ஊழல் இருளை துரத்த... ஒளியேற்ற வாருங்கள்: கோவையில் புதிய எழுச்சி
அந்த குதிரை எழுந்து ஓடுகிறது; ஓட ஓட விழுகிறது; விழுந்தாலும் மீண்டும் எழுகிறது; உடலெங்கும் உள்ள காயங்களிலிருந்து குருதி வழிய, வலியையே வலிமையாக்கிக் கொண்டு ஓடுகிறது அந்த குதிரை. தன்னை வீழ்த்துவதற்காக வரிசையாக வந்து விழும் அம்புகளையும் உடலில் வாங்கிக் கொண்டு ஓடும் அந்த குதிரையின் ஓட்டம் தொடருமா... வெற்றி இலக்கைத் தொடுமா? பொறுத்திருங்கள்... அம்புகளோடு ஓடும் அந்தக் குதிரையும், ஆயிரம் சமூகத் தடைகளைத் தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்லும் நம் தேசமும் ஒன்று தான். சாதீயம், மதவாதம், பிரிவினைவாதம், பழமைவாதம் என பல விதமான அம்புகளும், பல முனைகளிலிருந்து தாக்கினாலும், "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கவசத்தைத் தாங்கிக் கொண்டு வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
வல்லரசு என்ற வானளாவிய சிகரத்தை எட்டுவதற்கான நம் பயணத்தில், மாபெரும் தடைக்கல்லாய் எழுந்து நிற்கிறது ஊழல். கையூட்டு, லஞ்சம், ஊழல் என வெவ்வேறு வடிவங்களில் சுற்றிச் சுழன்று நம்மை வீழ்த்தும் இந்த காரணிகளிலிருந்து நம் தேசத்தைக் காக்க வேண்டிய மகத்தான கடமை, நமக்கிருக்கிறது.
அதிலும் நம் தமிழகத்துக்கு இப்போது அந்தப் பொறுப்பு, ரொம்பவே அதிகரித்திருக்கிறது; அதற்காக ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன. பூகம்ப பாதிப்பு, சுனாமி என பல்வேறு பேரிடர்களிலும், முகம் தெரியாத முகவரி அறியாத சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதில் முன் வந்து நிற்கும் கோவை மக்கள், இப்போதும் தமிழகத்துக்கே முன்னோடியாக களம் இறங்கியுள்ளனர். ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவை ரேஸ் கோர்சில் நேற்று அடையாள உண்ணாவிரதம் நடந்தது.
ஒட்டு மொத்த கோவை மக்களின் ஆதரவும் ஹசாரேக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிறுதுளி, ராக், கொடீசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சைமா, சீமா, ஜிட்டா, ஐந்தாவது தூண், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளும் இந்நிகழ்வில் கைகோர்க்கின்றன. பேச்சு, உரை வீச்சு எதுவுமில்லை; ஆளுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி, ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, அவரவர் மனதில் பிரார்த்திக்கலாம். நாம் ஏற்றும் அந்த ஒளி, நம் தேசத்தைச் சூழ்ந்திருக்கும் ஊழல் இருளைத் துரத்த வேண்டுமென்பதே இந்நிகழ்வின் நோக்கம். அக்னி குஞ்சாக இங்கே பற்ற வைக்கப்படும் இந்த தீப ஒளி, தேசம் முழுவதும் பற்றிப் பரவினால் லஞ்சமும், ஊழலும் எரிந்து சாம்பலாகும்; ஹசாரேயின் கரம் வலுப்படும்.
வனிதா மோகன் கூறுகையில், ""லஞ்சம், ஊழல் என பல வித நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருக்கும் நம் தேசம், வல்லரசாக உருவாவதற்கு ஊழலற்ற தேசம் என்ற ஆரோக்கியச் சூழலை உருவாக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி, ஒரு துவக்கம் மட்டுமே; ஹசாரேயின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை, அவருக்கான நம் ஆதரவு நிகழ்ச்சிகள் தொடரும்,'' என்றார். ஊழலுக்கு எதிராக ஒன்று கூடும் பல கோடி கரங்களில் உங்கள் கரங்களும் ஒன்றாய் இருக்கட்டும். எத்தனை கோவில்கள், எத்தனை வேண்டுதல்கள், எத்தனை தீபங்கள்... அதெல்லாம் நம் நலனுக்காக; இன்று நாம் ஏற்றப் போகும் இந்த தீபம், லஞ்சத்தாலும், ஊழலாலும் முடங்கி, எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடும் நம் தேசத்துக்காக; வாருங்கள் ஒளியேற்றுவோம்; ஊழல் இருளை தூரமாய்த் துரத்துவோம்.
சென்னையில் உண்ணாவிரதம்: காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில், "பேக்ட்' அமைப்பினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். புகார்களுக்கு ஆளாகும் உயர் பதவியில் இருப்பவர்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரபல காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக, "பேக்ட்' இந்தியா அமைப்பைச் சேர்ந்த சமூக சேவகர்கள் செல்வராஜ், கோபாலகிருஷ்ணா உள்ளிட்டோர், காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று மாலை துவக்கினர். சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா துவக்கி வைத்தார்.
source: dinamalar
No comments:
Post a Comment