அப்படியே தன்னுள் பதிய வைத்துக் கொள்வது. தொடர்ந்து சினிமா, டிவியில் காதல், வன்முறை காட்சிகளை பார்க்கும் குழந்தைகள் இதுதான் நிஜம் யதார்த்தம் என்று நம்ப தொடங்கிவிடும். பிற்காலத்தில் காதல், வன்முறை உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேறு எதுவும் உருப்படியாக செய்யாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் குழந்தைகள் மன நல மருத்துவர் டாக்டர் அர்ஜூன்.

சினிமா விஷயம் தெரிந்ததுதானே? அதனால்தான் நாங்கள் எங்கள் வீட்டுக் குழந்தைகளை சினிமாவிற்குக் கூட்டிச் செல்வதில்லை. டி.வி.தான். அதிலும் குழந்தைகளுக்கான சானல்தான் பார்க்க அனுமதிக்கிறோம் என்று சில பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதும் உண்டு.

ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவிற்குச் சற்றும் சளைத்தது அல்ல தொலைக்காட்சி. குழந்தைகளுக்கென்றே இருக்கும் தனிசானல்களில் கூட என்ன காட்டப்படுகின்றன. அதீத சக்தி கொண்ட சூப்பர் மேன் அல்லது ஸ்பைடர் மேன், அவர்களிடத்தில் அதிக வலிமை கொண்ட லேசர் துப்பாக்கிகள், பாய்ந்து பாய்ந்து தாக்கும் காட்சிகள், பறந்து பறந்து மோதும் சண்டைகள் இப்படி அமானுஷ்யமான காட்சிகள் ஃபான்டசி என்ற பெயரில் பரிமாறப்படுகின்றன.

“குழந்தைகளுக்கான டிவி சேனல்களை அதிகம் பார்த்தால் எந்த தவறும் இல்லை என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதுவும் தவறு” என்கிறார் டாக்டர் அர்ஜூன்.

நாம் சினிமாவிற்கோ தொலைக்காட்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. அவை சக்தி வாய்ந்த ஊடகம் என்பதிலும் சந்தேகமில்லை. அண்மையில் பல இளைஞர்களின் திறமைகள் மலர அவை கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதே சமயம்,அது நம்முடைய குழந்தைகள் –நாட்டின் நாளைய குடிமக்கள்- ஆரோக்கியமான மன நலத்துடன் வளர்வதற்கு அவை உதவுவதில்லை என்பது நம் ஆதங்கம்.

இந்த விஷயத்தில் சினிமா தொலைக்காட்சி மீது ஆதங்கப்பட்டுக் கொள்வதைவிட குழந்தைகளின் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குறைப்பட்டுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களின் ஆண்டு விழாவில் நடனக்காட்சி என்றால் “மன்னவன் வந்தானடி” அல்லது மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன?” ரக ‘பரத நாட்டியம்’தான். இப்போது அது ”அத்தாடி அம்மாடி” அல்லது ”மன்மத ராசா” ரக குத்துப்பாட்டுதான். ஐந்து ஆறு வயதுச் சிறுமிகள் பள்ளிக்கூட அரங்குகளில் “சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்” என்று நாட்டியம் ஆடுவதைப் பார்க்கும் போது அவர்கள் மீது பரிதாபமும், என்ன ஆயிற்று இந்தப் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்ற சினமும் ஒரு சேர எழுகிறது.

கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக தொலைக்காட்சிகளில் வெற்றி நடை போடும் நடனப் போட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்த பின், இது போன்ற குத்துப்பாட்டு நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகளைத் தயார் செய்வதி பெற்றோர்களிடையே பெரும் போட்டியே நிகழ்கிறது.

பெற்றோர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே லட்சியம்தான். தங்கள் குழந்தைகள் அவையத்து முந்தியிருக்க வேண்டும். சிறிய வயதிலேயே புகழ் பெற்றவர்களாக, சாதனையாளர்களாக ஆகி விட வேண்டும். அதற்காக் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். ஐந்து வயதில் குழந்தையைக் கார் ஓட்டப் பழக்க வேண்டுமா, ரெடி. எட்டு வயதில் மராத்தான் ஓட வேண்டுமா, ம்,தயார். 10 வயதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? இந்தா பிடி கத்தி! பத்திரிகை.டி.வி.யில் பேட்டி வரும் என்றால் 10 வயதில் சாமியாராகக் கூடத் தயார்.

இது குழந்தைகள் இடத்தில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என அவர்கள் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. இது சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையை அல்ல வெறியை அவர்களுக்குள் விதைக்கும். அதை குறுக்கு வழியில் அடைந்துவிட முடியுமா என்று யோசிக்கும். எப்போதும் விளம்பர வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என மனம் தவிக்கும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம், என்ன சமரசம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை சிறு வயதிலே ஏற்படுத்தும். ஏதோ ஒரு காரணத்தால் தனது எண்ணம் நிறைவேறாமல் தடைப்படுமானால் மன முறிவு ஏற்படும். அந்த மனமுறிவு எப்படி வெளிப்படும் என ஊகிப்பது கடினம். ஆனால் அது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். தாழ்வு மனப்பான்மை (inferiority complex) அல்லது தன்னைப் பற்றிய மிகையான பிம்பததை நம்புபவராக (megalomaniac), விரக்தியுற்றவராக (frustrated), எதிலும் நம்பிக்கையற்ற எதிர்மறைச் சிந்தனையாளராக (cynic), வன்முறையில் நம்பிக்கை வைப்பவராக , சுயபரிதாபம் (self pity) கொண்டவராக ஏதோ ஒரு வழியில் அது வெளிப்படும்.

10 வயதுச் சிறுவனாக இருந்த போது வெளிப்பட்ட ஹிட்லரின் ஓவியத் திறமையைக் கண்டு பெருமிதம் கொண்ட அவனது தந்தை அவரை உற்சாகப்படுத்த மிகையான வார்த்தைகளைப் பொழிந்து அவரை வளர்த்தார்.பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த 16 வயது ஹிட்லருக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.ஆனால் அவரது தந்தை அவரை ஓவியம் படிக்க அனுப்பி வைத்தார், அங்கு ஹிட்லரால் சோபிக்க முடியவில்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முறிந்த மனத்தோடு வெளியேறினார் ஹிட்லர். அவரது மனமுறிவுக்கு உலகம் கொடுத்த விலை என்ன என்பதை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அண்மைக்காலமாகத் தமிழ் சினிமா குழந்தைகளைக் குறிவைக்கத் துவங்கி இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. (ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு) இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளின் விடுமுறைக் காலமான கோடையில் இந்தப் படங்கள் வெளி வந்துள்ளன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதின் ஆரம்ப அடையாளங்கள் இவை.

ஆனால் இவை குழந்தைக்களுக்கான படங்கள்தானா? இல்லை என்பது அவற்றின் கதை அம்சங்களையும் காட்சி அமைப்புக்களையும் பார்க்கும் போது தெரிகிறது.இவை பெரியவர்களையும் கவரும் நோக்கம் கொண்ட வணிக ரீதியான படங்கள்தான்.

தமிழில் இது வரை 4000 படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கணக்குச் சொல்கிறார்கள். இவற்றில் எத்தனை படங்கள் குழந்தைக்களுக்கான படங்கள்? நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஒரு ஏழு எட்டுப் படங்களுக்கு மேல் நீங்கள் விரல் விட முடியாது. ஏன் தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் தயாரிக்கப்படுவதில்லை?

“தமிழ் சினிமாவில் யதார்த்தம் கையை விட்டு போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படம் வராமல் இருப்பதற்கு பார்வையாளர்கள்தான் காரணம். எந்தமாதிரியான சினிமா வரவேண்டும் என்பதை பார்வையாளர்கள்தான் வரையறுக்க வேண்டும்” என்று ‘பசங்க’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசினார் கமல்ஹாசன்.

பார்வையாளர்கள்தான் காரணம் என்பது முழு உண்மையல்ல. எண்பதுகளில் ஏன் படங்களில் ஆபாசக் காட்சிகள் இருக்கின்றன என்று இயக்குநர்களைக் கேட்டால் என்ன செய்வது பார்வையாளர்கள் கேட்கிறார்கள் என்று சொல்வார்கள். ஏன் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் ரசிகர்கள் விரும்புகிறார்களே என்பார்கள்.

ஏன் சிறுகதை தொடர்கதைகளுக்கு வரையப்படும் படங்கள் இவ்வளவு ஆபாசமாக இருக்கின்றன என்று ஓவியர்களைக் கேட்டால் வாசகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்பார்கள். இன்று எங்கே போயின அந்தப் படங்கள், காட்சிகள், பாடல்கள்? வாசகர்களும் ரசிகர்களும்தான் காரணம் என்றால் எப்படி மாற்றங்கள் நேர்ந்தன? பெரிய கதாநாயகர்களின் படங்கள்தான் ஓடும் என்ற ’ஸ்டார் சிஸ்டம்’ நிலையிலிருந்து டைரக்டர்கள் முக்கியம் என்ற நிலைக்கு மாறியது எப்படி? டைரக்டரும் பிரபலமானவராக இருக்க வேண்டியதில்லை, புதுமுகமாகக் கூட இருக்கலாம் என்று மாறியது எப்படி? கவர்ச்சியான கதாநாயகிகள் மும்பையிலிருந்து வர வேண்டியதில்லை, நம்மூர் கிராமத்து முகமாக இருக்கலாம் என்று மாறியது எப்படி? யாரோ ஒருவர் துணிந்து முன் முயற்சி எடுத்தார், முதலடி வைத்தார் மாற்றம் நேர்ந்தது. ஆனால் அப்படி குழந்தைகளுக்கான படங்கள் எடுக்க ஏன் யாரும் முன்வருவதில்லை?

“பெரியவர்களும் ரசிக்கும் வகையில் படமெடுக்க வேண்டிய தேவை தமிழில் இருக்கிறது. அவற்றை குழந்தைகளும் ரசித்தால் கூடுதல் லாபம்.. இன்றைய குழந்தைகளை கவர அனிமேஷன் மாதிரியான தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் பெறும் வெற்றி இதையெல்லாம் சாத்தியப்படுத்தும்” என்று இயக்குநர் சிம்புதேவன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆனால் 2009ல் வெளியான ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற குழந்தைகள் திரைப்படத்துக்கு ‘அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்’ என்கிற வரிசையில் தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்ற (கவனிக்கவும் சிறந்த குழந்தைகள் படவரிசையில் அவருக்கு இந்த பரிசு கிடைக்கவில்லை. ஏனெனில் தமிழக அரசு குழந்தைகள் படத்துக்கான விருதுகளை வழங்குவதில்லை. காரணம் குழந்தைகள் படம் இங்கே வருவதில்லை என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது) ராசி அழகப்பன் சற்று கிண்டலாக பதிலளிக்கிறார்: “தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குழந்தைகளுக்கான சினிமா உருவாவதற்கான வாய்ப்புகளே இல்லை. குழந்தைகள் சினிமாவில் குத்துப்பாட்டு வைக்க முடியாது. ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. டூயட் கிடையாது. இதெல்லாம் இல்லாமல் தமிழில் ஒரு திரைப்படம் வணிக வெற்றியை அடைந்துவிடுமா?” அழகப்பனின் கிண்டலுக்குப் பின், புதுமைப் பித்தனின் கதைகளைப் போல யதார்த்தம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாக்காரர்களிடம் பேசும்போது நாம் உணர்வது இதைதான். லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. குழந்தைக்களுக்கான படங்கள் வர வேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.

ஆனால் பெற்றோர்கள்குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாது’என்பது அவர்கள் எண்ணம். ‘குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்?’ என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?’என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.

இந்த விவாதத்தில் நமக்கு அக்கறை இல்லை. நாம் விரும்புவது எல்லாம் நல்ல விழுமியங்களை (Values) சினிமா குழந்தைகளுக்குக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. ஆரோக்கியமற்ற எண்ணங்களை அவர்களிடத்தில் விதைக்காமல் இருந்தால் போதும்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெரிதாக எதுவும் மெனக்கெட தேவையில்லை. குழந்தையை யாரும் வளர்க்க முடியாது. அவர்களாகத்தான் வளர்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி தருவது மட்டுமே.

அதற்கு நாம் தயாரா?

(நன்றி : புதிய தலைமுறை : அமெரிக்காவிலிருந்து மாலன் - யுவகிருஷ்ணா)

1 comment:

  1. கெட்டு அழியும் இந்த உலகுக்கு இது போன்றவற்றை படித்தாலாவது புத்தி வருமானு பார்க்கலாம்

    ReplyDelete

Infolinks

ShareThis