Monday, October 25, 2010

காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்?

காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்?


சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா 100 பதக்கங்களை குவித்திருந்தாலும், அதில் தமிழகத்தின் பங்கு என்ன என்று பார்த்தால், சோகம் தான் மிஞ்சுகிறது. மக்கள்தொகை அடிப்படையில், ஏழாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம். ஆனால், மொத்த வீரர்களில் தமிழகத்தின் பங்கு வெறும் 5 சதவீதம். 30 வீரர்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து சென்றனர். இவர்கள் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலித்தாலும், தமிழக வீரர்கள் சோடை போயினர். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மட்டுமே தங்கம் வென்றார். வில்வித்தை வீரர் ஸ்ரீதர், தடகள வீரர் சுரேஷ் சத்யா, வீராங்கனை காமினி ஆகியோர் தங்கம் வெல்ல முடியாவிட்டாலும், பதக்கங்களை பெற்றனர்.

வீரத்துக்கும், விளையாட்டிற்கும் பெயர் போன தமிழகத்தில் இருந்து சென்ற வீரர்கள், ஜொலிக்காமல் போனதற்கு என்ன காரணம்? இது குறித்து, தெற்காசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற விருது பெற்றவரும், 1989ல் இஸ்லாமாபாத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் பெற்றவரும், தமிழக முன்னாள் தடகள வீரருமான நடராஜன் கூறியதாவது:

* சர்வதேச அளவில், தமிழக வீரர்கள் சாதிக்க முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி, ஸ்பான்சர்கள் மற்றும் அரசு ஆகிய நான்கு நிலைகளிலும், வீரர்களுக்கு ஊக்கம் தேவை. இது, இங்கே இல்லை. பெற்றோர்களே, விளையாட்டுக்களில் குழந்தைகளை ஆதரிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் படி, படி என்கின்றனர். படித்தால் தான், வாழ்க்கையில், "செட்டில்' ஆக முடியும் என நினைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
* சென்னையில் 80 சதவீத பள்ளிகளில் மைதானங்கள் கிடையாது. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தாலே போதும். பின்னர், தங்களை தாங்களே வளர்த்து கொள்வர். பள்ளிகளில், விளையாட்டுக்கான வகுப்பை, அறிவியல், கணித ஆசிரியர்கள் வாங்கிக் கொள்கின்றனர். விளையாட்டு ஆசிரியர்களை, டீ குடிக்க அனுப்பி விடுகின்றனர்.
* லண்டனில், ஒருவருடைய தசை நார்களை சோதனை செய்து, இவரை எத்தகைய விளையாட்டுக்களில் ஈடுபடுத்தலாம் என முடிவு செய்கின்றனர். அதுபோல், நவீன யுக்திகளை நம் நாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.
* குண்டு எறிதல், தட்டு எறிதலில் பஞ்சாபியர்கள் சிறந்து விளங்குகின்றனர். குத்துச்சண்டை, மல்யுத்தங்களில் வட மாநிலத்தவர்கள் சாதிக்கின்றனர். இதுபோல், இயல்பாக நம்மிடம் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு, விளையாட்டுக்கான நிதியை அதிகளவு வழங்க வேண்டும். இவ்வாறு நடராஜன் கூறினார்.

அரசு பள்ளிகளில் உதாசீனப்படுத்தப்படும் உடற்கல்வி : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை சம்பந்தபட்ட விளையாட்டில் மேம்படுத்துவதற்கு அதிகாரிகள் முதல் தலைமை ஆசிரியர்கள் வரை ஒருவரும் ஆர்வம் காட்டாத நிலை இருந்து வருகிறது. உடற்கல்வி ஆசிரியர்களை, கல்வித்துறை விழாக்கள் என்றால் அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதும், விழாவின் போது "பாதுகாவலர்களாக' பயன்படுத்துவது போன்ற அவல நிலை நிலவி வருகிறது.

மாணவ, மாணவியர் நல்ல உடல் தகுதியை பெற்றிருந்தால் தான், படிப்பில் சிறந்து விளங்க முடியும். படிப்பிற்கு அடிப்படையாக இருப்பது உடற்கல்வி. விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டி, உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், நினைவாற்றல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றின் காரணமாக, படிப்பில் சிறந்து விளங்க முடியும். மேலும், குறிப்பிட்ட விளையாட்டுகளில் மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்து கொண்டால், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றிகளை குவிக்க முடியும். இதற்கு, பள்ளி அளவிலேயே திறமையான மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை சம்பந்தபட்ட விளையாட்டுகளில் ஊக்கப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. உடற்கல்விக்கு, அரசும், அதிகாரிகளும் முக்கியத்துவம் தருவதில்லை. இதன் காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர்களும், உடற்கல்வியை ஒரு பொருட்டாக கண்டு கொள்வதில்லை.

தனியார் பள்ளிகள், விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் என பல்வேறு போட்டிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்தவோ, உடற்கல்வி ஆசிரியர்களை போதுமான அளவில் நியமனம் செய்து, உடற்கல்வியை வலுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உடற்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 250 மாணவர்கள் (6ம் வகுப்பிற்கு மேல்) இருந்தால், ஒரு உடற்கல்வி ஆசிரியரும், 250 முதல் 500க்குள் இருந்தால் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும், 500க்கு மேல் இருந்தால் மூன்று உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த கணக்குப்படி உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், உடற்கல்வி ஆசிரியர்கள் அந்தளவிற்கு நியமிக்கப்படுவதில்லை. இதனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த அதிகாரிகளோ, தலைமை ஆசிரியர்களோ சிரத்தை எடுப்பதில்லை. மேலும், உடற்கல்வி ஆசிரியர்களையும் வேறு பணிகளில் ஈடுபடுத்துகின்ற அவலமும் இருந்து வருகிறது.

கல்வித்துறை சார்ந்த விழாக்கள் என்றால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, விழாக்களுக்கு "பாதுகாப்பு' தருவது போன்ற பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி 7,000 ஆசிரியர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். மூன்று பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. இன்னும் 1,500 ஆசிரியர்களை நியமித்தால் தான் இந்த இடைவெளி குறையும்.

பள்ளிகளில் உடற்கல்விக்கோ, உடற்கல்வி ஆசிரியர்களுக்கோ சுத்தமாக மரியாதை கிடையாது. தலைமை ஆசிரியர்கள், உடற்கல்விக்கான நேரத்தை முறையாக ஒதுக்குவது கிடையாது. வங்கிகளுக்குச் செல்வது, பள்ளியில் ஏதாவது ஒரு விழா என்றால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, அழைப்பிதழ் வழங்குவது போன்ற பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பள்ளி மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தில் தான், மாணவர்களுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வாங்குவது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, உணவுச் செலவு போன்றவற்றை நிறைவேற்றி வந்தோம். சிறப்புக் கட்டணம் நிறுத்தப்பட்டாலும், அந்த தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், அந்த தொகை பொதுக்கணக்கில் வழங்கப்படுவதால், வேறு பணிகளுக்கு செலவிடப்படுகிறது. விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு செலவழிக்கப்படுவதில்லை. இப்படி பல்வேறு காரணங்களால், பள்ளிகளில் உடற்கல்வி ஊனமாக இருக்கிறது. இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்

1 comment:

  1. i agree completely with u, the drive has to come from the top to get it implemented well.

    ReplyDelete

Infolinks

ShareThis