பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது வாசலில் உள்ள கூடையில் பால் பாக்கெட் கிடக்கிறது. பால் கொண்டுவந்து தருபவரின் முகத்தைக்கூடப் பார்த்தது கிடையாது. தனியார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பால் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கறக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. நகரவாழ்வில் பால்மாடுகள், ஆடுகள் போன்றவை கண்ணில் பார்ப்பதே அரிது. குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடின்றி அருந்தும் பால்தான் இன்றைய உணவுச் சந்தையில் அன்றாடம் அதிகம் விற்பனையாகும் திரவப் பொருள். தனியார் நிறுவனங்கள் கைக்குப் போய்க்கொண்டிருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் பாலே. ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்தான் பால் உற்பத்தியில் முன்னணியில் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மெள்ளப் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன. பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி வழியாக ஆண்டுக்க...