வீம்புக்காரத் தமிழர்!
1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?
மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது.
அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் வற்றிக் கிடக்க, அவர் தோண்டிய கிணற்றில் மட்டும் நீர் சுரந்துக் கொண்டே இருந்தது. கேலி பேசியவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டுவந்து நீர் பிடித்துச் சென்றார்கள்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரை வீம்புக்கார மனுஷன் என்கிறார்கள். வீம்புக்கு வேறு சில பெயர்களும் தமிழில் உண்டு. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. சுறுசுறுப்பு.
அந்த மனிதர் பொள்ளாச்சி நசன். தமிழ்க்கனல் என்ற பெயரில் இலக்கிய வட்டாரங்களில் பிரபலம். "எந்த வேலையையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே நான் கிணறு தோண்டினேன். அது நிச்சயமாக வெட்டி வீம்பு அல்ல. செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், சோர்ந்துவிடாது இலக்கை அடையும் வரை இயங்கிக்கொண்டே இருந்தால் வெற்றி என்பதைத் தவிர வேறென்ன கிடைக்கும்?" என்கிறார் நசன். இப்போது 58 வயதாகிறது. 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆசிரியப்பணியை செம்மையாக செய்து, கடந்தாண்டு அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழார்வலரான இவருடைய தமிழ்ப்பணிகள் தொடர்கிறது.
இவருடைய உண்மையான பெயர் நடேசன். பெயரில் "டே" இருப்பது அவருக்கு மரியாதைக் குறைவாக பட்டதால், அதை நீக்கிவிட்டும் 'வெறும்' நசன் ஆகிவிட்டார். "பின்னே நாமளே நம்மை 'டேய்' போட்டு கூப்பிடறதை அனுமதிக்கமுடியுமா?" என்கிறார் வீம்புடன். மன்னிக்கவும், தன்னம்பிக்கையுடன். நசன் என்ற இந்தப் பெயர் சுயமரியாதை கொண்டது மட்டுமல்ல. தனித்துவமும் பிரபலமும் கூட கொண்டிருக்கிறது. 'நசன், பின்கோடு - 642 006' என்று அஞ்சலட்டையில் முகவரி எழுதி அனுப்பினாலே அவருக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?
கிணறு வெட்டுவது, பெயரில் 'டே'யை நீக்கியது என்றில்லாமல், இன்னும் ஏராளமான 'இண்டரெஸ்டிங்' விஷயங்கள் பொள்ளாச்சி நசனிடம் உண்டு.
1985ல் விடுதலைப்பறவை என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகையை நடத்தினார். கவிதை, துணுக்கு, குறிப்பு என்று பல்சுவையான விஷயங்களை அவரே எழுதுவார். உருட்டச்சு இயந்திரம் ஒன்றினை (கிட்டத்தட்ட ஜெராக்ஸ் மாதிரி – ஆனால் ஜெராக்ஸ் அல்ல) அவரே உருவாக்கி, அதில் 100 பிரதிகள் அச்சடித்து கிடைத்த முகவரிக்கெல்லாம் தபாலில் அனுப்பி வைப்பார். இதுமாதிரி மொத்தம் 34 இதழ்கள் மாதந்தோறும் உருட்டி, உருட்டி ஊருக்கெல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார். விடுதலைப் பறவையில் தனக்கு வாசிக்க கிடைத்த சிற்றிதழ்களை எல்லாம் பட்டியலிட்டு அறிமுகப்படுத்துவார்.
இதைக்கண்ட நண்பர்கள் சிலர், அவரவருக்கு தெரிந்த சிற்றிதழ்களை இவருக்கு அறிமுகப்படுத்த, சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தவென்றே ஒரு பத்திரிகை தொடங்கினாலென்ன என்றொரு 'ஐடியா' இவருக்கு தோன்றியது. ஆரம்பித்து விட்டது அடுத்த திட்டம். இம்முறை உருட்டச்சுப் பத்திரிகையாக இல்லாமல், நேரடியாக அச்சுப் பத்திரிகையாக மலர்ந்தது 'சிற்றிதழ் செய்தி'. முதல் இரண்டு இதழ்கள் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டது.
மூன்றாவது இதழிலிருந்து இவரே ஒரு அச்சகம் தொடங்கி அச்சிட ஆரம்பித்தார். வழக்கம்போல முதலாளியும் இவரே. தொழிலாளியும் இவரே. அச்சகம் என்றால் பெரிய பிரிண்டிங் பிரஸ் என்று நினைத்து விடாதீர்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது மாதிரி, கையால் சுற்றும் 'டிரெடில்' மிஷின் ஒன்று. 20 கிலோ அலுமினிய அச்சு எழுத்துகள். 5 கிலோ தலைப்பு எழுத்துகள். அச்சுக்கோர்க்க பழகி இவரே ஒவ்வொரு எழுத்தாக எடுத்து கோர்த்து, பிழை திருத்தி, இயந்திரத்தில் ஏற்றி ஃபார்ம் தயாரிப்பார்.
மிஷினை கையால் சுற்றிவிட யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு, தாளை வைத்து அச்சாக்கி எடுப்பார். சிற்றிதழ் செய்தி என்பது சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும், இணைப்பிற்காகவும் வெளிவந்த இதழ். ஆரம்பத்தில் இருமாத இதழாக வந்தது. பின்னர் இலக்கிய அபிமானிகளிடம் பெரியளவிலான வரவேற்பினைத் இதுபெற்ற போதிலும் நசனால் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும் அச்சுக்கோர்த்து, பிழைத்திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு வேலை பார்த்ததால் அவரது கண்பார்வை மங்கத் தொடங்கியது. கண்ணாடி நிரந்தரம் ஆனது.
மொத்தம் 34 இதழ்கள் சிற்றிதழ்ச் செய்தி வந்திருக்கிறது. அவற்றில் கடைசி சில இதழ்கள் கணினியில் அச்சுக்கோர்க்கப்பட்டு, ஆஃப்செட் முறையில் அச்சானவை. அந்த வேலையையும் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நசனே வடிவமைத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைப்பட்ட காலத்தில் நிறைய சிற்றிதழ்கள் இவருடைய சேகரிப்பில் சேர்ந்ததால் அவற்றை தமிழகம் முழுக்க ஆங்காங்கே கண்காட்சிகளாக வைத்து இலக்கிய ஆர்வலர்களை கவர்ந்தார். மொத்தம் 15 இடங்களில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் கண்காட்சி வைத்தபோது, சில தமிழ்சார்ந்த அறிவுஜீவிகள் 'விலங்கியல் படித்தவருக்கு தமிழில் என்ன வேலை?' என்று விசனப்பட, நம்மாளுக்கு மீண்டும் 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்தது. உடனே தமிழ்முதுகலை படித்து, இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.
1999 வரை சிற்றிதழ்ச் செய்தி இதழ் வெளிவந்தது. இக்காலக் கட்டம் வரை சுமார் 2700 வகையான சிற்றிதழ்கள் நசனின் சேகரிப்புக்கு கிடைத்தது. 1985க்குப் பிறகுவந்த கிட்டத்தட்டஎல்லா தமிழ்ச் சிற்றிதழ்களும் இன்று பொள்ளாச்சி நசனிடம் இருக்கிறது.
தமிழ்த்தேசிய சிந்தனையாளரான தோழர் தியாகு சென்னையில் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு நசனுக்கு கிடைத்தது. தாய்மொழிக் கல்வியில் அடிப்படைக் கல்வியை கற்பது ஒரு மாணவனின் அறிவுக் கண்ணுக்கு திறவுகோலாக இருக்குமென்று உணர்ந்தார். திருப்பூர், பல்லடம், கோபியென எங்கெல்லாம் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்குகிறதோ அங்கெல்லாம் சென்று எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார். வழக்கம்போல இவரே ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன் பட்டியில் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறார். சுமார் 140 குழந்தைகள் படிக்கிறார்கள்.
சோதனைமுறையில் இப்பள்ளியில் புதுமையான கற்பித்தல் முறை ஒன்றினை நடத்தி பெரும் வெற்றியும் கண்டார். வெறும் 32 அட்டைகளில் சில பாடங்களை உருவாக்கினார். இவற்றை மட்டுமே படிக்கும் மாணவர்கள், வெறும் மூன்றே மாதங்களில் தமிழ்ச் செய்தித்தாளை படிக்குமளவுக்கு தமிழில் தேறிவிடுகிறார்கள். இந்த கற்பித்தல் முறை கோவை மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றியும் கண்டது. தமிழே அறியாத ஒருவரும் மூன்று மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடங்களை எளிமையாக, நுணுக்கமாக அமைத்திருக்கிறார் நசன்.
தன்னுடைய பல்லாண்டுகால சிற்றிதழ் சேகரிப்புகளையும், எளியவழித் தமிழ்க் கற்பித்தலையும் சொந்தமாக தமிழம்.நெட் (thamizham.net) என்ற இணையத் தளத்தை தொடங்கி அதில் மொத்தமாக பதிவேற்றி இருக்கிறார். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலவழி தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு இருக்கிறது. 35 பாடங்களில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை தொடக்க நிலைப் பாடங்கள். மேற்கொண்டு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் சி.டி. வடிவிலான பாடங்கள், படவடிவக் கோப்புகள், அட்டைகள் என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறார். இணையம், சி.டி. போன்றவற்றை அவை தொடர்பான எச்.டி.எம்.எல் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்று, வழக்கம்போல நசனே உருவாக்கியிருக்கிறார் என்பதை நாம் குறிப்பிடாமலேயே நீங்கள் இன்னேரம் யூகித்து விட்டிருப்பீர்கள்.
"என்னுடைய இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். பெருங்காய மூட்டை சுமந்து என்னுடைய அப்பா எங்களை காப்பாற்றினார். 74ல் பட்டம் முடித்த எனக்கு 80ல்தான் வேலை கிடைத்தது. 25 ஆண்டுகள் முழுமையான ஆசிரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். நல்ல மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலுமே கிடைக்காது. நம் மாணவர்கள் நம்மை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் இயங்குவது கொடுக்கும் நெகிழ்வுத்தன்மை வேறெங்கு கிடைக்கும். பணியிலிருந்து கிடைத்திருப்பது வயதுரீதியிலான ஓய்வு. என்னுடைய தமிழுக்கு ஏது ஓய்வு? அது தொடந்துகொண்டேயிருக்கும்" என்று நெகிழ்ச்சியாக முடிக்கிறார் நசன்.
என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.
(நன்றி : புதிய தலைமுறை & யுவகிருஷ்ணா)
//என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.//
ReplyDeleteஉண்மைதான்