விஜய் டிவி விருது 2010

விஜய் டிவியின் விருது வழங்கும் விழா
  விஜய் டிவி வழங்கிய சென்ற ஆண்டுக்கான சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவுக்கு வழங்கப்பட்டபோது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

தொடர்ந்து 4-வது ஆண்டாக சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டி.வி.யின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. இவர் வாய் பேசமுடியாத குறைபாடுடையவர்.

அபிநயாவை விருதை பெற்றுக்கொள்ள மேடைக்கு அழைத்தபோது அவர் மிகவும் உணர்ச்சிமயமாக காணப்பட்டார். அவருக்கு நடிகர் நந்தா, ஷக்தி, நடிகை காம்னா ஆகியோர் விருதை வழங்கினார்கள்.

அப்போது அவர் ரசிகர்களை பார்த்து ஆனந்த கூச்சலிட்டார். தனக்கே உரிய பாஷையில் "என் அப்பா-அம்மாவுக்கு நன்றி`` என்றார். தொடர்ந்து தன்அப்பா, நாடோடிகள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சசிகுமார் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார்.

டைரக்டர் சமுத்திரக்கனியின் காலைத் தொட்டு வணங்கியவர், தனக்கு கிடைத்த விருதையும் அவர் கையில் கொடுத்து வாங்கினார். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

டைரக்டர் சமுத்திரக்கனி பேசும்போது, "அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, தயாரிப்பாளர் சசிகுமார் இது முடியுமா? என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார்`` என்றார்.

தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது `நான் கடவுள்` படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.

`செவாலியே சிவாஜி விருது`க்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருதை ரஜினியின் வீட்டுக்கே சென்று நடிகர் பிரபுவும், அவரது அண்ணனன் ராம்குமாரும் வழங்கினார்கள்.

சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை `பசங்க` படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்.பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள். சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை `பசங்க` படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள்.

சிறந்த வில்லனுக்கான விருதை `நான் கடவுள்` படத்தில் நடித்த ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த நகைச்சுவை நடிகர் விருது `சிவா மனசுல சக்தி` படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது. விழாவில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி கலந்துகொண்டார். விழாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், கார்த்திக், விஜய், சூர்யா, நடிகைகள் கவுதமி, ரீமாசென், அஞ்சலி உள்பட திரையுலகமே திரண்டு வந்திருந்தது.

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography