chitika-top

Thursday, July 28, 2011

தமிழக எம்.பி.,க்களின் சமூக அக்கறை

     கேரள எம்.பி.,க்கள் "கிரேட்'; நம்ம எம்.பி.,க்கள் "வேஸ்ட்!' - எஸ்.ஆர்.எம்.யு., தலைவர்   --  ராஜா ஸ்ரீதர் 


     எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 88 ஆயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய மாபெரும் தொழிற்சங்கம். தொழிலாளர்களுக்காக மட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வேயின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. இதன் தலைவராக பத்தாண்டுக்கும் மேலாக பணியாற்றும் ராஜாஸ்ரீதர், அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் அகில உலக போக்குவரத்து சம்மேளனத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ரயில்வே துறையின் போக்கு, தமிழக எம்.பி.,க்களின் சமூக அக்கறை என பல விஷயங்கள் குறித்தும் அவர் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

எஸ்.ஆர்.எம்.யு., அமைப்பின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

அகில இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் இணைப்புச் சங்கமாக எஸ்.ஆர்.எம்.யு., செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற்று, தொடர்ந்து அங்கீகாரத்தைப் பெற்று வருகிற தொழிற்சங்கம் இதுவே. தேர்தலுக்குப் பின், மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொரு தேர்தல் வந்தால், நாங்கள் மட்டுமே ஒரே தொழிற்சங்கமாக அங்கீகாரம் பெறுவோம் என்று நம்புகிறோம்.

அமைப்பின் கோரிக்கைகள், எந்த அளவுக்கு வென்றெடுக்கப்பட்டுள்ளன?

எதுவும் இதுவரை தோற்கவில்லை. பேச்சுவார்த்தையிலேயே இதுவரை 50 சதவீத கோரிக்கைகளை வென்றுள்ளோம். புதிய சம்பள கமிஷனுக்குப் பின், ரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் ஏ.சி., மூன்றாவது வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். 57 வயதான ரயில்வே தொழிலாளர், விருப்ப ஓய்வு பெற நினைத்தால், அவரது மகனுக்கோ, மகளுக்கோ வேலை தரவேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு வேலை என்ற கோரிக்கையை மம்தா ஏற்றுக் கொண்டார்; போர்டு ஏற்கவில்லை. காலத்துக்கேற்ப எங்கள் கோரிக்கைகள் மாறும்; தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடுவதே இந்த அமைப்பின் அடையாளம்.

பணியிடங்கள் நிரப்பப்படாததால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ரயில்வே துறையில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன; அவற்றில், ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணியிடங்கள், பயணிகள் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையவை. சி.ஏ.ஜி., அறிக்கையும் இதைத் தெளிவு படுத்தியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எங்கள் அமைப்பு, தொடர்ந்து போராடுகிறது. பழைய பணியிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகின்றனர். புதிய ரயில்களுக்கான பணியிடங்களைப் பற்றி, ரயில்வே நிர்வாகம் யோசிப்பதே இல்லை. புதிய ரயிலை இயக்கும்போது, அதற்குரிய டிக்கெட் பரிசோதகர், கார்டு பணியிடங்களை உருவாக்க வேண்டுமென்கிறது ரயில்வே விதி; ஆனால், அது கடை பிடிக்கப்படுவதேயில்லை.

பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்கள் உள்ளன?

அத்தியாவசியமான பராமரிப்புப் பொருட்களுக்குக் கூட நிதி ஒதுக்குவதில்லை; பராமரிப்புப் பணியாளர்கள் இல்லை. உதாரணமாக, கோவை - சென்னை இடையே இயக்கப்படும் "துரந்தோ எக்ஸ்பிரஸ்' புது ரயில் என பலரும் நினைக்கின்றனர். அது, 1994லிருந்து வேறு பகுதியில் இயக்கப்பட்ட "ரேக்' ஆகும். அதில், வயர்கள் தொங்குகின்றன. இப்படிப்பட்ட சின்னச்சின்ன குறைகளும் பயணிகளுக்கு அச்சுறுத்தல்தான். பராமரிப்புப் பணியாளர் இல்லாததால் ஏற்படும் குறைபாடுக்கு, சில நேரங்களில் பெரிய விலை தர வேண்டியிருக்கும்.

தெற்கில் வரும் வருவாயைக் கொண்டு, வட மாநிலங்களில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று நமது எம்.பி.,க்கள் குற்றம் சாட்டுகின்றனரே...

தவறான குற்றச்சாட்டு. இயக்க விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால், வடக்கில் 92 ரூபாய் செலவு செய்தால், 100 ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. தெற்கு ரயில்வேயில், 120 ரூபாய் செலவு செய்து, 100 ரூபாய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. ரயில்வே வருவாயில் 70 சதவீதம், சரக்குப் போக்குவரத்திலும், மீதி பயணிகள் போக்குவரத்திலும் கிடைக்கிறது. வட மாநிலங்களில் தோல், இரும்பு, பெட்ரோலியம் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் சரக்கு வருவாய் அதிகம். தமிழகத்தில் அத்தகைய பெரிய தொழிற்சாலைகள் வரவில்லை. அதனால், சரக்கு வருவாய் ரொம்பவும் குறைவு. பயணிகள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், இந்திய ரயில்வேக்கு நஷ்டம் 20 ஆயிரம் கோடி ரூபாய். சரக்கு போக்குவரத்தில் கிடைக்கிற வருவாயை, பயணிகள் போக்குவரத்துக்குத் திருப்புவதால்தான் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை நடத்த முடிகிறது. லாபம் ஈட்டாத தென்னக ரயில்வேக்கு எதற்கு புதிய ரயில்களைத் தர வேண்டும் என்ற எண்ணம், டில்லியில் இருப்பவர்களிடம் இருக்கிறது என்பது உண்மைதான்.

மறைமுகக் கட்டணத்தால்தான், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை என்ற புகார் பற்றி...

லல்லு இருந்தபோது, ஒரு ரூபாயை டிக்கெட் கட்டணத்தில் குறைத்து, "சூப்பர் பாஸ்ட்' என்ற பெயரில், அதே ரயில்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தை உயர்த்தினார். ரிசர்வேஷன் சார்ஜஸ் என்ற பெயரிலும் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனால், பெரிய வருமானம் கிடைக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

தெற்கு ரயில்வேயில் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழகம் குறிப்பாக புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி...

கேரளாவைப் பொறுத்தவரை, அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதான அக்கறையும், பயமும் அதிகம். என்னவொரு தேவை, பிரச்னை என்றாலும், அங்குள்ள எம்.பி.,க்கள் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் இருக்கிற எம்.பி.,க்கள் இதுவரையிலும் எந்தவொரு விஷயத்துக்காகவும் ஒன்று பட்டு குரல் எழுப்பியதில்லை; மாறாக, ஏட்டிக்குப் போட்டியாகத்தான் பேசுகின்றனர். தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் இதுவே.

நமது எம்.பி.க்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்...?

இப்போது டி.ஆர்.பாலுதான், நிலைக்குழுத் தலைவராக இருக்கிறார். தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அவரது தலைமையில் அ.தி.மு.க., கம்யூ., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளின் எம்.பி.,க்களும் சேர்ந்து போய், பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் பேசினால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும்.

ரயில்வே கேபினட் அமைச்சர், தமிழகத்துக்குக் கிடைத்தால் மாற்றம் வருமா?

வாய்ப்புண்டு. இணை அமைச்சராக இருந்தபோது, ஏதோ சில திட்டங்கள் கிடைத்தன. கேபினட் அமைச்சர் பதவி கிடைத்தால், நிச்சயமாக தமிழகத்துக்குக் கூடுதல் திட்டங்களைக் கொண்டு வர முடியும். யார் வருவார்?

-----------------

   நமது எம் பி க்களுக்கு "தலைமை" இட்ட கட்டளைப்படி "சுருட்டவே" நேரம் பத்தல.. இதுல எங்க மக்களுக்காக குரல் கொடுக்கிறது..??   என்னைக்கு கட்சி பாத்து, ஜாதி பாத்து மதம் பாத்து ஒட்டு போடுறது நின்று நல்ல மனுசன பாத்து ஒட்டு போடுறது வருதோ, அது வர, நமக்கு வர்ற எம்பிக்கள் எம் எல் ஏக்கள் இப்படித்தான் இருப்பார்கள்....

No comments:

Post a Comment

Infolinks

ShareThis