வெற்றிகரமான உரையாடலுக்கு சில எளிய ஆலோசனைகள்

வெற்றிகரமான உரையாடலுக்கு சில எளிய ஆலோசனைகள்
ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவரிடம் கலந்துரையாடுவது, பொதுவாக எளிதானதாக தோன்றினாலும், நடைமுறையில் அது பலருக்கும் மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
தமது தாய்மொழியிலேயே உரையாடலை நிகழ்த்தினாலும், வார்த்தைக் கோர்வை, உணர்ச்சிகள் வெளிப்பாடு மற்றும் உளவியல் அம்சங்கள் போன்றவை உரையாடல்களில் முக்கிய அம்சம் பெறுகின்றன. இத்தகைய அம்சங்களை சீராக ஒருங்கிணைப்பது ஒரு உரையாடலை வெற்றிகரமானதாக ஆக்குகிறது.

மேலும் இவைத்தவிர, உரையாடப்போகும் விஷயத்தைப் பற்றிய தெளிவான அறிவு, தீர்மானம் போன்றவையும் உரையாடலின் செழுமைக்கு முக்கியமானவை. உங்களின் கருத்தை தெளிவாகவும், விரிவாகவும் எடுத்து வைப்பது கேட்பவரின் கவனத்தை எளிதில் கவரும். அதேசமயம் மிக அதிகமாக பேசிக்கொண்டே இருப்பதும், எதிராளிக்கு சலிப்பை உண்டாக்கிவிடும். எனவே அவருக்கும் தன் கருத்தை கூறுவதற்கான சம வாய்ப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் எதிராளிக்கும் ஆர்வம் இருக்கும்.

நீங்கள் இதுபோன்ற உரையாடல் செய்வதை பெரும் சிக்கலான மற்றும் சவாலான விஷயமாக கருதினால், முறையான ஆலோசனை பெற்று அதை பின்பற்றுவதன் மூலம் வெற்றிகரமான உரையாடல்களை எப்போதும் மேற்கொள்ள முடியும். உங்களின் வெற்றிக்கான சில ஆலோசனைகளை இங்கே விரிவாக தொகுத்து வழங்குகிறோம்.



தோற்றம்:

உரையாடலில் பங்கு பெறுகையில் நீங்கள் நல்ல தோற்றத்தில் இருப்பது நன்மை பயக்கும். நல்ல தோற்றம் என்பது விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருப்பது என்று பொருளல்ல. நீங்கள் உடுத்தியிருக்கும் உடையானது நாகரீகமானதாகவும், நடைமுறையில் அதிக புழக்கத்தில் உள்ளதாகவும் இருத்தல் நலம். இதன்மூலம் உங்களால் நம்பிக்கையுடன் இருக்க முடியும். ஏனெனில் உரையாடலின்போது நம்பிக்கையிழந்து திணறும் பலர், ஆடை விஷயத்தில் கோட்டைவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

உடற்கூறு மொழி:

உரையாடலின்போது உடலசைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, எதிராளி எவ்வாறு உடலசைவில் ஈடுபடுகிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். அவர் தனது கைகளை குறுக்காக கொண்டு வருகிறார் எனில், இடைமறிக்கிறார் என்பது பொருள். நண்பர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகிய பல தரப்பாரிடம் பேசுகையிலும் உடலசைவுகள் மிக முக்கியம். ஏனெனில் உடலசைவுகள் ஒரு ஒலியற்ற மொழியாக எல்லா சூழல்களிலும் பங்காற்றுகின்றன. மேலும் உங்கள் கண்களின் பார்வையை பேசுபவரின் கண்களை நோக்கி வைத்திருப்பதே விரும்பத்தக்கது.

கவனித்தல்:

உரையாடலின்போது எதிராளிக்கு, பேசுவதற்கான சம வாய்ப்பளித்து, அவர் பேசுவதை கவனிப்பது முக்கிய அம்சமாகும். அப்போதுதான் அந்த உரையாடல் முழுமையானதாக அமையும். அவரின் பேச்சின் மூலம், நீங்கள் பேச நினைத்ததையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். எதிராளி பேசுவதை ஆர்வமுடனும், சந்தோஷமாகவும் கேட்பதன் மூலம் அவருக்கு திருப்தியும், உங்களின்மீது மரியாதையும் ஏற்படும். அதேசமயத்தில் அடுத்தவரின் விஷயங்களை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதும் நல்லதல்ல.

தகவல்:

உங்களின் வியாபார கூட்டாளியையோ அல்லது அலுவல் விஷயமாக ஒருவரையோ சந்தித்து உரையாட செல்லும் முன்பாக, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் பேசும் விஷயம் பற்றி விரிவான மற்றும் தெளிவான தயாரிப்புடன் செல்லவும். உரையாடலின்போது அதிகமாக கேள்விகளை எழுப்ப வேண்டாம். போதுமான தகவலின்றி நீங்கள் முடிவெடுக்க விரும்பமாட்டீர்கள். அதேசமயம் உரையாடலை சிக்கலான ஒன்றாக ஆக்குவதைவிட, அதை அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்வது சிறந்தது. உரையாடும்போது குறிப்பிட்ட அளவில் வெளிப்படைத் தன்மையும், நட்பு மனப்பான்மையும் காட்டப்பட வேண்டும்.

உதாரணம் கொடுத்தல்:

ஒரு நபருக்கு உங்களை சரியாக தெரியவில்லை என்றால், நீங்கள் சொல்வதை அவர் நம்பமாட்டார். எனவே அவரின் நம்பிக்கையைப் பெற, உங்கள் தகவலை நிரூபிப்பதற்கான சரியான காரணங்களையும், உதாரணங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கு, நீங்கள் பேசும் விஷயத்தைப் பற்றிய விரிவான அறிவு இருப்பது அவசியம். பேசும்போது சம்பந்தப்பட்டவரின் அறிவு நிலைக்கு ஏற்ப எளிமையாகவோ அல்லது சற்று ஆழமாகவோ பேச கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் நீங்கள் பேசும் விஷயத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதில் அதிகநேரம் செலவிட வேண்டாம். உங்களின் கருத்துக்கு எதிராளி நடுநிலையாக பதிலளித்தால், அவர் வேறு விஷயத்தை பேச விரும்புகிறார் என்று அர்த்தம்.

கட்டுப்பாடு:

உரையாடும்போது எதிராளி கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், அவரை கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர வைக்க வேண்டும். அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று உங்களின் யோசனைகளை அதில் சேர்க்க வேண்டும். உங்களால் வழங்கப்பட்ட யோசனையை இருவரும் ஏற்க முடிவுசெய்தால், எதிராளியின் பங்களிப்பு இல்லாமல் இம்முடிவு சாத்தியமற்றது என்ற வகையில் நீங்கள் புகழ்ந்து பேசி அவரை சந்தோஷப்படுத்த வேண்டும். இத்தகைய செயல்பாடே பலராலும் விரும்பப்படும் ஒன்றாகும்.

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography