இலங்கை ராணுவ வீரர் வாக்குமூலம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்: சேனல் 4-க்கு இலங்கை ராணுவ வீரர் அளித்த வாக்குமூலம்!

போரின் இறுதி நாட்களில், தமிழர்களைக் 'கண்டவுடன் சுட' ராணுவத்துக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலரும், ராஜபகஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே உத்தரவிட்டதையும், சரணடைந்த புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கு அவர் ஆணையிட்டதையும் அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர், சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், அப்பாவித் தமிழர்களை சித்ரவதை செய்து கொன்றது, சிறுவர்களைச் சுட்டு வீழ்த்தியது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியது என இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை நேரில் கண்ட படைவீரர் ஒருவர் விவரித்திருக்கிறார்.

'பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவதற்கு அவர் அனுமதி வழங்கியிருக்கிறார்,' என்று தனது படையினரிடையே கோத்தபய வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிரிகேடியர் ஷவேந்திர சில்வா (இப்போது மேஜர் ஜெனரல்) கூறியதை சேனல் 4 தொலைக்காட்சியிடம் சில்வாவுக்கு கீழே பணிபுரிய்ந்த இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சுட்டுத்தள்ள கோத்தபய உத்தரவிட்டதாக சில்வா கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ராஜபக்ஷே அளித்த உத்தரவாதத்தின் படி, ராணுவத்திடம் சரணடைய அணிவகுத்து வந்த புலிகளின் மூத்த தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முந்தைய தினம் தான் கோத்தபய ராஜபக்ஷே மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என சேனல் 4 செய்தி கூறுகிறது.

தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள்...

போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவப் படைவீரர்கள் செய்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படைவீரர்களுள் ஒருவராக இருந்தவருமான 'ஃபெர்னாண்டோ' என்ற ராணுவ வீரர் ஒருவரும் சேனல் 4-க்கு சில முக்கிய வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்.

அவர் சேனல் 4-க்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்:

"சக ராணுவ வீரர்கள் குத்துமதிப்பாக குடிமக்களை சுட்டுக் கொன்றனர். மக்களைக் கட்டி வைத்து வதைத்தனர். அவர்களின் நாக்குகளை அறுத்தனர். சிக்கிய பெண்களின் மார்பகங்களை அறுத்தனர். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமானதாக இருந்தது. சிறு குழந்தைகள் சடலமாக சிதறிக் கிடந்ததையும் இதே கண்களால் தான் பார்த்தேன்."

"எண்ணிலடங்கா குழந்தைகள் மட்டுமின்றி, வயது முதியோர்களும் கொல்லப்பட்டதை நேரில் கண்டேன்.

"தங்களைக் கடந்து சென்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி கொன்று குவித்தனர். அவர்கள் யாரும் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள் தான்."

"மருத்துவமனையில் தமிழ் இளம் பெண் ஒருவரை என் சகாக்கள் 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையையும் இந்தக் கண்களாலேயே பார்த்தேன்."

"பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்களை அடித்து துன்புறுத்திய பிறகே அவ்வாறு செய்வார்கள். அதைத் தடுக்க முற்படும் பெற்றோர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவர்."

மேலும் அவர் விவரித்துள்ள கொடூரங்கள், எழுத்துகளால் கூட பதிவு செய்வதற்கு உகந்தவை கிடையாது.
இதுதொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அண்மைச் செய்தியின் வீடியோ (சிறுவர்கள், பலகீன மனம் படைத்தோர் தவிர்த்துவிடுவீர்)





நன்றி : சேனல் 4 நியூஸ்

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography