Tuesday, August 14, 2012

கேட்டால் கிடைக்கும்

கேட்டால் கிடைக்கும்

                  

                     நண்பர் ஒருவர்  தவறுகளை தட்டிக் கேட்கும் எண்ணம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் அவர் டில்லிக்கு பயணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப இருந்த நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்த போயிருக்கிறார். உணவு ஆர்டரை வாங்கிய  பணியாளரிடம் தண்ணீர் கேட்க, அதற்கு அவர் நீங்கள் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சுமார் அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க அவரிடம் வசதியிருந்தாலும் ஒரு உணவகத்தில் அதன் லைசென்ஸ் விதிப்படி குடிக்கவும், மற்ற யூரினல் வசதிகளும் இருந்தாலே ஒழிய, அவர்களுக்கு உணவக லைசென்ஸ் கொடுக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு சட்டமிருக்க, அவர் குடிதண்ணீரை விலைக் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி திடமாய் சொல்லலாம்?.

நண்பர் விடாமல் அவரைக் கூப்பிட்டு “ ஏன் நீங்கள் தண்ணீர் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்? ஒவ்வொரு உணவக விதிப்படி நல்ல குடிதண்ணீரும், கழிவறை வசதிகளும் வரும் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி எங்களை பாட்டில் குடிநீரை வாங்க கட்டாயப்படுத்தலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பணியாளர் ”இல்லை நாங்கள் தண்ணீர் தரமாட்டோம். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்ல, நம் நண்பர் தன்னுடய மொபைல் கேமராவை ஆன் செய்து “அப்படியென்றால் நீங்கள் அதை இந்த வீடியோவில் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வீடியோவை ஆன் செய்ய, உடன் அந்த உணவகத்தின் மேனேஜர் வந்திருக்கிறார். அவரும் நண்பரை சமாதானப்படுத்த முயல, நண்பரும் தண்ணீர் கொடுங்கள் அல்லது கொடுக்க மாட்டேனென வீடியோவில் சொல்லுங்கள் என்றதும் உடனடியாய் அவருக்கு தண்ணீர் அதுவும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரச்சனையை பார்த்த மற்ற வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென கேட்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் என்பதன் பலம் இதுதான். இது போல தொடர்ந்து பத்து பேர் கேட்டால் நிச்சயம் நமக்கு இன்று கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கும்.


தண்ணீர் கேட்ட நண்பர், ஒன்றும் சாதரணர் அல்ல. பல நாடுகளுக்கு தொடர்ந்து பயணிப்பவர். ஆனால் அவர்  தன்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல் கேட்டதால் தான் அதே உணவகத்தில் வந்திருந்த மற்றவர்களும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இடம் உய்ர்தரமாக இருக்கிறதே இங்கே நாம் இப்படிக் கேட்டால் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று யோசிக்காமல் நம் உரிமைகளை கேட்க ஆரம்பியுங்கள் நிச்சயம் நம்மை சுரண்டுபவர்கள், நம் உரிமைகளை மறுப்பவர்களும் மாறுவார்கள். மாறித்தான் ஆக வேண்டும். கேட்டால் நிச்சயம்  கிடைக்கும்.

கேட்டதால்  கிடைத்த வெற்றி

No comments:

Post a Comment

Infolinks

ShareThis