chitika-top

Wednesday, April 28, 2010

நிஜமல்ல கதை!


விஜய் தொலைக்காட்சியின் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியை அவ்வப்போது பின்னிரவுகளில் காண்பதுண்டு. இந்நிகழ்ச்சியை பிரத்யேகமாக நான் விரும்பி பார்க்க ஒரே காரணம் லட்சுமி. அவரது ஆளுமை புரட்சித்தலைவியை நினைவுகூறத்தக்கதாக இருப்பதால் இந்நிகழ்ச்சியையும் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து வருகிறேன்.

பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெரீனாபேகம் என்ற நடுத்தர வயது பெண்ணின் கண்ணீர்க்கதை. சிறுவயதிலேயே தந்தை விட்டு விட்டு ஓடிவிட்டார். சொந்த தாயே கொடுமைப் படுத்துகிறார். பதிமூன்று வயதில் காதலனோடு ஊரை விட்டு ஓட்டம். பின்னர் கணவனே பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறான். மூன்று குழந்தைகள்.

ஒரு விளம்பர இடைவேளை.

கணவனிடமிருந்து தப்பி மீண்டும் சென்னைக்கு வருகிறார். அம்மா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சோகங்களுக்கு எல்லாம் சிகரம் வைக்கும் முகமாக இடையில் ஒரு குழந்தை காணாமல் வேறு போய்விடுகிறது. இப்படியாக ஜெரீனாபேகம் தன்னுடைய வாழ்க்கைச் சோகங்களை அடுக்கிக் கொண்டே போக ஒருக்கட்டத்தில் லட்சுமியே கண்ணீர் விட்டு அழுகிறார்.

மீண்டும் விளம்பர இடைவேளை.

அடுத்ததாக பிரச்சினைகளை தீர்க்கும் படலம்.

சிறுவயதில் ஜெரீனாவை விட்டு ஓடிப்போன தந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவரிடம் லட்சுமி பேசுகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட சோகங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி, இனியாவது ஆறுதலாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். தந்தையும், மகளும் பலவருட பிரிவுக்குப் பிறகு ஒன்று சேருகிறார்கள்.

மறுபடியும் விளம்பர இடைவேளை.

அப்பாவும், மகளும் சேர்ந்துட்டாங்க. ஜெரீனாவின் தொலைந்துபோன மகள் எங்கே? நம் குழுவினர் அந்த குழந்தையையும் தேடிக்கிட்டிருக்காங்க என்று லட்சுமி அறிவிக்கிறார்.

பார்வையாளர்கள் பரபரப்படைய விளம்பர இடைவேளை.

ஒரு கன்னியாஸ்திரியோடு சிறு பெண்குழந்தை. அக்குழந்தைதான் ஜெரீனாவின் தொலைந்துபோன மகளாம். ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்து விட்டார்களாம். எப்படி அந்த குழந்தை ஆசிரமத்துக்கு வந்தது என்று கன்னியாஸ்திரி விளக்கமாக சொல்கிறார்.

மீண்டும் ஒரு விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து

தொலைந்துபோன குழந்தையும், தாயும் ஒன்றுசேரும் கண்ணீர்க் காட்சி. பார்வையாளர்களும் கண்ணீர் சிந்த, விழியோரம் துளிர்த்த நீரை லட்சுமி நாசுக்காக துடைக்க...

அன்றைய எபிஸோடு சுபம்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளால் தொலைந்துபோன குடும்பங்கள் ஒன்று சேருகின்றன என்பதை நினைத்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஜெரீனாபேகம் கேஸின் பின்னணி ஏற்கனவே தெரிந்திருப்பதால் எனக்கு அதிர்ச்சியே மேலிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ‘புதியதலைமுறை’ பத்திரிகையில் ஜெரீனாபேகம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையிலேயே அவரது குழந்தை காணாமல் போன விஷயத்தை படத்தோடும் கட்டுரையாளர் கல்யாண்குமார் வெளிப்படுத்தியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற வாசகி அக்குழந்தையின் படத்தைப் பார்த்ததுமே புதிய தலைமுறை அலுவலகத்தை தொடர்புகொண்டார். குழந்தை இருக்கும் இடம் அவருக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து பத்திரிகையின் ஏற்பாட்டின் பேரில் தாயும், சேயும் இணைந்தார்கள். இந்தச் செய்தியும் ‘பிரிந்தோம்.. புதிய தலைமுறையால் சந்தித்தோம்’ என்ற தலைப்பில் மார்ச் 11, புதிய தலைமுறை இதழில் படத்தோடு வெளிவந்திருந்தது.

ஆனால், ஏப்ரல் 13 அன்று ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியிலோ மீண்டும் ஒருமுறை ஒன்றுசேர்ந்த வைபவம் நெகிழ்ச்சியான முறையில் படம்பிடித்து காட்டப்பட்டது. குழந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்ததாகவும் லட்சுமியே சொன்னார். ஜெரீனாபேகம், கன்னியாஸ்த்ரி, அந்த எட்டு வயதுக்குழந்தை ஆகியோரும் பாத்திரத்துக்கு ஏற்ப தரமான நடிப்பை வழங்கியிருந்ததுதான் புரியாத புதிர். ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை மீண்டும் அச்சு அசலாக விஜய் டிவி கேமிராவுக்கு முன்பாக சிறப்பாக நடித்து காட்டியிருந்தார்கள்.

உலகப் படங்களை சீன் உருவி தமிழ்ப்படங்களில் காட்சியமைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சென்னையில் ஏற்கனவே இன்னொரு பத்திரிகையால் நடந்த, படங்களோடு பதிவுசெய்யப்பட்ட ஒரு விஷயத்தை புதியதாக நடத்திக் காட்டியிருக்கும் ‘கதையல்ல நிஜம்’ குழுவினரின் சாமர்த்தியத்தை நாம் மெச்சத்தான் வேண்டும்.பின்னிணைப்பு - புதிய தலைமுறை இதழில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் கட்டுரை (பெரியதாக வாசிக்க சொடுக்கிப் பார்க்கலாம்) :

No comments:

Post a Comment

Infolinks

ShareThis