Monday, September 17, 2012

அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!



அண்ணா அவர்கள் 1968ல்  அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction"  என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்!

கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன?

அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் முயற்சியினால் பல்வேறுவிதமான ஆற்றல்களினால் அடைந்த முன்னேற்றமும் அவர்களுடைய வெற்றியும் என் உள்ளத்தை தொடும் முதல் எண்ணம் ஆகும்.

கேள்வி: இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி என்ன?

அண்ணா: இந்தியர்கள் எப்போதும் தலைவிதியையே சரணடைகின்றனர். ஆனால் இந்திய ஜனநாயகம் பற்றி பேசுகையில் தலைவிதி என்னும் சொல்லை நீங்கள் பயன் படுத்துவது சரியில்லை என நான் கருதுகிறேன். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஒரு விதமான அபாயமும் கிடையாது. ஏனனில் நம்முடைய பண்பாடு ஜனநாயக பண்பாடு ஆகும். இப்பண்பாட்டால் நம் அன்றாட வாழக்கையில் கூட ஜனநாயகம் இருக்கின்றது என சொல்லலாம். இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய, புதிய மற்றும் ஏழ்மையான ஜனநாயக நாடு. இருந்த போதிலும் நான்கு பெரிய தேர்தல்களை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இந்தியாவை பற்றி அறிந்துள்ள பல மேநாட்டார்  தேர்தல் சமயத்தில் பயங்கர போராட்டங்களும் புரட்சிகளும், ரத்தம் சிந்துதலும் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே சில மோதல்கள் இருந்த போதிலும் நான்கு தேர்தலில்களிலும் ஏற்பட்ட எல்லா சேதங்களையும் கூட்டிப்பார்த்தால் அமேரிக்காவில் ஒரு வருடத்தில் உண்டாகும் விடுமுறை விபத்துகளை விட மிகக்குறைவாக உள்ளன. ஜன நாயகத்தை கையாள்வதில் நமக்குள்ள ஆற்றல் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு விடவும் வேணடாம். ஜனநாயம் பற்றி மெத்தனமாகவும் இருந்து விட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் இது வரை நடந்த 4 தேர்தல்களும் வெற்றியாக முடிந்ததாக சொன்னீர்கள், அது வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்டும் முன் யோசனையோடும், ஒழுங்காக நடந்ததாக எண்ணுகிறீர்களா? முக்கியமாக காஷ்மீரில் நடந்த தேர்தலை பற்றி பல்தரப்பட்ட பேச்சுகள் இருந்தன. மேலும் 1967க்கு முன் நடந்த  3 தேர்தல்களும் ஒழுங்காக நடக்கவில்லை என்று நாம் எண்ண எல்லா காரணங்களும் இருக்கே அய்யா?

அண்ணா: தேர்தல்கள் நாணயம் இல்லாமல் இருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டு தான். முதல் 2 தேர்தல்களிலும் நாணயம் சற்று குறைவாக இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் நாணயமற்ற முறைகள் அல்லது வேறு விதமான குறைகளை பார்த்த வரையில் மனிதர் குணம் இருக்கிற நிலையில் நிச்சயமாக எல்லா நாட்டிலும் எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு நாணயமின்மை இருக்கத்தான் செய்யும்.இந்த பயங்கரத்தை பொறுத்த வரையில் நம் நாட்டு தேர்தலில் ஆங்காங்கே நாணயம் அற்ற நடப்புகள் இருப்பினும் பொதுத்தேர்தல் என்னும் கண்டத்தின் வழியே நான்கு முறை வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். அதே சமயம் பல நாடுகளில் தேர்தல் நடுவில் நிறுத்தப்பட்டும் , முழுவதுமாக கைவிடப்பட்டும் , தடைபடுத்தப்பட்டும் போயுள்ளன. மேலும் நம்மோடுஜனநாயக ஆட்சியை தொடங்கிய பல நாடுகள் கடைசியில் ராணுவ ஆட்சியிலோ, அடிப்படை ஜனநாயகத்திலோ, அல்லது வழி நடத்தி செல்லும் ஜனநாயகம் என்னும் ஜனநாயகத்திலோ வந்து சரணடைந்து விட்டன.

கேள்வி: சென்னை மாநிலம் ,மும்மொழி திட்டத்தை விட்டு விட்டு இரு மொழி திட்டத்துக்கு போய்விட்டது அல்லவா? வருகின்ற வருடங்களில் இதே கொள்கையை கடைபிடுப்பீர்களா? அல்லது மும்மொழி திட்டம் ஏற்க்கப்படுமா?

அண்ணா: நீங்கள் , மும்மொழியை விரும்புகிறீர்களா அல்லது இரு மொழியை விரும்புகிறீர்களா என்று விவரித்த பின்னர் இந்த கேள்வியை கேளுங்கள் என நான் கூறுவேன். (சிரிப்பு) மும்மொழி திட்டத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கின்றது. மும்மொழி திட்டம் பல மாவட்டங்களிலேயே சமரச திட்டங்களாக பல வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்திய நாட்டை ஒற்றுமையாக நிலைக்கச்செய்ய எல்லா மாநிலங்களும் மூன்று மொழிகள் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று மாநில மொழியாகவும், இரண்டு ஆங்கிலம், மூன்று அவர்கள் தேசிய மொழி என கருதிய அவர்கள் சொன்ன ஒரு மொழி. நான் அச்சமயம் எதிர்கட்சியில் இருந்தேன். அதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி  மும்மொழி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் எல்லா மாநிலத்துக்கும் செய்யப்பட்டது. நல்ல ஜனநாயக பிரதிநிதியாக நான் முதலில் அதை எதிர்த்த போதிலும் அது அமலுக்கு வந்த பின் இடையில் நுழைத்து தொல்லை தவில்லை. திட்டம் நடக்க ஆரம்பித்து விட்டது. அதை நான் கெடுக்க விரும்ப வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் ஆறு மாதம் அது இருந்தது. சென்னை மாநிலம் மும்மொழி திட்டத்தில் மிகவும் உண்மையாக ஊக்கமாக இருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சமரச திட்டத்தை ஒத்துக்கொண்டு ஒரு தரப்பாக இருந்த வட மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல் செய்வதில் உண்மையாக இல்லை. சிலர் அவர்கள் தென்னிந்திய மொழிகள் எதையும் படிக்க அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.

ஒரு மாநிலம், ஆங்கில கூட தேவை இல்லை என கூறிவிட்டது. அவர்கள் மாநில மொழியே போதும் என சொன்னார்கள். ஆகவே மும்மொழி திட்டம் பல மாநில ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் புது மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் வட இந்திய மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை அவமதிப்பதை உணந்தாலும் என் மாநிலத்தில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி திட்டத்தை கொண்டு வந்தேன். இரு மொழி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் ஆட்சியையும் மக்கள் மாற்றுவார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருக்கும் வரை இரு மொழி திட்டத்தை மாற்றுவதாக இல்லை, மும்மொழிக்கு போவதாகவும் இல்லை (செம கைதட்டல்)

கேள்வி: கல்லூரிகளில் கூட மாநில மொழியை பாட மொழியாக மாற்றுவதாக கேள்விப்படும் போது சில சமயங்களில் அது நல்லதாக படுகின்றது. பொதுவாக நம் மொழியில் நாம் படிப்பது நல்லது தான். ஆனால் எல்லா விஞ்ஞான படிப்புகளையும் அப்படி செய்ய முடியுமா? ஜப்பானில் அது நடந்துள்ளது. அப்படியாக தமிழில் விஞ்ஞானத்தை மொழி பெயர்த்து "தொழில் நுட்ப கல்விகளை: செய்யும் உத்தேசம் உள்ளதா?

அண்ணா: நீங்கள் ஜப்பானை பற்றி சொல்லும் போதே அதில் பாதி பதில் அடங்கி விட்டது. ஆனால் நான் அதில் இருந்து பதில் உண்டாக்க போவதில்லை. தமிழ்நாடு பொறுத்த வரை தொழில்கல்விகளாகிய மருத்துவம், பொறியியல், இயந்திர நுணுக்கவியல் ஆகியவற்றில் இன்னும் தமிழை பாட மொழி ஆக்கப்படவில்லை. கலைக்கல்வியில் மட்டுமே இதுவரை ஆக்கியுள்ளோம். விரைவில் எல்லாமும் வரும். மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அவை பயிற்றுவிக்கப்படும். ஜப்பானில் உள்ளது போல எல்லாமே மொழியாக்கம் செய்விக்கப்பட்டு பொறியியல் முதல் எல்லாம் தமிழில் வரும். ஆனால் ஆங்கில இரண்டாம் மொழியாக இருக்கும். திமுக ஆட்சி இதைநீண்ட கால திட்டமாக செய்யும்.

கேள்வி: இந்தியாவில் இப்போது இருக்கும் பல முக்கிய பிரச்சனைகளை விட தேசிய மொழி பிரச்சனை முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிற்களா?

அண்ணா: என் நல்ல காலம் உங்கள் கேவியிலேயே பதிலும் உள்ளது. நீங்கள் கேட்பது போல பல மிக முக்கிய பிரச்சனைகள் இருக்கையில் நாம் முதலில் அவற்றை முடித்து விட்டு பின்னர் மொழியை பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி: சென்னையில் உங்கள் திமுக அடைந்த வெற்றி போல மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகள் வலிமை அடைய வாய்ப்பு உள்ளதா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா ஆகிய இடங்களில் "சிவசேனை" என்னும் கட்சி வெற்றி அடையுமா?

அண்ணா: திமுகவின் வெற்றியைப்பற்றி எண்ணும் போது அதன் சரித்திரமும் சேர்த்து பார்க்க வேண்டும். நாங்க 1949ல் கட்சி ஆரம்பிச்சோம். அதன் பின்னர் பல தேர்தல்ல நிக்கவே இல்லை. மிகுந்த யோசனைக்கு பின்ன கட்சிக்குள்ள கேட்டுகிட்டு ஆலோசிச்சுகிட்டு பின்ன 1957ல் நின்னோம். முதல்ல 15 சட்டப்பேரவை இடம் மட்டுமே கிடைச்சுது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடம் மட்டுமே கிடைச்சுது. அடுத்த தடவை 50 சட்ட மன்ற உறுப்பினர்களும், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்தாங்க மக்கள். பின்ன நாங்க 1967ல் நின்ன போது நாங்க 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு 25 உறுப்பினர்களும் பெற்றோம் என்றால் ஒரே இரவில் நிகழ்ந்த சாதனை இல்லை இது. ஏதோ ஒரு தலைவன் ஒரே இரவில் தன் மனமாச்சர்யங்களுகாக கட்சி ஆரம்பிச்சா ஆரம்பத்தில் பிரகாசமா இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் நிற்காது. இதை சிவசேனை போன்ற கட்சிகளுக்கு சொல்கிறேன். அவங்க நல்லது செஞ்சா நல்லது நடக்கும். அத்தனையே! ஆனால் சிவசேனை வளர்கிறது. அதற்கு காங்கிரசும் அதன் ஆட்சி செயல்பாடுகளும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இளைஞர் பலருக்கு நீங்கள் முதன் முதலில் திமுகவில் இளமை நாட்களில் கொண்டிருந்த பல கொள்கைகளை கைவிட்டு விட்டதாகவும் இப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் புரியாத புதிராகவும் காணல் நீராகவும் தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அண்ணா: உங்களை ஒன்று கேட்கிறேன்! நான் பிரிவினை பற்றி பேசியபோது 50 இடங்கள் மட்டுமே தந்து விட்டு நான் பிரிவினை கொள்கையை விட்ட பின்னர் 134 இடங்கள் தருகின்றனர் மக்கள். இதை எண்ணும் போது அவர்கள் என் மீது கோவம் கொண்டது போல் தெரிகின்றதா? நிச்சயம் இல்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

கேள்வி: தேசிய நிலையில் வட இந்திய , தென்னிந்தியா பற்றி உங்கள் கருத்துகளையும் மாநில அளவில் சென்னையில் பிரமண அல்லாதோர் பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா?

அண்ணா: சென்னையை பொறுத்த வரை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனை இறந்தொழிந்து விட்டது. நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்?

கேள்வி: திமுக தேசிய பிரபல்யம் அடைந்து நீங்கள் பிரதம மந்திரி ஆனால் நீங்கள் என்னன்ன முயற்சிகள் எடுத்து கொல்வீர்கள்?

அண்ணா: உங்கள் கேள்வி எனக்கு ஒரு மயக்குறு கேள்வியாக உள்ளது. இப்படி மனதை மயக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட அவற்றை பற்றி சிந்திப்பதில் நேரம் செல்விடுவது நேர விரயத்தை தடுக்கும் செயலாகும்.

கேள்வி: மொழிப்பிரச்சனை  பற்றி இன்னும் ஒரு கேள்வி, போன வருடம் எழுந்த மொழிக்கலவரங்கள் மக்களிம் மொழி பற்றிய உள்ளார்ந்த உணர்வால் எழுந்ததா? அல்லது வெறும் சாக்கா? அவர்கள் பட்டினியின் கோவத்தை வெளிப்படுத்த எழுந்ததா?

அண்ணா: 1965 ல் உண்டான மொழிக்கலவரம் பற்றிய கேள்வியாகும் இது என நினைக்கிறேன்.

கேள்வி: ஆமாம்!

அண்ணா: அது நிச்சயமாக மொழி தீர்மானத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். பிறகு அந்த கிளர்சியில் மற்ற வெளியாட்கள் சேர்ந்து பழைய கோவங்களுக்கு பழி தீர்த்து கொண்டனர். ஆனால் அதை ஆரம்பித்த மாணவர்கள் உண்மையாகவே நாடாளுமன்றத்து மொழி தீர்மானம் தம்முடைய எதிர்காலத்தை கெடுக்க கூடியதாக இருப்பதை உணர்ந்து கிளர்ந்து எழுத்தனர். எந்த கட்சியும் அவர்களை தூண்டி விடவில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையான மாணவர்கள் "மாணவர் திமுக" அணியினர் "என்பதால் இப்படி ஒரு பெயராகி போனது.

கேள்வி: சிறிது நேரத்துக்கு முன் கருத்துகளை கூறுவதை விட செயல்முறையில் காட்டுவது அதிக நம்பிக்கை என கூறினீர்கள். ஆட்சிக்கு வரும் முன் கொண்டிருந்த கருத்துகளில் மறைவாக கொண்டிருந்த கொள்கைகளில் எவற்றை எல்லாம் செய்து காட்டினீர்கள்?

அண்ணா: முதலிலே கருத்துகளை கூறுவதாக இல்லை என்று நான் சொன்னால் "மறைவு" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்க அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

கேள்வி: மன்னிக்கவும், திருத்தத்தை ஒப்புக்கொள்கிறேன்!

அண்ணா:நான் உங்களை ஒன்று கேட்கிறேன். என் கருத்துகளை எல்லாம் செயல் படுத்த ஓர் ஆண்டு போதுமா?

கேள்வி: போதாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிறிதளவவது செயல்பட்டுள்ளீர்களா?

அண்ணா: உங்களுக்கும் அது பற்றி தெரிவிக்க வேண்டுமே! விளைச்சலை அதிகம் ஆக்கியுள்ளோம், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி கைவிடப்பட்ட ரேசன் முறையை மீண்டும் ஆரம்பித்து உள்ளோம், விலவாசியை குறைத்து இருக்கின்றோம். ஒரே ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க இயலும்?

கேள்வி: நான் கேட்பது அமேரிக்க நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு தான். இங்கு வரும் செய்திகள் அதிகள் இல்லை.

அண்ணா: கேள்வியாக நான் கேட்பது உங்களுக்கு சவால் விட அல்ல. ஆங்கில மொழி வாங்கியங்கள் கேள்வியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா..

கேள்வி: நீங்கள் இங்கே வந்திருப்பது அரசியல்  காரணம் மட்டும் அல்லாது சென்னையில் ஏதோ தொழிற்சாலை தொடங்க பேச்சுகள் நடத்த வந்திருப்பதாக இங்கே பத்திரிக்கையில் பார்த்தோம்.

அண்ணா: ஆமாம் , ஜெனரல் மோட்டார் கம்பெனியுடன் இந்திய கம்பெனி ஒன்று கூட்டு சேர்ந்து சென்னையில் விவசாய கருவிகள் செய்யும் தொழிற்சாலை உணடாக்க எண்ணி இருந்தனர். இங்கே வரும் போது ஜெனரல் மோட்டார் கம்பனியின் நிர்வாகிகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கூட்டு சேர இருந்த இந்திய கம்பனி மோசடி முத்திரையை வாங்கி விட்டதால் வேறு ஒரு கம்பனி முன்வரும் வரை இங்குள்ள கம்பனியாரை சந்திப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் நான் அவர்களை சந்திக்கவில்லை.

*******************

அண்ணா! எம் தீர்க்கதரிசி அண்ணா! உனக்கு இன்று வயது 104! உன் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் அண்ணா! எம் அண்ணா!


குறிப்பு: "அறிஞர் அண்ணாவும் அமேரிக்க பேட்டியும்" என தலைப்பு வச்சா எவன் வருவான் கட்சிகாரனை  தவிர! ஒரு பேமஸ் கூட நொட்டோரியசை சேர்த்து கொண்டால் ஆஹ்ஃகா... கூட்டு பிரமாதமா இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பு!

Infolinks

ShareThis