Tuesday, May 15, 2012

news-in-time-of-social-media-tamil



அபிஷேக் மனு சிங்வி , செய்தி ஊடகங்கள் மற்றும்  சமூக வலைத்தளங்கள் 



In English: http://nallapathivukal.blogspot.in/2012/05/news-in-time-of-social-media.html




தில்லியின் அதிகார வட்டாரத்தில், மிகவும் கவர்ச்சியான, வாக்கு வன்மையுடைய வழக்கறிஞராகவும், செல்வந்தரான அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர் அபிஷேக் மனு சிங்வி. இவர் தொடர்பான மிகுந்த சர்ச்சைக்குரிய குறுந்தகடு வெளியானவுடன், St.Stephens, ஹார்வர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் மாணவரான இவர் மிகவும் சரியான நகர்த்தல்களுடன் அதை எதிர்கொண்டார். மிகவும் துரிதமாகச் செயற்பட்டு, செய்தி சானல்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாக இந்த குறுந்தகட்டில் அடங்கிய காட்சிகள் வெளிவருவதை தடுக்க நீதிமன்றத்தின் மூலம் ஒரு தடையுத்தரவைப் பெற்றார், தவிர இந்த குறுந்தகட்டின் சூத்ரதாரியாக அறியப்படும் தனது ஓட்டுநரின் மூலமாகவே, முன்விரோத்த்தின் காரணமாக குறுந்தகட்டின் காட்சிகளை மிகைப்படுத்தி, ஒரு பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றினேன் என்றும் கூற வைத்தார். இதைவிட ஒரு திறமையுள்ள வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு விவகாரத்தின் நதிமூலத்தையே நிர்மூலமாக்கிவிட்டாலும், துரதிருஷ்டவசமாக இது 2007 ஆம் ஆண்டு போலில்லாமல், 2012 ஆம் ஆண்டு. இதே ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக இருந்திருந்தால், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இது போன்ற விவகாரத்திற்கு சமாதி கட்டப் போதுமானது. ஆனால், 2012 இல், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான யுகத்தில், இவை போதுமானதாக இல்லை.


தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் நீதிமன்றத் தடையுத்தரவைக் காரணம் காட்டி, இச்செய்தி பற்றி ஒருபுறம் மெளனம் சாதிக்க, மறுபுறம் ஏனைய ஊடகங்களும் இது பற்றிய விவாதம் நட்த்தவோ அல்லது குறைந்தபட்சம் செய்தி வெளியிடவோ கூட மெனக்கெடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், நீதிமன்றத் தடையாணை பிறப்பிப்பதற்கு முன்னதாகவே சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் இக்குறுந்தகட்டினைப் பெற்றுவிட்டிருந்தன, ஆனாலும் அவர்களே அறிந்த காரணங்களுக்காக இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையெனில், இவ்விஷயம் எங்கு துவங்கியதோ, அங்கேயே முடிந்திருக்கும்.



ஆனால் சிங்வியின் துரதிருஷ்டம், ட்விட்டரில் இச்செய்தி பரவத் துவங்கியவுடன் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நீதிமன்றத் தடையாணை இருந்தபோதிலும், சிங்வியின் சர்ச்சைக்குரிய வீடியோ யூடியூப் தளத்தில் கசியவிடப்பட்டது, தவிர ட்விட்டரில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிங்வி அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒருவராக இருந்தார். ஒரு விஷயத்தின் மீதான மக்களின் நாட்டமும், ஒரு செய்தியின் மீதான முக்கியத்துவமும் மிகவும் குறுகிய இக்காலகட்டத்தில், இதை ஒரு அளப்பரிய சாதனை என்றே கூற வேண்டும். ஒருபுறம் ட்விட்டரில் “நாயால் கடிபட்ட ட்ரைவர், ட்ரைவரால் கடிபட்ட மாஸ்டர்” போன்ற ஹாஸ்யங்கள் பெருகிக் கொண்டிருக்க, நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய ஒரு அவலம், அதுவும் பாலியல் உறவுக்கு ப்ரதியுபகாரமாக நீதிபதிஸ்தானம் என்ற விஷயமே விவாதிக்கப்பட்டதில் கவனிக்கத்தக்க அம்சமாக விளங்கியது. இதனால் விளைந்த கோபம் உணரக் கூடியதாகவும், விமர்சன்ங்கள் மிக்க் கூரியதாகவும், கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும் இருந்தன. எவ்வாறு ஒரு சாதாரண ட்ரைவரால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கையான நிகழ்வை அரங்கேற்ற முடிந்தது? அவரால் எவ்வாறு மீடியாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது? சிங்வி வீடியோவை நம்பக் கூடிய வகையில் மிகைப்படுத்த எவ்வாறு அவருக்குப் பணம் கிட்டியது? அந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் நடந்த்தா? வீடியோவில் தொடர்புடைய பெண்மணி ஒன்பது மாதங்களில் நீதிபதி பதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டாரா? இவ்வாறு ட்விட்டரில் எழுப்ப்ப்பட்ட அநேக கேள்விகளுக்கும் விடையில்லை. அதே சமயம், ஒரு சாரார் இது இரு வயதினரிடையே மிகவும் அந்தரங்கமாக நடைபெற்ற நிகழ்வு இது என்றும் மற்றொரு சாரார், சிங்வி ஒரு பொது மனிதர், ஒரு ராஜ்யசபை உறுப்பினர், தன்னுடைய பதவியை துஷ்ப்ரயோகம் செய்து, ஒருவருடான பாலியியல் உறவுக்கு மாற்றாக, நீதிபதி பதவியைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி தருவது ஏற்கவே முடியாதது என இருசாராரிடையே பற்றி எரியும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ்வாறு இவையனைத்தும் ட்விட்டரில் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் அதிசமாய் மெளனம் சாதித்தன. இவ்விவகாரத்தில் தம்முடைய பங்கை சுத்தமாக பகிஷ்கரித்து, ட்விட்டரில் இதனை விவாதிப்பதற்கு ஒரு களமேற்படுத்திக் கொடுத்தது.


இவ்வளவு தீர்மானமாக இவ்விவகாரத்தை எதிர்கொண்டு, நடந்தவையனைத்துமே நாடகம் என்ற பாவனையிலிருந்த சிங்வியை இவ்விவகாரத்தின் வீச்சு மெல்லத் தாக்கத் துவங்கியது. பாராளுமன்றக் கூட்ட்த்தொடர் துவங்கவிருந்த நிலையில், பாஜக இவ்விவகாரத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டபோது, சிங்விக்கு தாம் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.



இது போன்றதான பாலியியல் சர்ச்சைகள் ஒன்றும் புதிதானவை அல்ல, இதுபோன்ற சர்ச்சைகள் உலகின் அநேக நாடுகளிலும் அரசாங்கங்களை உலுக்கியிருக்கிறது. தவிர, இந்தியாவிலும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான நிலையில் பிடிபடுவது அப்படி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல, ஆனாலும் இச்சமயம் இவ்விஷயத்தைப் பொருத்தமட்டில் மீடியாவின் போக்குதான் மிகவும் வியப்புக்குரியதான ஒன்று. இந்தியாவைப் பொருத்தவரை மீடியாவானது மிகுந்த செல்வாக்குடைய அரசியல்வாதிகளுக்கானதாகவே திகழ்கிறது. சில விஷயங்களில் பொது மக்கள் இவற்றில் வெளியாகும் விஷயங்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமலே போகிறது. தனிப்பட்ட ஒரு நபரின் கருத்தானது செய்தியாக உருமாற்றம் பெறுவதால் உண்மையான புலனாய்வு ஊடகவியல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நீண்ட காலமாகவே செய்தி என்பது ஒருவழிப் பாதையாகவே திகழ்கிறது.



இதுபோன்ற சமூக வலைத்தளங்களின் வருகையால், குறிப்பாக ட்விட்டர் போன்றவற்றால், சாதாரண நிலையிலுள்ளவர்கள் தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பிரதிபலிக்க ஒரு சிறந்த தளம் ஏற்பட்டுவிட்ட்தாக்க் கருதுகின்றனர். ஆக செய்திகள் இனி எப்போதும் ஒருவழிப் பாதை ஆகா. மீடியாக்கள் நிரா ராடியாவின் உரையாடல்களைப் புறக்கணிக்க எத்தனித்தபோது, கீ போர்டுகளையும், அகண்ட அலைவரிசை இணைய இணைப்புகளையுமே ஆயுதங்களாகத் தரித்தவர்கள் மூலம் மீடியா இவற்றை விவாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. உபி தேர்தலின்போது மீடியாக்கள் வெறுமனே ராகுலும், பிரியங்காவும் கையசைப்பதையே காட்டிக் கொண்டிருந்தபோது ட்விட்டர் பயனாளர்களுக்கு இன்னமும் அதிகம் தெரிந்திருந்த்து. இது போன்ற பல நிகழ்வுகள் மீடியாக்கள் மீது ஒருவகையான அவநம்பிக்கையைத் தோற்றுவித்துவிட்டிருந்தன. பெரும்பாலான பிரபல மீடியாக்கள் சிங்வி விஷயத்தை முற்றிலுமாக மூடி மறைக்க எத்தனிக்கையில், ட்விட்டர் அதற்கு நேரெதிர்மாறாக நடந்து கொண்டது. மீடியாக்கள் இவ்விஷயத்தை மூடி மறைத்தபோது, ட்விட்டர் இவ்விஷயத்தை முன்னெடுத்துச் சென்றது. இன்றைய யுகத்தில் தடையுத்தரவுகளும், தடைகளும் அர்த்தமில்லாத விஷயங்களாகிவிட்டன. அரசாங்கத்தின் பல முன்னெடுப்புகளையும் தாண்டி, எவராலும் இந்த வீடியோ பரவுவதைத் தடுக்க இயலவில்லை. சிங்வி ராஜிநாமா செய்த்தும், திடீரென விழித்துக் கொண்ட்து போல் மீடியாக்கள் ட்விட்டருக்குப் பக்க வாத்யம் இசைக்கத் துவங்கின. இது சமூக வலைத்தளங்களின் வெற்றி என மீடியாக்கள் கோஷித்தன, ஒருசாரார், இது சமூகவலைத்தளங்களின் அயோக்யத்தனம், அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்று குமுறினர். கடைசியாக இச்செய்தியின் பொருளானது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது.



இதனால் சமூகவலைத்தளங்கள் செய்வதனைத்துமே சரியென்றாகிவிடுமா என்றால் இல்லை. நிஜத்திலுள்ளது போலவே அங்கும் குடாக்குகளும், கிறுக்கர்களும், அர்த்தமில்லாமல் பேசுபவர்களும், உணர்ச்சி ததும்பப் பேசுபவர்களும், கருத்தே இல்லாமல் ஜோடனையாகப் பேசுபவர்களும் நிறைய உண்டு. சமூகவலைத்தளங்கள் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், இங்கு தனியொருவர் தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே நிலைநிறுத்தவியலாது; தனியொரு நபர் ஒரு விவகாரத்தை திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியாது; என் வழியே சிறந்த வழி என்றும் கூற இயலாது. சமூகவலைத்தளங்கள் தங்களைத் தாங்களே மிகவும் நேர்த்தியாக கட்டுப்படுத்திக் கொள்கின்றன. உரத்த அர்த்தமில்லாத பேச்சுக்கள் எப்பொழுதும் அதிக கவனம் பெறுவதில்லை, அவ்வமயம் நிதானமான கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நான் கண்டவரையில் தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடைபெறுவதை விட அதிக சிந்தனையூட்டக்கூடிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் ட்விட்டரில் நடைபெறுகின்றன. இதற்குப் பிறகும் மீடியாக்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால் காலச் சூழலில் அவை பின்னுக்குத் தள்ளப்படும். பரபரப்புச் செய்திகளுக்காகவும், இன்ன பிற விஷயங்களுக்காகவும் மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு பதிலாக ட்விட்டரை நாடும் யுகத்தில், மீடியாக்கள் இதுபற்றி மிகுந்த கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டும்.



அபிஷேக் மனு சிங்வியைப் பொறுத்தமட்டில் அவர் மிகவும் தவறான சூழலில், தவறான இடத்தில் பிடிபட்டிருக்கிறார். ட்விட்டர் யுகத்தில் இது மன்னிக்கப்பட முடியாத்தாகும்.



(இக்கட்டுரையின் மூலத்தை CentrerightIndia தளத்தில் எழுதியவர் சுனந்தா வஸிஷ்ட் அவர்கள், தமிழில் யதிராஜ சம்பத் குமார், )


in English: http://nallapathivukal.blogspot.in/2012/05/news-in-time-of-social-media.html

நாளைக்கே இவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கலாம்!

No comments:

Post a Comment

Infolinks

ShareThis