காமன்வெல்த் குளறுபடிகள்!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth games) ஏற்பாடுகளில் மழை குறுக்கிடுவது குறித்து ஒரு வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால், நான் மிகவும் கவலைப்படுவேன். ஏனென்றால், அதன் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். காமன்வெல்த் போட்டிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் தீய சக்திகள் என்று கூறியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து 744 கோடி ரூபாயை எடுத்து காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் பயன்படுத்தியுள்ளது டெல்லி மாநில அரசு. இது அரசின் தலித் விரோதப் போக்கையே காட்டுகிறது. எனினும், இந்த நிதியை உடனடியாகத் திரும்பப்பெற்று தலித் மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியின் கருத்து.
இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவின் மானத்தைக் கூறுபோட்டுக் குறைந்த விலையில் விற்றுக்கொண்டு இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் கோளாறுகள். எந்தப் பக்கம் பார்த்தாலும் குளறுபடிகள். பல நிறுவனங்களுக்கு முறைகேடான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தனை விஷயங்களிலும் லஞ்ச லாவண்யம் அரங்கேறியுள்ளது. அதிகார அத்துமீறல்கள் தூள் பறந்துள்ளன. ஊழல் மலிந்துகிடக்கிறது. பணிகளைச் செய்வதில் ஒழுங்கீனமும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
விமரிசனங்களும் குற்றச்சாட்டுகளும் மாறிமாறி வந்துகொண்டிருக்கின்றன.
இத்தனைக்கும் காரணகர்த்தாவாக அனைவராலும் சுட்டிக்காட்டப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இவர்தான் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவர். மூத்த காங்கிரஸ் எம்.பியான இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும்கூட. தன்மீது குற்றச்சாட்டுகள் சரமாரியாக வீசப்பட்டுக்கொண்டிருக்க, ‘காமன்வெல்த் போட்டிகளுக்கு எதிரானவர்கள் உண்மையான தேச பக்தர்களாக இருக்க முடியாது. அவர்கள் சொல்லும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை. நாங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே, நான் ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை. எந்த அமைப்பு நடத்தும் விசாரணையையும் சந்திப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.’ என்று சவால் விடுகிறார் சுரேஷ் கல்மாடி.
என்ன நடக்கிறது இங்கே? கொஞ்சம் விளக்கமாகவே பார்த்துவிடலாம்.
உலக அளவில் நடக்கும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளில் காமன்வெல்த் போட்டிகள் முக்கியமானவை. பிரிட்டிஷாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகள் பங்கேற்கும் போட்டி இது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விளையாட்டுத் திருவிழாவை நடத்தும் வாய்ப்பு இந்தமுறை இந்தியாவுக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை இந்தியா வாங்கியதிலேயே குளறுபடிகள் இருக்கின்றன என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.
‘காமன்வெல்த் நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்களுக்கு இந்தியா தலா ஒரு லட்சம் டாலர் கொடுத்திருக்கிறது. அவர்களுக்குப் பணம் இல்லாமலா போய்விட்டது? சட்டப்படி இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை இது லஞ்சம் என்றுதான் சொல்வேன்.’
அடுத்து, காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியைத் தயார் செய்யும் வகையில் ஏராளமான பணிகள் செய்யவேண்டியிருந்தது. குறிப்பாக, விளையாட்டு கிராமத்தை உருவாக்குதல், இந்திரா காந்தி விமான நிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் பணிகள், போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல், சாலைகளை செப்பனிடுதல், புதிய சாலைகளை உருவாக்குதல், டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தை மேம்படுத்துதல் கூடுதல் வசதிகளை உருவாக்குதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், வீரர்களுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் பயிற்சிக்கூடங்கள் கட்டுதல் என்று ஏராளமான பணிகள் திட்டமிடப்பட்டன. அந்தப் பணிகளைச் செய்வதற்கென்று பதினாறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டன. அவர்களுக்குச் சேரவேண்டிய பணமும் தவணை முறையில் சென்று கொண்டிருக்கிறது.
விஷயம் என்னவென்றால் இத்தனை நிறுவனங்கள் களப்பணியில் ஈடுபட்டிருக்கும்போதும் கட்டமைப்பு வசதிகள் எதுவும் நிறைவடையவில்லை. அக்டோபர் 3 முதல் 14 தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதிக்குள் அனைத்து வேலைகளும் முடிவடைவது சாத்தியமல்ல என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பு. தவிரவும், போட்டிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் விஷயத்தில் தரம் மற்றும் பண ரீதியாக நிறைய குளறுபடிகளும் மோசடிகளும் நடந்துள்ளன என்ற அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்தன.
அடுத்தடுத்து ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கேள்விமேல் கேள்விகள் எழுப்பின. காலதாமதம் ஏற்படுகிறது என்றபோது அனைவரும் அமைதியாகவே இருந்தனர். ஆனால் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன என்று தெரிந்ததும் மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் களத்தில் இறங்கியது. பணிகளைச் செய்துவரும் பதினாறு நிறுவனங்களையும் அவர்களுடைய பணிகளையும் கண்காணிக்கத் தொடங்கியது.
உண்மையில் அந்தப் பதினாறு நிறுவனங்களும் முறைகேடான சான்றிதழ்களைக் கொடுத்தே தங்களுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன என்பது அந்த ஆணையத்தின் முதல் கண்டுபிடிப்பு. சுரேஷ் கல்மாடிக்கு வேண்டப்பட்ட மனிதர்களின் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான கமிஷனாக கோடிக்கணக்கில் பணப் பட்டுவாடா நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
வீடியோ ஸ்க்ரீன், நகரும் கழிவறைகள், ஆம்புலன்சுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்காக லண்டனைச் சேர்ந்த ஏ.எம். பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு 1.84 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாத அந்த நிறுவனத்துக்கு அனுமதியும் பணமும் கொடுத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது அடுத்த கண்டுபிடிப்பு. அந்த நிறுவனத்துடன் எந்தவிதமான எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது லஞ்ச ஒழிப்பு ஆணையம்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சுரேஷ் கல்மாடி, ‘இந்திய ஹை கமிஷன் அதிகாரி ஒருவரின் சிபாரிசு காரணமாகவே அந்த லண்டன் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினோம். அந்த முடிவும் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டதால் எழுத்து மூலமான ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ள கால அவகாசம் கிடைக்கவில்லை’ என்றார். ஆனால் இந்திய ஹை கமிஷன் கல்மாடியின் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதேபோல, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்துதருவதற்காக அனுமதி பெற்றிருந்தது. அதற்கான கமிஷன் தொகையும் அந்த நிறுவனத்துக்கு அவ்வப்போது தரப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு ஸ்பான்சரையும் அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் காமன்வெல்த் போட்டிகளுக்காக ஏற்பாடு செய்து தரவில்லை. ஆக, அந்தப் பணம் யாருக்குச் சென்றது, எதற்காகச் சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஷயம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட போட்டி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் இந்தக் குழுவினரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் படி செயல்படவேண்டும் என்று அறிவித்தது மத்திய அரசு.
அதன்பிறகும் சர்ச்சைகள் அடங்கவில்லை. தோண்டத் தோண்டப் பல விஷயங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளிலும் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியுள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், இது விஷயமாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும் சிபிஐயிடம் பரிந்துரைத்துள்ளது. கட்டமைப்புப் பணிகளுக்காக மட்டும் 7260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2477 கோடி ரூபாய் மட்டுமே அந்த நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளன. எனில், எஞ்சியுள்ள பணம் எங்கே சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ரூ. 208 கோடி ஒப்பந்தப்படி பி.பி.சி. டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பதினைந்து சதவீதம் கமிஷனாக கைமாறியுள்ளது. இந்தத் தொகை யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடந்து வருகிறது. மேலும், லண்டனில் உள்ள ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்துக்குச் சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணைகள் நடந்துவருகின்றன.
காமன்வெல்த் போட்டிகளின்போது பயன்படுத்தப்பட இருக்கும் கழிவறை டிஷ்யூ பேப்பர் சுருள் ஒன்றின் விலை ரூ 4138. உலகத்திலேயே இத்தனை அதிக விலைக்கு யாரும் டிஷ்யூ பேப்பரை வாங்கியிருக்க முடியாது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த இருக்கும் டிரெட் மில்கள் பத்து லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. விலைக்கு வாங்கினாலே இதைவிட குறைவான தொகைக்கு வாங்கியிருக்க முடியும். ஆனாலும் வாடகைக்கே எடுக்கப்பட்டுள்ளன. ஆறாயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கக்கூடிய குளிர்சாதனப் பெட்டிகளை 42000 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர் போட்டி நிர்வாகிகள். சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்காக ஒரு நாற்காலி நான்காயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதைவிட குறைவான தொகையில் விலைக்கே வாங்கமுடியும். ஆக, அனைத்துமே திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன. காமன்வெல்த் என்பதை ஒரு பணம் காய்ச்சி மரமாக சுரேஷ் கல்மாடி அண்ட் கோ பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
ஊடகங்கள், ஊழல் கண்காணிப்பு ஆணையகம் தவிர பொதுநல அமைப்புகளும் காமன்வெல்த் நிர்வாகத்தினர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒட்டுமொத்த டெல்லியும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அவர்கள் மீதான முக்கியக் குற்றச்சாட்டு. குடிசைப்பகுதிகள் பலவும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கியப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த பல மின் கம்பங்கள் திடுதிப்பென அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அவை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. காமன்வெல்த் போட்டிகளைப் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் நிறைய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு மிகப்பெரிய இடையூறுகள் செய்யப்பட்டுவருகின்றன என்று குற்றச்சாட்டுப் பட்டியல்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன.
அத்தனைக்கும் காரணகர்த்தா என்று ஊடகங்களால் அடையாளம் காட்டப்படும் சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் காமன்வெல்த் விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துவருகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ கல்மாடி மீதான குற்றச்சாட்டுகளுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் என்ற முறையில்தான் சுரேஷ் கல்மாடி செயல்படுகிறாரே தவிர காங்கிரஸ் எம்.பியாக செயல்படவில்லை என்று சொல்லிவிட்டது.
சர்ச்சைகள் வெடித்தபிறகு சுரேஷ் கல்மாடி வசம் இருந்த அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. தற்போது எஞ்சியிருக்கும் அதிகாரங்களையும் பறிக்கும் நடவடிக்கையாக, அரசுச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. விளையாட்டு கிராமத்தை ஜே.எஸ். தீபக் வசமும் இந்திரா காந்தி ஸ்டேடியம் மற்றும் கட்டுமான பிரச்சினைகளை ஆர்.சி.மிஸ்ரா வசமும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை எஸ்.ஆர்.ராவ் வசமும் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தை சசி சேகர் வசமும் தியான்சந்த் ஸ்டேடியம் மற்றும் தியாகராஜ் ஸ்டேடியத்தை கோபால்கிருஷ்ணா வசமும் ஒப்படைத்துள்ளது.
சுரேஷ் கல்மாடியின் அதிகாரச் சிறகுகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன என்று ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் நிலையில், ‘என்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக் கொள்வதற்காக சில அதிகாரிகளை உதவிக்கு அனுப்புங்கள் என்று மத்திய அரசிடம் கேட்டிருந்தேன். அனுப்பியிருக்கிறார்கள்’ என்று அலட்சியப்புன்னகை வீசுகிறார் சுரேஷ் ‘கல்’மாடி!
No comments:
Post a Comment