Sunday, July 31, 2011

இன்றைய உலக பொருளாதார நிலை

இன்றைய உலக பொருளாதார நிலை         

           கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன.
ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது.
ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா, தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு, அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்?



இந்தியாவில் தற்போது இருக்கும் அளவுகடந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு இந்தச் சுழலும் ஒரு காரணம். ஏதோ தேவை அதிகரித்து, அதனால் பொருட்கள் விலை உயர்ந்தது என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் தற்போது, விலை உயர்வு விண்ணை முட்டவில்லை. இது அபாய அறிகுறி.நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம். அந்த நாடு தலைகீழாக நின்றாலும், எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா, எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம், அது வலுவான நாடு.

டாலர் - யூரோ போர்:அமெரிக்க டாலர், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த "யூரோ' என்ற ஐரோப்பிய கரன்சி ஆகிய இரண்டுக்கும் இடையே, தற்போது பெரிய போர் நடக்கிறது. அடுத்த சில நாட்களில், யூரோ மேலும் பலமிழக்கும். டாலருக்கு பதிலாக, சுவிஸ் பிராங்க் கரன்சி, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது. தற்போது காணப்படும் அபாயத்தில் தங்கம், கச்சா எண்ணெய், கோதுமை, சர்க்கரை, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் விலை, விநியோகம்- தேவை என்ற
கோட்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை.



அபாயத்தில் கிரீஸ், இத்தாலி:ஐரோப்பிய நாடுகளில், கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது; இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது. ஜெர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில், பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள், முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில், மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.

நிபுணர் கருத்து:இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது, ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ:உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (ஐ.எம். எப்.,) தந்த நிதியுதவிகள் எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை.தனியார்மயம் ஊழலை வளர்த்து, புதிய பணக்காரர்களை உருவாக்கி, முடிவில், அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக, உலகமயமாக்கல் தத்துவம், ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.




உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால், அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது.அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம், அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர், வேலை வாய் ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, நிபுணர் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார்.
இது ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலை அபாயமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது.-

Source: எம்.ஆர். இராமலிங்கம் Dinamalar

No comments:

Post a Comment

Infolinks

ShareThis