Monday, July 30, 2012

மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

              தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...
கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின்

                முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள். அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, "பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், "போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், "பிளேக்' நோயை விரட்டும் என்ற நம்பிக்கையோடு!
                   
                       மூன்றாவது அறிகுறி, "அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா? அட... தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால், "வி ஆல் பால் டவுன்!' இப்போது புரிந்திருக்குமே... ஆம்! அவர் விண்ணகத்திற்கு, "டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.

                     இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?


                வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? கல்வியாளர்கள் கண் திறப்பரா!

சங்கமித்ரா நாகராஜன், கோவை.


Common British versions include:
Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo! A-tishoo!
We all fall down.[2]
Common American versions include:
Ring-a-round a rosie,
A pocket full of posies,
Ashes! Ashes!
We all fall down.[2]
The last two lines are sometimes varied to
Hush! Hush! Hush! Hush!
We've all tumbled down.[2]



http://en.wikipedia.org/wiki/Ring_a_Ring_o%27_Roses


Tuesday, July 10, 2012

செண்பகராமன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

Infolinks

ShareThis