Sunday, July 4, 2010

பேரழகியை மணந்த கையாலாகாதவன் என்ன செய்வான்?


ஒரு பேரழகியை மணந்தவன் - ஆனால் கையாலாகாதவன் -  என்ன செய்வான்? தமிழகத்தில் தமிழ் நாளிதழ்களின் நிலை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது அப்படித்தான் இருந்தது.


 தமிழக வார இதழ்கள் மாநாட்டுச்  செய்திகள் தொடர்பான ஓரிரு கட்டுரைகளோடும் புலனாய்வு இதழ்கள் மாநாட்டு அரசியல் கிசுகிசு தொடர்பான ஓரிரு கட்டுரைகளோடும் தங்கள் மாநாட்டுப் பணியை முடித்துக்கொண்டன. ஆனால், நாளிதழ்களால் அப்படி முடியவில்லை. (வாங்கும் விளம்பரக் கூலிக்காவது மாரடிக்க வேண்டும் அல்லவா?) ஆகையால், 'சிறப்பு மலர்'களுடன் 'சிறப்புச் செய்தி'களை வெளியிட்டன. எத்தனையோ கூத்துகளுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் பத்திரிகைகள் எழுத  நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குத் திராணியில்லை. திரும்பத்திரும்ப மாநாட்டு அரங்கக் கட்டமைப்புகள், மாநாட்டுக்கு வந்த கூட்டம், பேரணி, மலிவு விலை சாப்பாடு,  கருணாநிதியின் அடிப்பொடிகள் பங்கேற்ற கவியரங்கம், கருத்தரங்கம், அவற்றில் பங்கேற்ற கருணாநிதியின் வாரிசுகள்... இப்படி வழக்கமாக ஓர் அரசியல் மாநாட்டை  எப்படி அணுகுவார்களோ அப்படியே இந்த மாநாட்டையும்  அணுகினார்கள். மாநாட்டின் முக்கிய அம்சமான ஆய்வரங்குகளில், அறிஞர்கள் ஆற்றிய உரைகள்கூட பத்திரிகைகளில் மிகச் சிறிய அளவிலேயே இடம்பிடித்தன. செய்திகளில் இடம்பெறும் பாக்கியம் எல்லா அறிஞர்களுக்கும் கிடைக்கவில்லை. அப்படியே இடம்பிடித்த அறிஞர்களின் உரைகள் தொடர்பான செய்திகளும் அறிஞர்கள் முக்கியமாக முன்வைத்த பிரச்சினைகளை, விவாதங்களை, தீர்வுகளை உள்ளடக்கியதாக இல்லை; உறுப்புகள் சிதைந்த பிண்டங்களாக இருந்தன.
      தமிழ்ப் பத்திரிகையாளர்களின் கையாலாகாதத்தனத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் கிரிகோரி ஜேம்ஸின் உரையை வெளியிட்ட விதம். மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு அறிஞர்களில் அஸ்கோ பர்ப்போலா,  ஜார்ஜ் ஹார்ட், உல்ரிக் நிக்ஸல் மற்றும் கிரிகோரி ஜேம்ஸ்  ஆகிய நால்வருக்குத்தான் ஊடகங்கள் கொஞ்சம்போல் இடம் கொடுத்தன. இவர்களில் ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த கிரிகோரி ஜேம்ஸின் உரையைத் தாளில் ஒரு  பக்கத்தில் அடக்கிவிடலாம். அதையும் அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சிட்டு நோக்கர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் கையில் கொடுத்துவிட்டார். அழகான, கவித்துவமிக்க அந்த உரையை மறுநாள் நம் பத்திரிகைகள் வெளியிட்ட விதம்  சமகால தமிழ்ப் பத்திரிகைத் துறைகுறித்த முக்கியமான ஒரு பதிவு என்பதால் வாசகர்கள் பார்வைக்கு:    

கிரிகோரி ஜேம்ஸின் உரை:
(பெரிதாக்கிப் படிக்கச் சொடுக்குக.) 
தினத்தந்தி செய்தி
தமிழின் தொன்மை
பிரிட்டீஸ் நாட்டைச் சேர்ந்தவரும் தற்போது ஹாங்காங்கில் வசிப்பவருமான கிரிகோரி ஜேம்ஸ் பேசியதாவது:
தமிழ்ச் சுவடிகளை பார்ப்பதற்காக 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த நூலகர்,  இதற்கு முன்பு இந்த நூலகத்திற்கு எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டப்படிப்பு படித்தபோது வந்தேன் என்று சொன்னேன். உடனே அவர் பழைய அலமாரி ஒன்றைத் திறந்து எனது 23-வது வயதில் நான் கொடுத்த விண்ணப்பப்படிவம் ஒன்றை எடுத்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த விண்ணப்ப படிவத்தை இன்னமும் வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சர்யமாக கேட்டேன். அதற்கு அந்த நூலகர் கூறும்போது, ''பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான தமிழ் தொடர்பானவற்றை பத்திரமாக வைத்திருக்கும்போது உங்கள் விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது பெரிய வேலை அல்ல'' என்று தமிழின் பெருமையைக் கூறினார்.
இவ்வாறு கிரிகோரி ஜேம்ஸ் பேசினார். 


தினமணி செய்தி
ஆன்மா பயணிக்கும் பாதை தான் மொழி
இங்கிலாந்து அறிஞர் கிரிகோரி ஜேம்ஸ்
     ஆன்மா பயணிக்கும் பாதைதான் மொழி என்றார் இங்கிலாந்து தமிழறிஞர் கிரிகோரி ஜேம்ஸ்.
       உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கு தொடக்க விழாவில் அவர் பேசியது:
     800 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடியைத் தேடி சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நூலகரிடம் நான் ஏற்கெனவே இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்ட மாணவராக இருந்தபோது வந்ததாகக் கூறினேன்.
        இதைக் கேட்ட நூலகர் உள்ளே சென்று உடனடியாக ஒரு விண்ணப்பப் படிவத்தை எடுத்துக்கொண்டு வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த விண்ணப்பம் அது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு பழமையான கடிதங்களைக்கூட அங்கு பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
       கோவையில் நடைபெறுவது சாதாரண விழா அல்ல. உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டாடும் மகத்தான விழா. மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. இதன் மூலம் தலைமுறை, தலைமுறையாக பண்பாட்டைக் கடத்தும் சாலையும் கூட. உலகம் முழுவதும் உள்ளவர்கள் தமிழில் இருக்கும் அருமை பெருமைகளை படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, துணிச்சலான, சவாலான முயற்சி தேவை.
      பண்டைய கிரேக்கத்தில் காலத்தைக் குறிப்பிட குரோனோஸ், கைரோஸ் என்னும் இரு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆண்டு, மாதம், நிமிடம் ஆகியவற்றைக் குறிப்பிட குரோனஸ் குறியீடும், சிக்கலான நேரங்களைக் குறிப்பிட கைரோஸ் குறியீடும் பயன்படுத்தப்பட்டன. தமிழில் ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் செய்தி
கிரிகோரி ஜேம்ஸ்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: 
சில காலத்துக்கு முன், பல்கலைக்கழகத்திற்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடிச் சென்றேன். அங்கிருந்த பணியாளர், அதற்கு முன்பு அங்கு வந்தது உண்டா என்று கேட்டார். நான் மாணவனாக இருந்தபோது, வந்ததாகக் கூறினேன். அப்போது அவர், அந்நூலகத்தில் எனது 20 வயதில் கொடுத்த விண்ணப்பத்தைத் தேடிக் கொடுத்தார். நான் வியந்து போய், "நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததை எப்படி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர், பழமையான தமிழ் மொழிக்கு 40 ஆண்டுகள் என்பது ஒரு காலமா என்று கேட்டார். அந்த அளவுக்கு தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி.  மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
   
தினகரன் செய்தி
அடுத்த தலைமுறைக்கு
தமிழ் மொழியை எடுத்து செல்வது அவசியம்
பிரிட்டன் தமிழறிஞர் வலியுறுத்தல்
 

கோவை, ஜூன் 25: மாநாட்டின் 2ம் நாள் நிகழ்வான ஆய்வரங்க துவக்க விழாவுக்கு முன்னிலை வகித்து, பிரிட்டன் அறிஞர் கிரிகோரி ஜேம்ஸ் பேசியதாவது:
    நான் இங்கு தமிழில் பேச விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு சென்றேன். அனுமதிச் சீட்டு பெறும் போது, 'நீங்கள் இதற்கு முன் வந்துள்ளீர்களா' என அங்கிருந்தவர் கேட்டார். '40 ஆண்டுக்கு முன் வந்திருந்தேன்' என்றேன். 'நீங்கள் இப்போது தொன்மையை கொண்டாடுகிறீர்கள். தமிழ் மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்து செல்லும் பணியை தமிழ் மொழி செய்து வருகிறது. இதை முன்னெடுத்து செல்ல நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis