Sunday, April 11, 2010

இருளில் மூழ்கும் இந்திய இதயம்


 இருளில் மூழ்கும் இந்திய இதயம்- தேவ்.பாண்டே

'இந்தியாவின் ஜீவன் அதன் கிராமத்தில் தான் இருக்கிறது' என்று கூறினார் தேசப்பிதா காந்தியடிகள். சமீபத்தில், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஒரு பேட்டியில், 'இந்தியா பணக்கார நாடா அல்லது ஏழை நாடா என்ற குழப்பமும், ஆச்சரியமும் சில சமயங்களில் எனக்கு ஏற்படுவதுண்டு.ஆடம்பர செலவு முறைகளைப் பார்க்கும் போது, இந்தியா பணக்கார நாடு என்ற எண்ணம் தோன்றும். அதே சமயம், கிராமங்களின் பக்கம் செல்லும் போது, இந்திய பணக்கார நாடாக இருக்க முடியாது என்று தோன்றும்' என கூறியுள்ளார்.

நம் நாட்டில் மக்களின் உயிர்நாடியான விவசாயம், மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்து மக்களுக்காக, கிராமப்புற விவசாயிகளை அரசாங்கமும், இன்னும் பிற அமைப்புகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.'இது என் தலைவிதி, இப்படித்தான் நான் இருக்க வேண்டுமென்று இறைவன் படைத்து விட்டான்' என்று, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறான் விவசாயி.கிராமத்தானின் உழைப்பில் கிடைக்கும் விவசாய பொருட்கள் காய்கறி, பால், இப்படி எத்தனையோ பொருட்களை, நகரத்து மக்கள் அனுபவித்து வருகின்றனர். கிராமங்களில் உற்பத்தியாகும் முதல் தரமான பொருட்களை நகரத்திற்கு அனுப்பிவிட்டு, சொத்தை சொள்ளையான காய்கறிகளையும், பதராய் போன தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறான் உழவன்.

கிராமப்புறங்களில் இருக்கிற இயற்கை வளங்களை சுரண்டித்தான், நகரத்திலுள்ள நாம், வசதி மிகுந்த வளமான வாழ்வு வாழ்கிறோம். இந்த சுரண்டலில் பல வகை உண்டு. எடுத்துக்காட்டாக, வீராணம் ஏரி நீர், காட்டு மன்னார்குடி மற்றும் சிதம்பரம் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகளுக்கும் பயன்பட்டது. சென்னைக்கு குடிநீர் கொண்டு வர குழாய் போட்டதோடு சரி... அந்த ஏரியை தூர் வாரவோ, ஆழப்படுத்தவோ இதுவரை எந்த அரசும் முயற்சி செய்தது கிடையாது.

அடுத்து சென்னையிலோ சொகுசு பஸ், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பஸ், அல்ட்ரா டீலக்ஸ் பஸ், தாழ்தள பஸ், தொடர் வண்டி பஸ் என்று எத்தனை வகை பஸ்கள். சென்னை புதுப்பேட்டையில் பிரித்து விற்க வேண்டிய பஸ்களும், வெங்காயத்திற்கோ, ஆள்வள்ளி கிழங்கிற்கோ கூட வாங்க தகுதியில்லாத பழைய இரும்பை விட கேவலமான, பஸ்கள் கிராமப் பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள், மூன்று வேளை உணவு, மாற்று உடை, சொந்த வீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை மருத்துவம், கழிப்பிட வசதி முதலியவை இல்லாத ஏழ்மை நிலையில் வாடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்க தெரியாது. முப்பது லட்சம் குழந்தைகள், பள்ளிக்கூடம் போக வாய்ப்பின்றி ஏழ்மையின் காரணமாக கூலி வேலைக்கு செல்கின்றனர்.கிராமம் இன்றளவும், ஒரு தரித்திரம் பிடித்த நிலையில் தான் உள்ளது. கல்வி வசதி கிடையாது. இன்றும் பள்ளிக்கூட வகுப்பறையில் நடக்க வேண்டிய பாடங்கள், மரத்தடியில் நடத்தப்படுகின்றன.

ஆனால், நகர்ப்புறத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும், ராஜாக்களின் அரண்மனை போன்றும், அமெரிக்க வெள்ளை மாளிகை போன்றும் அமைப்பு கொண்ட கல்விக் கூடங்கள் கணக்கிலடங்காது.

மகாத்மா காந்தி ஒரு தடவை, பீதிகர்வா என்ற கிராமத்திற்கு தனது துணைவியாருடன் போயிருந்தார். அங்கே சில பெண்கள் மிகவும் அழுக்கான உடைகளை உடுத்தியிருந்தனர். அப்பெண்கள் ஏன் தங்கள் ஆடைகளை துவைத்து கட்டுவதில்லை என்று கேட்கும்படி, தனது துணைவியாரிடம் மகாத்மா கூறினார்.அம்மையாருடன் அந்த கிராம பெண்களிடம் பேசினார். அதில், ஒரு பெண், கஸ்தூரிபாயை தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று, 'வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் இந்த புடவை ஒன்று தான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள். அப்போது, தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்' என்று கூறினாராம்.

இந்த நிலைமை அபூர்வமானதன்று. இந்திய கிராமங்களில் பலவற்றில், இதே போன்ற நிலைமையை காணலாம்.ஆற்று மணலைத் திருடி, அத்தனையும் நகர்புறத்திற்கு கொண்டு வந்து வானளாவிய கட்டடங்களைக் கட்டினோம்; கொள்ளை லாபம் பார்த்தோம். பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு என்ன செய்தோம். ஆற்று மணலைத் திருடியதால், ஆற்றின் ஆழம் கூடியது. நீர் வரத்து காலங்களில் விவசாய பாசன வாய்க்கால்களுக்கு நீர் ஏறாமல், வீணாக ஆற்றில் ஓடி கடலில் கலக்கிறது. தண்ணீர் கிடைக்காத விவசாயிகள், இன்று ஆற்றோரம் ஆழ்துளை கிணறு போட்டு, அதன் மூலம் விவசாயம் நடத்தி வருகின்றனர்.

'வெல்லம் தின்னவன் ஒருத்தன்; விரல் சூப்பியவன் ஒருத்தன்' என்பது போல, மணல் திருடியவன் ஒருவன்; மாட்டிக் கொண்டவன் விவசாயி. அரசாங்கம் இதற்கு கைமாறாக எதுவுமே செய்யவில்லை. விவசாய இடுபொருட்களை வயலுக்கு கொண்டு செல்லவும், விவசாயம் முடித்து விளைபொருட்களை வீட்டுக்கு கொண்டு வரவும், போதிய சாலை இல்லை. அரசாங்கம் இதில் தனி கவனம் எடுத்து, கிராமப்புறச் சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.மின் வெட்டு என்றால், கிராமத்தான் தலையில் கை வைப்பது தான் அரசாங்கத்தின் முதல் வேலை.

விவசாய பணிகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் நேரத்தை குறைத்து விடுகின்றனர். நகரத்தில் வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின் வெட்டு எனில், கிராமத்தார்களுக்கு ஆறு மணி நேர மின் வெட்டு .கிராமங்களில் 5 கி.மீ., சுற்றளவிற்குள ஒரு மருத்துவமனை இருக்க வேண்டும். இன்னமும் தேள் கடிக்கும், பாம்பு கடிக்கும் கூட பச்சிலை வைத்தியம் தான் செய்து வருகின்றனர்.விவசாய நிலங்களை அரசாங்கங்கள், பல திட்டங்களுக்காக தொடர்ந்து அபகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அந்த விவசாயிகளுக்கு அந்த திட்டங்களால், ஒரு தம் புடி புண்ணியம் இல்லை.

இன்றைக்கு தொழில் மயமாக்கல் திட்டத்தின் மூலம், எத்தனை கிராமங்களில் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன.ஆனால், அந்த பகுதியில் இடங்களை கொடுத்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கின்றனர் என்று கூற முடியுமா? நிலங்களை கொடுத்தவன் தகுதிக்கு ஏற்ற வேலையை அங்கு கொடுக்கலாமே. அவ்வாறு இல்லாத போது, கிராமத்தான் நகரத்தை நோக்கி வராமல் வேறென்ன செய்வான்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இடம் ஐதராபாத்; இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு. ஆனாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் சரியாகக் கையாளாத காரணத்தால், தேர்தலில் தோற்றுப் போனார். கிராமத்தில் உள்ள ஒரு உழவர், ஒரு தொழிலாளி தனக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்து கொள்வதோடு நிறுத்திக் கொண்டு விட்டால், நகரத்து மக்களுக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டால், நகரத்து மக்களின் ஒரு நாளைய வாழ்க்கையை மட்டும் நினைத்துப் பாருங்கள்...தமிழகம் என்று மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களில் உழன்று கொண்டிருக்கும் பாமர விவசாயிகளையும், பிற தொழில் செய்யும் அப்பாவிகளையும், இருள் உலகிலிருந்து ஒளி உலகுக்கு கொண்டு வர நகரத்து மக்களும், அரசாங்கமும் முயற்சி செய்தால் நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியா பணக்கார நாடாக இருக்க முடியாது.

- தேவ்.பாண்டே

-சமூக நல விரும்பி

No comments:

Post a Comment

Infolinks

ShareThis