Monday, February 7, 2011

பலி கொடுக்கப்பட்ட ராசா: தப்பித்த தலைகள்




எண்களின் வரிசையில், உச்சம் எதுவென உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆ.ராசா. நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப் பெரிய தொகையை மிகச் சாதாரணமாகக் கையாண்ட தகைமையாளர்.

அதோ இதோ என எதிர்பார்க்கப்பட்ட அவருடைய கைது, அலைவரிசை ஒதுக்கீடு நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (2.2.2011) நடந்தேறியிருக்கிறது. இதன் பின்னணி, பல ஆச்சரியங்களைத் தருகிறது.

முதலாவதாக, மூன்று வருடங்களாக சி.பி.ஐ., காத்த மவுனம். 2008ம் ஆண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. அப்போதே இதில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் எழுந்தன. சட்ட அமைச்சகம் சந்தேகம் தெரிவித்தது; நிதியமைச்சகம் நெறிமுறைகளைக் கடைபிடிக்கச் சொன்னது; பிரதமர் கூட, பார்த்து நடந்துகொள்ளச் சொன்னார். எல்லாருக்கும் ராசா அளித்த ஒரே பதில், "எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது.'

அப்புறம், சம்பந்தப்பட்ட இரண்டு துறைகளும், பிரதமரும் கப்சிப். இடையில் நடந்தது என்ன? பிரதமரின் கருத்தையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட்டிருக்கிறார் என்றால், அவருக்கு அந்தத் துணிச்சலைத் தந்தது யார்? இந்தியாவில், பிரதமரை விட செல்வாக்கு படைத்தவர் சோனியா ஒருவர் தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே.

அப்புறம் எப்படி சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்க முடியும்? அதையும் மீறி இப்போது எப்படி கைது வரை துணிந்தது? எல்லாம், தேர்தல் கூட்டல், கழித்தல் கணக்கு தான்.

கேட்க நாதியில்லாத ஊரில் எத்தனை கோடிகளை சுருட்டினால் என்ன என, தி.மு.க.,வும் காங்கிரசும் இருமாந்திருக்க, சுப்பிரமணியசாமி வழக்கில், சுப்ரீம் கோர்ட் தன் சாட்டையைச் சுழற்றியது. எவ்வளோ முட்டுக்கொடுத்துப் பார்த்த மத்திய அரசு, காரியம் கை மீறிப்போன நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியை, "கன்வின்ஸ்' செய்து, ராஜாவை ராஜினாமா செய்ய வைத்தது.

அதோடு எல்லாம் முடிந்துவிடும் எனப் பார்த்தால், எதிர்க்கட்சிகள் ஓய்வதாக இல்லை. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என, அவை ஒரேடியடியாக பிடிவாதம் பிடிக்கத் துவங்கின. "சைக்கிள் கேப்'பில் சுப்பிரமணியசாமியும், "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் என்னையே அரசுத் தரப்பு வக்கீலாக நியமிக்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்தார்.

சட்டப்படி அதற்கு வாய்ப்பு இருப்பதை அறிந்த காங்கிரஸ், உடனடியாக ராசாவை கைது செய்து, சாமியின் சுனாமியில் இருந்து தப்பியது. சாமி களமிறங்கினால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிடும் என்பது காங்கிரசுக்குத் தெரியும்.

சோனியாவின் சம்மதமோ, கருணாநிதிக்குத் தகவலோ தெரிவிக்காமல், சி.பி.ஐ., தன்னிச்சையாக செயல்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதனால், எல்லாரும் எதிர்பார்த்த விஷயமாகவே இருந்தது ராசா கைது. டில்லியில் கருணாநிதி இருந்தபோது, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு ராசா அழைக்கப்பட்டிருக்கிறார். தலைவர் இருக்கும்போது தொண்டர் கைது செய்யப்படுவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால், விஷயம் இரண்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராசா கைது செய்யப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பே, பெரும்பாலான ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுவிட்டன, "இன்று ராசா கைதாகிறார்' என்று. அந்த அளவுக்கு, ஊரறிந்த ரகசியமாக இருந்திருக்கிறது சேதி. "கையை முதலை கவ்விவிட்டது; துண்டித்துக்கொள்ளாவிட்டால், ஆளே காலி' என்ற தாத்பர்யத்தை கருணாநிதிக்குப் புரிய வைத்திருக்கிறது காங்கிரஸ்.

ஏற்கனவே, கனிமொழியைத் தவிர, ஆதரிக்க ஆளில்லாமல் தவித்த ராசாவுக்கு, காங்கிரசின் நெருக்கடி, பெரும் ஆபத்தாக அமைந்துவிட்டது. "தேர்தலை எதிர்கொள்வது கடினம்' என அழகிரியும் ஸ்டாலினும் ஏற்கனவே நெருக்கடி கொடுத்தது நினைவிருக்க, வேறு வழியின்றி ராசா கைதுக்கு தலைவரும் தலையகை வேண்டியதாகிவிட்டது. கருணாநிதி இந்தப் பக்கம் சென்னை வந்தார்; ராசா அந்தப் பக்கம் டில்லியில் கைதானார்.

பொதுவாக, கைது என்பதே எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? குற்றம்சாட்டப்பட்டவர் தப்பித்துவிடக் கூடாது; சாட்சிகளை கலைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான். ராசா விஷயத்தில் இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை. அப்புறமும் எதற்கு கைது? எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுத்தாக்கல் செய்ய விஷயம் வேண்டும்; தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வும் காங்கிரசும் தங்களை புத்தர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும். ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

அப்படி உண்மையிலேயே புத்தர்களாக இருந்திருந்தால், காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடியும், ஆதர்ஷ் ஊழல் புகழ் அசோக் சவானும் கைது செய்யப்படாதது ஏன்? அவர்களிடம் அரசியல் பின்புலம் இருக்கிறது; அளவற்ற பண பலம் இருக்கிறது; முக்கியமாக, டில்லியிலோ, மும்பையிலோ தேர்தல் வரவில்லை; ஆனால், தமிழகத்தில் வர இருக்கிறது.

வேறு வழியின்றி, ராசா பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு பலியின் மூலம், மத்தியிலும் மாநிலத்திலும் பல தலைகள் தப்பிவிட்டன.


Source: Dinamalar, by ஆர்.ரங்கராஜ் பாண்டே -

No comments:

Post a Comment

Infolinks

ShareThis