கோவையில் விரட்டியடிக்கப்பட்ட இலங்கை அமைச்சர், எம்பி!!
கோவை: இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர்.
கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் இருந்தனர்.
இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் கடும் கோபம் அடைந்தனர். ‘ஈழத்தில் நம் தமிழ்ச் சொந்தங்களை ஆயிரக்கணக்கில் கொன்று, மிச்சமிருப்பவர்கள் வாழ வழியில்லாமல் செய்துவிட்ட போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளிகளுக்கு இங்கென்ன வேலை?’ என்ற கோஷத்துடன் மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராக இருந்தனர்.
கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், “ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே தமிழரக் மண்ணில் கால் வைக்காதே” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றனர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று பொய் சொல்லி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.
ஆனால் போலீஸ் சொன்னது பொய் என்பது உடனே தெரிந்துவிட, கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக ஓடினார். அவர் கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.
அமைச்சர்கள் புறக்கணிப்பு
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, “இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை”, என்று கூறிவிட்டு சென்றனர்.
தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, “உங்களுக்கு உணர்வே இல்லையா… யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்…?” என்றனர் கோபத்துடன்.
அப்படியும் கூட போலீசார் மிக வேகமாக அவர்களை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். தமிழ் உணர்வாளர்களை அடித்து விரட்டுவதில் மிகவும் வேகம் காட்டினர்.
“பிரிட்டனுக்குச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்குள்ள தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து திருப்பியனுப்பினர். அந்தப் போராட்டத்துக்கு சட்டப்படி அனுமதியளித்து தமிழர் உணர்வுக்கு மதிப்பளித்தது பிரிட்டன். தமிழகத்திலும் இப்போது மீண்டும் இன உணர்வுடன் போராட்டம் தலையெடுத்துள்ளது. ஆனால் தமிழர் தாயகம் எனும் இங்கோ எதிர்ப்பு காட்டுபவர்களை அடித்து ஒடுக்குகின்றன மத்திய மாநில அரசுகள்” என்றார் கோவை ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment