பீடா

அரசனுக்கு செலுத்தும் காணிக்கைகளிலே, முதலிடம் பெற்றது வெற்றிலையும், பாக்குமே. தாம்பூலச் சுவையை அவன் உணர்ந்தானோ இல்லையோ, அதனுடைய செல்வாக்கை, நன்றாக அறிந்து கொண்டான். வெற்றிலை மேலும், பாக்கின் மேலும் வரி சுமத்தி, பொக்கிஷத்தை நிறைத்துக் கொண்டான்.


பண்டைக் காலத்திலே அரசனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப் பதற்காகவே, ஒரு தொழில் ஏற்பட்டிருந்தது. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மகளிர்... "தாம்பூல கரங்க வாஹினியர்!' இவர்களைப் பற்றிக் காவியங்களிலே வர்ணிக்கப் பட்டிருக்கிறது; இது கற்பனையன்று.

வட ஆற்காடு மாவட்ட படுவூர் பாளையக்காரனாயிருந்த பாண்டித் தேவன், இந்தத் தொழிலுக்கு நம்பிக்கையான ஒரு பெண்ணை நியமித்துக் கொண்டிருந்தான் என்றும், ஈஸ்ட் இந்தியா கம்பெனி அரசாங்கத்துக்கு வரி கொடுக்காமல் இருந்தான் என்றும், கம்பெனியார் அந்தப் பெண்ணை வசமாக்கிக் கொண்டு, பாண்டித் தேவனை கொலை செய்தனர் என்றும் வரலாறு கூறும் கதை ஒன்றுண்டு. ஆகவே, தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் தொழில், கம்பெனி காலத்தில் கூட இருந்தது. இதையெல்லாம் பார்த்தால், தாம்பூலம் ஒரு பழக்கம் மட்டுமல்ல; மக்களுக்குத் தொழிலையும் தந்து உதவியளித்தது, அரசாங்கத்திற்கு ஆதாயம் தந்தது என்றும் கூற வேண்டும்.

கோவில்களில் பிரானுக்கும், பிராட்டிக்கும், பூஜையின் போது, தாம்பூலம் படைப்பது வழக்கமாயிற்று. கோவிலுக்கு தானம் விடப்பட்டவற்றில் வெற்றிலைக் கொடிக்கால்களையும், பாக்கு மரத் தோப்புகளையும் பற்றிய கல்வெட்டுச் செய்திகள் உண்டு.

கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில், வெற்றிலை பாக்கும் சேர்ந்திருந்தது. தோட்டக்காரனுக்கு, பூமாலை கட்டுபவனுக்கு, காவல்காரனுக்கு, அர்ச்சகனுக்கு, வாத்தியம் வாசிப்பவனுக்கு, நாட்டியக்காரனுக்கு, ஓதுவார்களுக்கு இன்னின்ன அளவில் தாம்பூலம் கொடுக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவையும் கல்வெட்டுச் செய்திகளே!

இப்போது, "பீடா' வியாபாரிகள், வடமாநிலத்திலிருந்து வந்து, இங்கிருந்த தாம்பூலக் கலையை ஒழித்துவிட்டனர். ஒரு வெற்றிலையை இரண்டாகத் கிள்ளி அதன் மேல், "கத்தா' குழம்பைத் தடவி, பாக்குத் துண்டுகளை (தூளை) வைத்து, "இனி உன் பாடு' என்பது போலக் கொடுக்கிறான், பான்வாலா. அவன் மடித்துக் கொடுத்ததைப் பிரிக்காமல், வாய்க்குள் போட்டுக் கொள்ளும் சாமர்த்தியம் நம்முடையது!

— "போதையின் பாதையில்' நூலிலிருந்து.

Comments

  1. முதல்லே எல்லாம் ஏமாத்த தெரிஞ்சவன் கெட்டவன் தெரியாதவன் நல்லவன் .... ஆனா இன்னைக்கு ஏமாத்த தெரிஞ்சவன் புத்திசாலி தெரியாதவன் கோமாளி ......உலகம் உருப்படற maadhiri theriyala...!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography