குடம் புளி

குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா?







குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதும் உண்மை. குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான். கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.


இந்தக் குடம்புளி  2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது. தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது. தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை, மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும். அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.
குடம்புளி விளையும் இடங்கள்:

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.
குடம்புளி எங்கே கிடைக்கும்?
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் பின் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம். நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது. 
குடம்புளியின் பயன்:
குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை. மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது. குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நமது பமரபார்ந்த புளி குடம்புளி தான் என்றால் அது ஏன் இப்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லை?
குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை. அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம். இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது.
எந்தெந்த சமையலில் குடம்புளி சேர்க்கலாம்?
காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளி சேர்த்து சமைக்கலாம்.




By கார்த்திகா வாசுதேவன்   

Comments

  1. Thanks for finally writing about >"குடம் புளி" <Loved it!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography