ஏர் எழுபது

"உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்; உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே!" என்று உழவின் பெருமையையும் மேன்மையையும் திருவள்ளுவப் பேராசான் போற்றிக் கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று உலக மக்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும் உழவுத் தொழிலின் தனிச்சிறப்பை இரு நூல்களின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.

கம்பர் என்று கூறினாலே "கம்பராமாயணம்" ஒன்றுதானே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், வேளாளர் மரபைப் போற்றி, பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் அதியற்புதமான இரு நூல்கள்தான்;
  • "ஏர் எழுபது" மற்றும் 
  • "திருக்கை வழக்கம்"

கம்பர் பாடியதாகக் கருதப்படும் "ஏர் எழுபது", வேளாளர் தம் சிறப்பையும், உழவுத் தொழிலின் மாண்பையும் கூறுகிறது. 

மற்றது, 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையால் வந்த கலிவெண்பாவால் பாடப்பட்ட "திருக்கை வழக்கம்" என்ற நூல், வேளாண் பெருமக்களின் கொடை குணத்தைச் சிறப்பிக்கிறது. திருக்குறள் வழிநின்று பாராட்டி, ஏர்த்தொழில் பற்றிய நுட்பமான செய்திகளை விரித்துரைக்கிறது. "ஏர் எழுபதை"ப் பாடியதையொட்டி "திருக்கை வழக்கத்தை"யும் கம்பர் பாடியதாகக் கூறுவர்.

இந்நூல்கள் தோன்றியதற்கான சூழல், படித்து இன்புறத்தக்கது. கம்பர், குலோத்துங்கன் அரசவையில் வீற்றிருந்தபோது ஒருநாள், குலோத்துங்கன் சப்தமிட்டுச் சிரித்துவிட்டான். இதைக் கண்ட கம்பர், "அரசே! எதனால் இப்படிச் சிரித்தீர்கள்? காரணத்தைச் சொன்னால் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறலாமே?" என்றார்.

"கம்பரே, நீரும் எமது பிரஜைகளும் எனக்கு அடிமைகள்தானே என்று நினைத்துச் சிரித்தேன்" என்று குலோத்துங்கன் கூறியவுடன் கம்பருக்கு கடும் சினம் எழுந்தது.

"என்ன சொன்னீர்? நானும் உமது அடிமை என்றா கருதுகிறீர்? இது ஒப்பாது. 

அரசே! நீவிர் புவிச்சக்ரவர்த்தி, நானோ கவிச்சக்ரவர்த்தி. உமக்கு நான் அடிமையாகேன்?"  என்று கூறி அவையை விட்டு கிளம்ப முயன்றார்.

உடனே குலோத்துங்கன், "கம்பரே! நீவீர் கவிச்சக்ரவர்த்தியாய்த் திகழ்வது எனது சமஸ்தானத்தில்தான். மற்ற தேசத்தில் உமக்கு இத்தகைய பெருமை கிடைக்காது" என்று கூறியதும் கம்பர் மனம் பொறுக்காதவராய்,

"கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா
 நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்?"

என்று கூறிக் கொண்டே அணிகலன்களைக் கழற்றிவைத்துவிட்டு வெளியேற நினைத்தார்.

இதைக்கண்ட அரசன், மேலும் பல கடினமான வார்த்தைகளைக் கூறியதைக் கேட்ட கம்பர், "மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?" என்ற பாடலைப் பாடி, அவையைவிட்டு வெளியேறினார்.

அவ்வாறு அவையைவிட்டு வெளியேறிய கம்பர், நீண்ட தூரம் நடந்த களைப்பு. அப்போது அவர் பார்வையில் பட்டது அக்காட்சி. தூரத்தில் பழையது கரைத்த மோரை எடுத்து வந்த மனைவி உழுது கொண்டிருந்த உழவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள். தாகம், பசி மேலீட்டால் கம்பர் தானும் அங்கு சென்று கையை நீட்டினார். இதைக் கண்ட வேளாளன் வழிப்போக்கனான கம்பருக்கு அந்த மோர்க் குவளையைத் தந்து பசியாறச்செய்தான். மோர் பருகி வயிறு நிரம்பியதும் இந்தக் வேளாளனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று கூறி, தன்னால் இயலக்கூடிய கைம்மாறு ஒன்றுதான் உண்டு. அதுதான் கவி. என நினைத்தவர் உடனே,

"செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
 பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
 முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
 எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!"

என்ற கவியொன்றை அப்போதைக்குப் பாடிவிட்டுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

தனது பசியையும், தாகத்தையும் தீர்த்த வகையை நினைத்தும், தான் குடிக்கப்போன மோரைக் குடிக்காமல் கை நீட்டியவுடன் தனக்கு அப்படியே தந்த அன்பான வேளாளனின் கையின் மகத்துவத்தையும் எண்ணி எண்ணி மனமுருகினார் கம்பர்.

உடனே அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கின் வெளிப்பாட்டின் படைப்புதான் "ஏர் எழுபது" என்ற வேளாளர் புகழ்ச்சி நூலாகும். உழவன் மற்றும் உழவுத் தொழிலின் மேன்மையை இதன் மூலம் உலகறியச் செய்து தனது நன்றியைத் தெரிவித்துவிட்டார் கம்பர்.

தவறாமல் மழை பெய்ய நாட்டில் நல்லொழுக்கம் மிக்க வேளாளரது ஏர் நடக்குமாயின் நாட்டில் இயலிசை, நாடகம் நடக்கும். பல்வேறு சிறப்புகள் நடக்கும், படை பலம் குன்றாது, தர்மம் தவறாமல் நடக்கும், உலகில் உயிர்கள் தோன்றும், பசி மக்களை நலிவிக்காது என்று ஏர் நடத்தற் சிறப்பைப் போற்றுவது மட்டுமல்லாமல், காராளர்தம் தொழிற் சிறப்பை மிக அழகாக எடுத்தோதுகிறார். ஏர்த் தொழில் முடி மன்னருக்கும், அருமறை அந்தணருக்கும் மன்னர் பின்னோராம் வணிகருக்கும் உதவவல்ல உயர்வுடையது என்பதே ஏர் எழுபது நூல் முழுவதும் பேசப்படுகிறது.

"கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
 ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
 சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்
 பார் நடக்கும் படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே!" (19)

                             "காரி(மழை) பொழிந்தால் காராளரின்(உழவரின்) ஏர் நடக்கும். உழவுத் தொழில்
சிறப்பாக நட‌ந்தால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் தெருவெங்கும்
முழங்கும்.செல்வம் கொழிக்கும். திருவறத்தின் செயல்களும் நடக்கும்.படைச்
செயலும் சிறப்பாக நடக்கும். ஆனால், பசி மட்டும் இருக்காது"


என்று பாடுகிறார். 

ஏர் உழுவதற்கான உழவுக் கருவிகள் மற்றும் உழவுத்தொழில் பற்றி எழுபது பாடல்கள் இந்நூலில் உள்ளடக்கமாக உள்ளன. இதில் ஏர் கருவியின் உறுப்புகளும், உழவுத் தொழிலும் வரிசைபட கூறப்பட்டுள்ளன. தமிழிலக்கியங்கள் என்றுமே நல்வழியைத்தான் கூறுகின்றன.

கம்பர் காலத்திலும் கலிகாலத்திலும் மட்டுமல்ல எக்காலத்துக்கும் சிறப்புற்று விளங்குவது உழவுத்தொழில் ஒன்றுதான். ஏர்த்தொழிலின் சிறப்பு கூறும் கம்பரது இவ்விரு நூல்களை இன்றளவும் பலர் அறியாததால்தான், குறிப்பாக வேளாளர் தம் பார்வைக்குப் போய்ச் சேராததால், விளைநிலங்கள் நல்ல விளைச்சளைப் பார்க்காமல் நல்ல விலைக்கு விற்கப்பட்டுக் கட்டடங்களாகிப் போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

"கம்பரால் இவ்வளவு சிறப்பித்துக் கூறப்படும், நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் உழவுத்தொழிலை மறந்துவிட்டு நாம் வேறெந்த தொழில் செய்து உயிர்வாழப் போகிறோம்" என்ற கேள்வி "விதை"யை, ஒவ்வொரு விளை நிலக்காரர்களும் தங்களது மனமென்னும் நிலத்தில் "விதை"த்தால், 

"உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்; பழுதுண்டு வேறோர் பணிக்கு" என்ற நல்வழி(12) பாடல் வரிகளை நினைத்து இறுமாந்து இருக்கலாமல்லவா?

இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Comments

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

Bird Photography