ரோபோவை(robo) மனிதன் போல (humanoid robots) தயாரிக்கும் விஞ்ஞானி அதன் பிறகு நடக்கும் விளைவுகளை கூறும் படமே இது.
ரஜினியிடம் இருந்து இப்படி ஒரு படம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிவாஜியில் விட்டதை ஷங்கர் இதில் பிடித்து விட்டார். அதாவது அவரது படங்கள் அனைத்தும் ஷங்கர் படம் என்று கூறப்படும் சிவாஜி மட்டும் அதில் விதி விலக்கு. இதில் என்ன செய்வார் என்று ஆவலாக இருந்தேன். இதில் அவர் இது ஷங்கர் படம் என்று நிரூபித்து விட்டார் கடைசி அரை மணி நேரம் தவிர ஆனால் கடைசி அரைமணி நேரம் அதன் முன்பு உள்ள மொத்த ஷங்கர் படத்தையும் ரஜினி தூக்கி சாப்பிட்டு விட்டார் கிராபிக்ஸ்( graphics ) தவிர்த்து.
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ரஜினிக்கு இதில் அறிமுகப்பாடல் இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயிச வசனங்கள் இல்லை அனாவசியமான எந்த காட்சியும் இல்லை. ரஜினியின் அறிமுகமே எந்த வித பில்டப்பும் இல்லாமல் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா! வேறு வழி இல்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ரோபோவாக வரும் சிட்டி வந்ததில் இருந்து படம் கலகலப்பாக போகிறது. அவர் சிரிக்காமல் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் உள்ளவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. குழந்தைகளை இந்த சிட்டி ரோபோ வெகுவாக கவருவார் என்பதில் சந்தேகமில்லை.
விஞ்ஞானி ரஜினியின் உதவியாளர்களாக சந்தானமும் கருணாசும் வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை. காமெடி இருந்தாலும் அவர்களது முந்தைய படங்களோடு ஒப்பிட முடியாது. அவர்களுக்கு அதிக அளவில் காட்சிகள் வைக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
படத்தில் வில்லன் ரஜினியாக வரும் ரஜினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எவ்வளவு வருடம் ஆச்சு! இப்படி ஒரு வில்லன் ரஜினியைப் பார்த்து. இந்த வில்லன் சிரிப்பை தமிழ் திரையுலகம் இழந்தது எனக்கு இப்போது கூட வருத்தமாக உள்ளது. எத்தனை வில்லன் இருந்தாலும் ரஜினியின் வில்லத்தனம் முன்பு ஈடாகாது. நான் வில்லன் ரஜினியையே அதிகம் எதிர்பார்த்தேன் என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. எனக்கு ஒரு வருத்தம் ரஜினிக்கு இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் உள்ள காட்சிகளை வைத்து இருக்கலாம் என்று. ஒருவேளை ஓவர் டோஸ் ஆகி விட்டால் என்ன செய்வது என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். ஆனால் படத்தில் கடைசியில் வில்லன் ரஜினி அதகளம். ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள்.
வில்லனாக வரும் டேனி டெங்ஸோங்பாவுக்கு நடிக்க பெரிய அளவில் வாய்ப்பில்லை. நான் ரொம்ப எதிர்பார்த்தேன். பெரும்பாலும் ரஜினி படத்தில் வில்லனுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் ஒருவேளை வில்லன் ரஜினியே இருப்பதால் இவருக்கு அது போல அமைக்கப்பட்டதோ என்னவோ!
ஐஸ் படத்தில் மாணவியாகவும் ரஜினியின் காதலியாகவும் வருகிறார். படம் முழுவதும் வருகிறார் திணிக்கப்பட்டது போல இல்லை. இவரின் நடனத்தை எப்படி பாராட்டுவது! ரஜினி பேட்டியில் பல முறை ஒத்திகை பார்த்து ஐஸ் நடனம் பார்த்து எல்லாம் மறந்து விட்டது என்று கூறி இருந்தார் அவர் கூறியதில் எந்த வித மிகைப்படுத்தலும் இல்லை என்று கிளிமாஞ்சாரோ பாடல் பார்த்து பிறகு புரிந்து கொண்டேன். இப்படியும் ஒருவர் நளினமாக ஆட முடியுமா! என்று ஆச்சர்யப்படுத்துகிறார். ஆடுவது பெரிய விஷயம் இல்லை ஆனால் கஷ்டப்படாமல் இதெல்லாம் ஒரு விசயமாக என்கிற அளவிற்கு ஆடுவதைப்போல ஆடுவது என்பது! உண்மையிலே ஆச்சர்யம் தான். நடனம் என்றில்லாமல் நடிப்பிலும் தன் பங்கை சரியாகவே செய்து இருக்கிறார்.
விஞ்ஞானி ரஜினி ரோபோவை உருவாக்கும் போது தாடி வளர்ந்து காணப்படுவார். அந்த சமயங்களில் ரஜினியின் வயது நன்கு தெரிகிறது. தாடியும் சரியாக இல்லை. ஆனால் அதன் பிறகு ஷேவ் செய்து வரும் காட்சிகளில் இளமையாக காணப்படுகிறார். ஒருவேளை களைப்பை முகத்தில் காட்ட அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை.
கிராபிக்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும் ஏனென்றால் படத்தில் முக்கிய விசயமே இது தான். நான் ரஜினி ரசிகன் என்பதால் சொல்வதாக நினைக்க வேண்டாம். நிஜமாலுமே கிராபிக்ஸ் கலக்கல் தான். தீ பிடிக்கும் காட்சியில் மட்டும் கிராபிக்ஸ் என்று தெளிவாகத் தெரியும் மற்றபடி வேறு எந்தக்காட்சிகளிலும் குறையே கூற முடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸ் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் ஹாலிவுட் படங்களில் வருவதைப்போல உள்ளது. கொஞ்சம் கூட மிகைப்படுத்த வில்லை.
இந்தப்படத்திற்கு மூலக்காரணமே அமரர் சுஜாதா அவர்கள் தான் ஆனால் பட துவக்கத்தில் அவருக்கு தகுந்த மரியாதை செய்யவில்லை (வழக்கமான வசனம் பகுதி தவிர). நான் கவனித்த வரை ஒன்றுமில்லை ஒருவேளை ரசிகர்கள் கலாட்டாவில் நான் சரியாக கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் ஷங்கர் செய்தது மன்னிக்க முடியாதது.
ரோபோ ரஜினி தன் காதலை ஐஸ் இடம் கூறும் சமயம் மற்றும் சில இடங்களில் படம் மெதுவாக செல்கிறது. இந்த இடங்களை ஷங்கர் இன்னும் கொஞ்சம் சுவாரசியாமாக்கி இருக்கலாம். அதே போல் துவக்க காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம். இதுவே என்னைப்பொறுத்தவரை படத்தின் பெரிய குறை.
பொதுவாக ரஜினி படம் என்றால் பத்து பேரை அடிப்பார் பறந்து பறந்து செல்வார் என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லாதவாறு காட்சிகள் உள்ளது. ஒரு காட்சி கூட கதாப்பாத்திரத்தை மீறி இல்லை. ஒரு விஞ்ஞானி எந்த அளவு இருப்பாரோ அந்த அளவிற்கு மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. சண்டை கூட போடாமல் ஓடுவார் என்றால் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். ரஜினி பேசும் போது “ஷங்கர் என்ன கூறினாரோ அதை செய்து இருக்கிறேன்” என்று கூறி இருந்தார். நான் கூட சும்மா ஒரு பேச்சுக்கு கூறினார் என்று நினைத்தேன் ஆனால் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் பார்த்த பிறகு தான் புரிகிறது.
இந்தப்படம் இந்திய திரை உலகிற்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன். நல்ல பட்ஜெட் இருந்தால் நாமும் சிறப்பாக கிராபிக்ஸ் காட்சிகளை அமைக்க முடியும் என்று இந்தப்படம் உணர்த்துகிறது.
ரகுமான் பாடல்கள் ஏற்கனவே அனைத்தும் ஹிட் ஆகி விட்டது. படத்தில் இரும்பிலே ஒரு இதயம் பாடல் எடுக்கப்பட்ட விதம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மற்ற அனைத்து பாடல்களும் அசத்தல் ரகம் அதுவும் காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ மற்றும் அரிமா அரிமா பட்டய கிளப்புகிறது. ரகுமான் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு அமைத்து இருக்கும் பின்னணி இசை நிஜமாகவே உலகத்தரம். இதுவரை இதைப்போல பிரம்மாண்டமான இசையை ஹாலிவுட் படங்களில் மட்டும் கேட்டுள்ளேன். இதில் தூள் கிளப்பி விட்டார்.
கேமரா ரத்னவேல் மற்றும் கலை சாபு சிரில் அருமையாக செய்து இருக்கிறார்கள். காதல் அணுக்கள் பாட்டில் கேமரா அசத்தி இருக்கிறது. சாபு சிரில் செட்டிங்ஸ் எது என்று சொன்னால் தான் நமக்கு தெரியும். ஷங்கர் பற்றி கூற எதுவுமில்லை ஏனென்றால் அவர் இல்லை என்றால் இந்தப்படமே இல்லை.
original post by:http://www.giriblog.com/2010/09/enthiran-review.html
KALAKKITTANGA PA.......! DONT MISS ENDHIRAN.....!
ReplyDelete