Wednesday, April 6, 2011

அன்னா ஹஸாரே


ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!


                  விளையாட்டு முதல் விஞ்ஞானம் வரை ஊழல் தலைவிரி கோலமாக ஆடும் தேசமாக பாரதம் மாறி வருகிறது. ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பிலிருக்கும் அரசாங்கமும், அதன் தலைமையும், அது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி வேஷம் போட்டு வருகிறது. ஆனால் மேடைகள் தோறும், ஊழலை ஒழித்தாலொழிய எங்கள் அரசாங்கத்தின் ஜென்மம் சாபல்யம் பெறாது என்ற ரீதியில் அரசாங்கத்தை ஆட்டுவிப்பவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதுபெறும் சமூக சேவகரான அன்னா ஹஸாரே((இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார் இதற்கு முன்பே பல போராட்டங்களை ஊழலுக்கு எதிராக நடத்தி இருக்கிறார். மகாத்மா காந்தி மீது பெரு மதிப்பு வைத்து இருப்பவர்) ) , ஜன் லோக்பால் என்ற ஊழலுக்கெதிரான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தில்லியின் ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணா நோன்பு துவங்கியுள்ளார். இதற்கு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, சீர்திருத்தவாதியான ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் மகஸேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே போன்றோர்கள் ஆதரவளித்து, உண்ணா நோன்பில் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுமக்களுடைய பெருவாரியான ஆதரவும், மீடியா கவனமும் பெற்று இந்த உண்ணா விரதம் அரசாங்கத்தின் கவனத்தைக் கலைத்துள்ளது.


மேலும் எந்த அரசியயல்வாதியயும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.....


ஊழல் இந்தியாவை வேகமாக அழித்து வரும் ஒரு கொடிய நோயாக படு வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் சமீபமாக இதன் போக்கை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. தினமும் அந்த அரசியல்வாதி இவ்வளோ கோடி கொள்ளை அடித்தார் இவர் இவ்வளோ கையாடல் செய்தார் என்று வருவதைப் பார்த்தால் வருகிற ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது ஆயிரத்தில் எல்லாம் ஊழல் செய்வது கீழ் நிலை ஊழியர் மட்டும் தான் தற்போதெல்லாம் லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரமை விடுங்க அது இல்லாமையே பல கோடி கொள்ளைகள் வந்து விட்டது.. ) கொள்ளைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.

இதை தேர்தல் கமிசன் போல தன்னிச்சையாக அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பின் மூலம் தான் சரி செய்ய முடியும் என்று ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்தக்கூறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலம் இந்த அமைப்பு ஊழல் செய்த அனைவரையும் விசாரிக்க முடியும் எந்த வித கட்டுப்பாடுமில்லாமல். இதில் மாநில அரசோ அல்லது மற்றவர்களோ இதில் தலையிட முடியாது அதாவது யோவ்! அவன் நம்ம ஆளுயா! இந்த விஷயத்தை கண்டுக்காதே! என்று கூற முடியாது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் தேர்தல் கமிசன் அனைவரையும் சுளுக்கு எடுத்து வருவதைப்போல ஊழல் செய்யும் அனைவரையும் பெண்டு எடுக்க முடியும்.

ஜன் லோக்பால் மூலம் என்ன செய்ய முடியும் 
மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஜன் லோக்பால் மேலும் தெரிந்து கொள்ள http://indiaagainstcorruption.org/ செல்லுங்கள்


No comments:

Post a Comment

Infolinks

ShareThis