Friday, June 11, 2010

போபால் விஷவாயுக் கசிவு!


உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருந்தனர் போபால் நகரமக்கள். நள்ளிரவு நேரத்தில் திடீரென குழந்தையின் இறுமல் கேட்டது. எழுந்து பார்த்த அஸீஸா சுல்தான் என்ற போபால் நகரவாசிக்கு அதிர்ச்சி. வீடே புகைமூட்டமாக இருந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததை உணர்ந்த சுல்தானுக்கும் இறுமல் தொற்றிக்கொண்டது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்.
விஷவாயு பரவியதால் குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து விட்டது, ஏராளமான மாடுகள் மடிந்துவிட்டன என்று சொன்னபடியே பொதுமக்கள் ஓட, அதிர்ச்சியில் கால்களை நகர்த்த முடியாமல் திணறினார் சுல்தான். விடிய விடிய உயிர்கள் பலியாகிக்கொண்டே இருந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் எழுந்து பார்த்தபோது ஏராளமானோர் பிணமாகிக்கிடந்தனர்.
இத்தனைக்கும் காரணம், யூனியன் கார்பைடு நிறுவனம்.
விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு கிட்டத்தட்ட  20,000 உயிர்கள் பலியாகின. பலியின் வேகத்தைத் தடுக்கும் முயற்சியாக வெளியேறும் விஷ வாயுவின் பெயரைக் கேட்டனர் மருத்துவர்கள். ‘அது அமெரிக்காவின் ராணுவ ரகசியம். வெளியே சொல்லமுடியாது’ யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகம். இதன் காரணமாகவே ஏராளமான உயிர்கள் பலியாகின. ஒட்டுமொத்தமாக பதினைந்தாயிரம் உயிர்கள் அப்போது பலியாகின. இத்தனையும் நடந்தது டிசம்பர் 3, 1984ல்.
பின்னர் நிறுவனத்தின் கோப்புகளை ஆராய்ந்ததில் நிறுவனம் செயல்படுவதற்கு முன்னர் நடத்தப்படவேண்டிய பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவற்றையும் செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை பெரிய அபாயத்தை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டர்சன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, சில மணிநேர சிறைவாசத்தைத் தவிர. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஆனால் பாதிப்பு மட்டும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது.
விஷவாயு வெளியேறிய சமயத்தில் ஏராளமான பேர் உயிரிழந்தது போக, இன்னமும் அந்த விஷவாயுவின் தாக்குதலுக்கு நித்தம் நித்தம் பலியாகிக் கொண்டிருக்கின்றனர் போபால் மக்கள். அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மாவு போன்ற பொருள் காற்றில் கலந்துவிடுகின்றன. அந்த காற்றை மட்டுமே சுவாசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் போபால் மக்கள்.
தவிரவும், தண்ணீரிலும்கூட விஷ மாவு படிந்துவிடுகிறது. அதைத்தான் பருகவேண்டிய கட்டாயம். விளைவு, சிலர் தோல்வியாதிகளால் பீடிக்கப்படுகிறார்கள். சிலருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி குன்றி விடுகிறது. எடைகுறைந்த குழந்தைகள் பிறக்கின்றன. இன்னும் இன்னும் நிறைய பாதிப்புகள்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக நடந்துவந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட எட்டு பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், இந்த எட்டு பேரில் மரணம் அடைந்துவிட்ட ஒருவரைத் தவிர மற்ற 7 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த கோர்ட், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கி விடுவித்துள்ளது.



நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன.....  ( 20,000ம் மக்கள் இறந்து 5 லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...முச்சுதினறலில் பலர் சுவாசபாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்த  குற்றத்துக்கு, 26 வருடங்களுக்கு பிறகு  இரண்டு வருட தண்டனை.)

No comments:

Post a Comment

Infolinks

ShareThis