Sunday, June 27, 2010

தமிழுக்கு மாநாடா? தமிழக முதல்வருக்கு மாநாடா?

செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பல கோடி ரூபா செலவில் மிகப்பிரமாண்டமாக கோவையில் ஆரம்பித்தது. ஆனால்
இப்போது கருணாநிதி புகழ் பாடும் மாநாடாக மாறிவிட்டது.

உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பேரறிஞர்கள் தமிழை வாழ வைக்கின்றார்களோ இல்லையோ தமிழக முதல்வர் கருணாநிதியை வாழ்த்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு நிற்கிறார்கள்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்று மகாகவி பாரதி சொல்லியிருந்தான்.

ஆனால் தமிழை வாழ வைத்தல் என்கிற போர்வையில் உதயமாகியிருந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் ஆங்கிலத்தில் ஆரம்பமாகின.

மாநாட்டுக்கு வந்திருந்த மக்கள் இதனால் எரிச்சலடைந்தனர். மாநாட்டுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இராது என்று ஆரம்பத்தில் அடித்துக் கூறியிருந்த கருணாநிதி அவருடைய அரசியல் இருப்பைப் பலப்படுத்துவதற்கும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் இம்மாநாட்டை களமாகப் பயன்படுத்துகின்றார்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக அடிக்கடி நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வீற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இம்மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கத் தவறி விட்டார்.

அதே போல உலகின் புகழ் பூத்த விஞ்ஞானியும் தமிழ்ப் பற்றாளரும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமையும் புறக்கணித்துவிட்டார்.

அவர் யாரை எவரை திருப்திப் படுத்துவதற்க்காக இவற்றையெல்லாம் செய்கின்றார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும். அவர் தனது நன்றியுரையை சோனியாகாந்திக்குச் சமர்ப்பணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


                  கவியரங்கம் என்றப் பெயரில் தமிழ் பெருமைகளை, இல்லை தமிழை அழியாமல் காக்க ஆக்க பூர்வமானக் கருத்துக்கள் தான் கவிதையூற்றிலே பெருக்கெடுத்து ஓடும் என்ற நம் எண்ணத்தில் விழுந்தது அடி.

ஈரோட்டு தமிழன்பன் தொடங்கிவைத்தார். “அவர் நேரடியாகவே கேட்டிருக்கலாம், நீதான் தமிழ், தமிழ்தான் நீ, சில்லறை இருந்தாக் கொடு தலைவரே என்று” அதை விட்டு வேட்டிக் கட்டிய தாய், அவ்வை அதியமான் நெல்லிக்கனி, துப்பின கொட்டை(கள்) என்று, நல்ல காலம் அவ்வையார் காதில் விழவில்லை விழுந்திருந்தால்

எட்டேகால் லட்சணமே
எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்டமுட்ட கூரையில்ல வீடே
குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது 

 
நல்லத் தமிழில் திட்டியிருப்பாள். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

அடுத்தபடியாக நம்ம கவிப் பேரரசு

“உன் வாய் உமிழ் நீர் கூடத் தமிழ் நீர்”, அபத்தத்தின் உச்சக் கட்டம். அதற்கு பதில் “கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு” என்று கேட்டிருக்கலாம்.
ஏதோ தமிழ்த் தாய்க்கு நல்ல காலம் மற்ற கழிவு நீரை விட்டானே பாவி என்று தப்பி ஓடிவிட்டாள்.

அப்புறம் வந்தார் ஐயா வாலி என்று ஒரு போலி இவரின் செம்மொழி மாநாட்டு பங்கு அபாரம்.

பூ ஒன்று ப்பூ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதய சூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது அப்பூ எப்பூ “புடவைக் கட்டிய பூ” அந்தம்மா ஜாக்கெட்டை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

மேலும் நாம் யாருக்கு சொம்பு தூக்குகிறோமோ அவருடைய எதிராளிய ஏதாவது ஏசவேண்டும் என்பது எழுதாத விதி.

அந்த வகைக்கு தன் பங்கில்
புனைந்தான் அய்யா ஒரு பாட்டு, அது செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு, அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு
ஆனால் என் அருமை நண்பர் சோவுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு அல்ல “அய்யர்” நோக்கு.

இதற்கு முதல்வர் விழுந்து விழுந்து சிரித்தார்.
என்ன ரசனை, செம்மொழி மாநாட்டிலும் சாதி வெடி கொளுத்தியாகிவிட்டது.

நான் மாநாடு நடத்துவதை குறை சொல்லவில்லை. நடத்திய விதம் நடத்தப் படும் நோக்கம் இதைப் பற்றிதான் சொல்கிறேன்.

ஒனாண்டி கவிஞர்களை வைத்து புகழ் மாலை தேவைதானா.

தமிழைப் பாடுங்க என்று ஏன் யாரும் சொல்லாமல் போனார்கள்.

இதற்காக தொடங்கியிருக்கும் வலைமனையில் சான்றோர் என்ற பகுதி நிரப்பப்படாமலே உள்ளது உறுத்துகிறது.


“நெஞ்சுப் பொறுக்குதில்லையே”

No comments:

Post a Comment

Infolinks

ShareThis