1. கலை கலைக்காக /அது மக்களுக்கானது
கலை கலைக்காக
மட்டுமே என்ற சொல்லாடல் வழக்கொழிந்து அது மக்களுக்கானது என்று பொதுவாக
ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த விவாதம் இன்றும் தொடரவே செய்கிறது.
மக்களுக்கானது என்றான கலையை மிக எளிதாக ஆளும் வர்க்கம் தனதாக்கியது.
அதனால்தான் 90 களின் துவக்கத்தில் பஞ்சாயத்துவாரியாக விஞ்ஞான வளர்ச்சியின்
முக்கிய கண்டுபிடிப்பான தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டது.
ஊரின் மையத்தில் மக்களை திரட்டிய அந்த சாதனம்
சமூக நடவடிக்-கைகளை கேள்விக் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வைக்க வீட்டின்
நடுநாயகமாக அந்த மந்திரப்பெட்டி அமர்ந்தது. வண்ண வண்ண விளம்பரங்களால்
வசீகரம் செய்த அந்த தொலைக்காட்சி ஒரு அழுத்தமான இடத்தை பிடித்தது.
காலகாலமாய் மக்கள் செய்த நுகர்வை நுகர்வுக் கலாச்சாரமாக மாற்றியது. இனி
பொருட்களின் பெயரை சொல்லாமல் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கியது.
உலகமயம் பண்பாட்டு சாதனங்களில் ஒன்றான
ஊடகத்தை தனது அழுத்தமான வாகனமாக மாற்றி ஆண்டுகள் பல ஆகிறது. ஒரு காலத்தில்
திரைப்படங்களை மூலதனமாகக் கொண்டு ஆட்சியை பிடித்தார்கள். திரைப்படங்கள்
சமூக விழுமியங்களை தீர்மானித்தது. ஆனால் திரைப்படங்களை விளம்பரம் செய்து
ஓடவைக்க தொலைகாட்சி ஒரு முக்கிய ஊடகமாக இன்று காட்சியளிக்கிறது.
இருப்பினும் இன்றும் திரைப்படங்களுக்கென்ற இடம் அப்படியே உள்ளது. ஆனால்
இந்த ஊடகத்தை மிகச் சிலரே கலை மக்களுக்கானது என்ற அடிப்படை சித்தாந்த
உணர்வுடன் இன்று கையாளுகின்றனர். இது
பிரக்ஞை பூர்வமான நடவடிக்கை. இதன் பின்னால் அழுத்தமான அரசியல் இல்லை
என்றால் இது சாத்தியமல்ல.
கோடிகளில்
புழங்கும் சினிமாத்துறையை லாபம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வுடன் அணுகுவது
தவறல்ல, அதுதான் ஈடுபடுபவர்களை நிலைத்திருக்க வைக்கும். ஆனால் பணம்
மட்டுமே பிரதானம் என்பதுதான் பிரச்சனை. படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு
லாபமும் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் இந்த ஊடகத்தை மக்களுக்காகப்
பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஊடக இயக்குனர்கள் எத்துனை பேர்
என்பது கேள்விக்குறியே.
சமீபத்தில்
பேராண்மை, ஈ, காதல், கல்லூரி, வெயில், சுப்பிரமணியபுரம், நாடோடிகள்,
இம்சையரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், அங்காடிதெரு, மாயாண்டி
குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்கள் பிரமாண்டங்களை பின்தள்ளி வாழ்வியலை,
அரசியலை பேசிய படங்கள்.
ஆனால் இந்த படங்களை நமது ஆட்சியாளர்கள்
எதிர்கொண்டவிதம் அவர்களின் வன்மம் மிக்க நுண்அரசியலின் வெளிப்பாடாய்
அமைந்தது.
- முழுமையாக நகைச்சுவை பின்னணியாகக் கொண்டு அரசியல் பேசிய இம்சையரசன் 23ம் புலிகேசி சிறந்த நகைச்சுவை படம் மட்டுமே என்றனர். வடிவேலு எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் அவர் சிறந்த நடிகருக்கான விருதை பெற முடியவில்லை. அதாவது உலகமய எதிர்ப்பு எல்லாம் நகைச்சுவை சார்ந்தது. அடுத்து இதைவிட கொடுமை ஒன்று நடந்தது.
- ஈ என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக சமூக அவலத்தைக் கண்டு கோபப்படும் இளைஞன் வேடத்தில் நடித்த பசுபதிக்கு சிறந்த நகைசுவை நடிகருக்கான விருது கொடுத்ததுதான். அதுசரி! அந்த வருடம் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்பது முக்கியமான செய்தியல்லவா?
ஒரு சிறு வட்டத்தின் புறக்கணிப்பு
இருப்பினும் மக்கள் ஆதரவுடன் வெற்றியடைந்த, கலையை மக்களுக்கு
அர்ப்பணிக்கும் உண்மையான கலைஞன் தன்னை சமரசம் செய்து கொள்ள மாட்டான்.
அதன்
வெளிப்பாடுதான் இயக்குனர் ஜனநாதன் ஈ படத்திற்கு அடுத்து பேராண்மையை
எடுத்ததும். இயக்குனர் சிம்புதேவன் இம்சையரசனுக்குப் பிறகு
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத் தையும் இயக்கியது.
இந்த இரும்புக் கோட்டை
முரட்டு-சிங்கம் ஊடகத்தை எப்படி வெற்றிகரமாய் மக்களுக்கு அவர்களது
வாழ்வியலை சொல்ல பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் கொண்ட திரைப்படம்.
2. இரும்புக் கோட்டை
முரட்டு-சிங்கம்
கற்பனையில்
மிதந்துவரும் அது ஒரு தனி உலகம். ராணி காமிக்ஸிலும், முத்து காமிக்ஸிலும்
நாம் பார்த்து வியந்த உலகம். தொப்பி தாங்கிய தலையும் இடையில் தொங்கும்
துப்பாக்கியும் வேகமாய் ஓடும் குதிரையும் லாவகமாய் அதன் மீது அமரும்
மனிதர்களும் நம்மை ஆட்கொள்வர். ஆங்கிலத்தில் பலதை பார்த்து மிரண்ட நமக்கு,
தமிழில் காமிரா மாமேதை கர்ணன் மட்டுமே காட்டிய உலகம் அது. அதன் பெயர்
“கௌபாய்’’ உலகம். மின்னல் வேகத்தில் சுடும் துப்பாக்கி. நாகரிகங்களை அறியாத
ஆனால் மனித மாண்புகளை தெரிந்த, அதனாலேயே ஏமாற்றப்படும் செவ் விந் தியர்கள்
இருக்கும் களம் அது. அந்த பிருமாண்ட மான உலகில் நடக்கும் கதையிது.
லிட்டர் குவளையை கையில் வைத்திருக்கும் நீதி
தேவதையின் முன்பும்,
“நான் சொல்லுவதெல்லாம் உண்மை’’ என அமிதாப்பச்சன்
படத்தின் மீதும் சத்தியம் செய்யும் ஷோலே புரத்தில் உள்ள நீதி மன்றம். அங்கு டெக்ஸாஸ் முள்ளங்கியை பாதுகாக்க முடியாத சிங்காரத்தை விசாரனை செய்து
தூக்கு தண்டனை விதிக்கின்றனர். தப்பிக்க ஒரே வழி அந்த முள்ளங்கியை கண்டு
பிடிப்பதுதான். ஆனால் சிங்காரத்தால் அது முடியாது. எனவே அவனுக்கு தூக்கு
முடிவாகிறது.
அவனை
தூக்கிலிடும்போது தூக்குக்கயிற்றை சுட்டு அவனை நான்கு பேர்
காப்பாற்றுகின்றனர். காப்பாற்றியவர்கள் சொல்வது இதுதான். ஜெய்சங்கர்புரத்தை
காக்க இரும்புக்கோட்டையை எதிர்த்து அவன் சிங்கமாய் நடிக்க வேண்டும்.
அப்படி எனில் சிங்கம் என்னவானான்? அதுதான் மர்மம். சரி அப்படி நடித்தால்
சிங்காரத்திற்கு என்ன கிடைக்கும். அவன் தேடும் டெக்ஸாஸ் முள்ளங்கி
கிடைக்கும்!. ஆகவே அவன் நடிக்க ஒப்புக்கொள்கிறான். இரும்புக்கோட்டை போடும்
நிபந்தனையை ஏற்று புதையலை நோக்கி நடந்து அதை வென்று தருகிறான்.
இரும்புக்கோட்டையினை ஏன் முரட்டு சிங்கம்
எதிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்புக்கோட்டை என்ற கிராமம் பக்கத்தில் உள்ள
பல ஊர்களை அடக்கியாள நினைக்கிறது. அதனால் அது எதையும் செய்யத் தயாராகிறது.
நாடுகளுக்குள் மோதலை விதைக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறது. அதன்
இறுதி இலக்கு உலகில் யாருக்கும் கிடைக்காத புதையலை கண்டடைவதுதான். இந்த
இரும்புக்கோட்டையால் பாதிக்கப்பட்ட கொஞ்ச மேனும் மானமுள்ள ஜெய்சங்கர்புர
மக்கள் அந்த இரும்புக்கோட்டையை எதிர்க்க நினைக்கின்றனர். எனவே அந்த
இரும்புக்கோட்டைக்கு பீதியை கிளப்பும் சிங்கத்தின் தலைமையில் போராட
நினைக்கிறனர். ஆனால் சிங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்
இரும்புக்கோட்டையின் தலைவன் அதாவது அநீதி விளக்கை உயர்த்தி பிடிக்கும்,
கொடிய வில்லன்களின் குளவிளக்கு அசோகனின் அக்காள் மகன் ஒற்ரைக்கண்ணன்
அநீதியாக சிங்க த்தை படுகொலை செய்கிறான். எனவே இந்த நடிப்பு சிங்காரம்
சிங்கமாக மாறுகிறான்.
இரும்புக்கோட்டைக்கும்
ஜெய்சங்கர்புறத்துக்கும், செவ்விந்தியர்களுக்கும் ஏற்படுத்தும்
சிண்டுமுடிப்பு வேலைகளை முறியடித்து அவர்களுடன் இணைந்து புதையலை சிங்கம்
கண்டுபிடிக்கிறான். ஆனால் புதையல் கைக்கு கிடைத்ததும் சொன்னது போல மற்ற
பகுதிகளுக்கு விடுதலைதர இரும்புக்கோட்டை மறுக்கிறது. அங்கு நடக்கும்
மோதலில் இரும்புக்கோட்டை தலைவன் அழிக்கப்பட அனைவருக்கும் விடுதலை கிடைக்
கிடைக்கிறது.
கதை சுருக்கம் மேலே
சொன்னதுதான்.
3. சிம்புதேவனின் திறமை
ஆனால் இந்த கதையை திரைப்படமாக்கி இருக்கும்
விதம் பிருமாண்டமானது. பல ஆண்டுகள் கழித்து நமது கண்முன்னே ஒரு கௌபாய் படம்
பரவசம் கொள்ளச் செய்கிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது
பிரமிப்பூட்டும் செட்டிங் மற்றும் வெளிப்புற இடங்களின் தேர்வு. நடிகர்கள்
தேர்வு, இசை, ஒளிப்பதிவு, ஆடைவடிவமைப்பு, கதைகளம், என அனைத்தும் அனைத்து
துறைகளும் சிம்புதேவனின் திறமைக்கு சான்றாக உள்ளது. செவ்விந்தியராக வரும்
பாஸ்கியும் அவரது மொழிபெயர்ப்பாளராக வரும் நடிகரும் நிச்சயம் நகைச்சுவை
நடிப்பின் உச்சம் தொடுகின்றனர்.
4. காட்சி அமைப்பு
படம்
முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளின் தலைமைப் பாத்திரம் வகிக்கும்
அமெரிக்காவை தோலுரித்து தொங்கவிடும் நுட்பமான காட்சி அமைப்புடன் நகர்கிறது.
அதுமட்டுமல்ல சமகால அரசியலின் நையாண்டியும் ஊடாக வருகிறது.
- இரும்புக்கோட்டையின் சின்னம் கழுகு, அங்கு நிற்கும் கொடிய வில்லன்களின் குலவிளக்கு அசோகனின் கையில் தீப்பந்தம் அதை பார்க்கும் உங்களுக்கு அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை நினைவுக்கு வராமல் போகாது.
- அடுத்து இரும்புக்கோட்டை தலைமை அடியாள் உலக்கை சிகப்பு என்ற வார்த்தையை கண்டு நடுங்குவது நோக்கப்பூர்வமானது.
- ஊர்மக்களை மிரட்டவரும் வில்லனிடம் சிகப்பு என்று சொல்லிப்பார் மிரண்டு விடுவான் என்று ஒருவர் சொல்கிறார். ஏன் கேட்டதற்கு ஏற்கெனவே வலுவாக அடிவாங்கி இருக்கிறான் அல்லவா? என்று பதில் சொல்கிறார் மற்றொருவர். சோவியத் காலத்தை நினைவுபடுத்துகிறது இந்தக் காட்சி
- இரும்புக்கோட்டைக்கு எதிரான புரட்சியாளர்களை கைது செய்து கொலை செய்யும் காட்சிக்கு முன் நடக்கும் சம்பவம் கியூபா உள்ளிட்டு பலநாடுகள் மீது அமெரிக்க பொருளாதார தடையால் வஞ்சிப்பதை நினைவூட்டும் காட்சி.
- மேய்ச்சல் நிலத்தில் வாழும் புரட்சியாளர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளை தூக்கிலிட நிற்கவைத்துவிட்டு உலக்கை சொல்கிற வசனம் “உங்களை கொல்லுவதல்ல எனது நோக்கம், உங்களை அடிமைப்படுத்த, எங்கள் காலடியில் மண்டியிட வைக்க, எரியரத புடுங்கினா கொதிக்கிறது தானா அடங்கும்’’
- ஜெய்சங்கர்புரவாசிகளுக்கும், செவ்விந்தியர்களுக்கும் இடையில் இரும்புக்கோட்டை வில்லன் திட்டமிட்டு பகைமைத்தீயை வளர்த்துவிடுகிறான். இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இதைத்தானே அமெரிக்கா செய்து வருகிறது.
- திருவிழாவில் பட்டாசு வெடிக்கக் கூட தடையுடன் அணுகுண்டு ஒப்பந்தம் போடுவதும், அந்த நேரத்தில் தத்தித் தத்தி நடந்து சென்று ராகவன் கேட்கும் கேள்வியும் குபீர் சிரிப்பை வரவைத்தாலும் ஜார்ஜ் புஷ்ஷிடம் அடங்கி நிற்கும் மன்மோகன்சிங நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
- செவ்விந்திய மக்களையும் ஜெய்சங்கர்புறத்து மக்களையும் துரோகம் செய்து மோதவிடும் காட்சிகள் மூன்றாம் உலகநாடுகள் மத்தியில் பகைமையை விதைக்கும் அமெரிக்காவின் இயல்பான குணத்தின் காட்சிபடுத்தல்.
- பல ஆண்டுகளுக்கு முன்பு இனி சாலையில் போக வேண்டும் என்றால் கூட பணம் கட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் கூறியபோது கிண்டல் செய்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் சுங்கச்சாவடியை தாண்டியே செல்கின்றனர். அதற்கான பகடியும் இப்படத்தில் உண்டு. பாலைவனம், காட்டாறு, காடு, மலைகளைக் கடந்து கடுமையான சிரமங்களுக்கு இடையில் புதையலைத் தேடி செல்லும் குழுவினர் சந்திக்கும் “டோல்கேட்’’ அக்மார்க் அரசியல்.
- ஸ்பான்சர் இல்லாத இடமே இல்லையென்றான நிலையும் முக்கியகட்டத்தில் வருகிறது. புதையல் கிடைத்ததாக நினைத்து திறக்கும் பாறையில் இருக்கும் விளம்பரம் இதற்கு நல்ல உதாரணம். இந்த வெளிப்புற இடத்தை பராமரிப்பது “பப்பீ ஜவுளி ஸ்டோர்’’ கடை தீப்பிடித்தால் தப்பித்து ஓடும் வசதியுடன் கூடியது என்ற வாசகத்துடன் வரும் நையாயாண்டி இது.
- அடுத்தும் ஒரு முக்கியமான காட்சி. புதையல் குறிப்பு இருக்கும் பெட்டியினுள் இருக்கும் கேள்வி “வெளியில் உள்ள தமிழன் தாக்கப்பட்டால்” தமிழ் நாட்டில் உள்ள தமிழன் என்ன செய்வான் 1. மிகுந்த மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் பார்ப்பான் 2. திரைப்படம் ரிலீஸ் அன்று நடிகர் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வான் 3. தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பான் 4. டீக்கடையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவான். விடை நமது கலாச்சார பெருமை மிகுந்த “டீக்கடை வெட்டிக்கதை”.
- சோப்புப்பெட்டி விற்க வந்த ராபர்ட் கிளைவிடமே 150 ஆண்டுகள் அடிமைப் பட்டுக் கிடந்தவர்கள் அல்லவா நாம் என்பன போன்ற வசனங்கள் படம் முழுவதும் தூவப்பட்டுள்ளது.
- வில்லனின் சிறைக்கதவுகளை மக்கள் உடைத்து நொறுக்கும்போது உள்ளேயிருந்து சேகுவேரா முதல் சதாம் உசேன் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளிகள் மக்களோடு கலந்து வெளியே வருகிறார்கள்.
4. துணிச்சலான
முயற்சி
இந்த படம் இயல்பாக பார்வையாளனை
நோக்கப்பூர்வமாக சிரிக்கவைத்து ஊடாடுகிறது.இப்படி படம் முழுவதும் நிகழ்கால
அரசியலை, ஏகாதிபத்திய அரசியலை அம்பலப்படுத்திக்-கொண்டே செல்கிறது.
சமீபத்தில் இப்படி ஒருபடம் வந்ததில்லை என்பது உண்மைதான். பல நண்பர்-கள்
நம்முடன் இந்தப் படத்தில் பல விமர்சனங்களை சுட்டிக்காட்டினர். அழகியல்
குறித்து, நடிகர்கள் ஏராளம் இருந்தும் அவர்களுக்கு போதிய காட்சிகள்
அமையவில்லை, இப்படி அரசியலை சொன்னால் படம் வெற்றியடையுமா? என்றெல்லாம்.
ஆனால் சுறா, சிங்கம், வில்லு, அசல், என அறைத்த மாவை மீண்டும் மீண்டும் அவர்
அவர் பாணியில் அறைத்துக் கொடுப்பதைவிட இப்படி புதியன எடுக்கும் துணிச்சலான
முயற்சிகளை தமிழக மக்கள் கைதட்டி வரவேற்பு செய்வார்கள். மசாலா படங்களை,
ஆபாசம் நிறந்த படங்களை எடுத்துவிட்டு தன்னிடம் உள்ள ஊடக விளம்பர பலத்தால்
படங்களை ஓட வைக்க முயல்பவர்கள் சொல்லும் வசனம் இதுதான் “மக்கள்
விரும்புவதைத்தான் நாங்கள் எடுக்கிறோம்” அது எவ்வுளவு ஏமாற்று வாசகம் என்று
அனைவருக்கும் தெரியும். இந்த வசனங்களை நிறுத்த வேண்டும் எனில் இத்தகைய
அரசியல் பேசும் படங்கள் ஓடவேண்டும். இத்தகைய படங்கள் ஓடும் போதுதான் மக்கள்
எதை விரும்புகிறார்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல முடியும்.
-Thanks to natputanramesh
அருமையான விமர்சனம் ....... 100% நடைமுறைக்கு ஏற்றது
ReplyDelete