12-ம் வகுப்பு முடித்துள்ளவரா? மேற்கொண்டு படிக்க உங்கள் சூழ்நிலை உதவவில்லையா?

10 நாள்களுக்குமுன் Zoho அலுவலகம் சென்றதைக் குறிப்பிட்டிருந்தேன்.அப்போது அவர்களது திட்டமான Zoho University பற்றிக் கேள்விப்பட்டேன்.

பொதுவாகவே மென்பொருள் நிறுவனங்களுக்கு உள்ள பிரச்னை இது. இந்தியாவில் திரும்பிய திசை எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள். இதில் ஃபைவ் ஸ்டார் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், காக்னசண்ட், ஆக்சென்ச்சர் ஆகியவை தொடங்கி அதிகம் சத்தம் போடாமல் நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கேப்டிவ் பேக் ஆஃபீஸ் நிறுவனங்கள் வரை பலவும் உண்டு. இவை அனைத்துக்கும் பிராண்ட் பெயர் உண்டு. எனவே பொதுவாக வேலை தேடும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களுக்கு வரிசையில் சென்று நிற்பார்கள்.

இன்ஃபோசிஸின் மோகன்தாஸ் பாய் சொல்வதைப் பாருங்கள்: எங்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில் 35,000 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறோம். அதில் பாதி பேர் சில மாதங்களிலேயே தாங்களாகவே விலகிவிடுகிறார்கள் (அதிகச் சம்பளத்துக்கு மற்றொரு கம்பெனி) அல்லது எங்களால் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக 18,000 பேர் மட்டுமே நெடுநாள்கள் வேலை செய்கிறார்கள்.

இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் நல்ல பொறியியல் கல்லூரிகளுக்குப் போய் திறமையான ஆட்களை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இதுபோன்ற நிலையில் Zoho-வின் முயற்சி சுவாரசியமானது. அவர்களும் கிடைக்கும் எல்லா இடத்திலும் ஆட்களை வேலைக்குச் சேர்த்தாலும், ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் ‘சராசரிக்கும் சற்றே அதிகமான திறன் கொண்ட’ மென்பொருளாளர் ஆக்கலாம் என்பதுதான் Zoho-வின் நம்பிக்கை. ஆனால் நான்கு ஆண்டுகள் நம்மூர் பொறியியல் கல்லூரிகளில் என்ன நடக்கிறது? உருப்படியாக ஒன்றும் இல்லை. மாணவர்கள் தத்தம் துறைகளில் ஒன்றையும் கற்றுக்கொள்வதில்லை. Soft Skills என்று ஒன்றும் கிடையாது. ஆனால் லட்சக்கணக்கில் காசு கொடுத்துப் படித்த ஒரே காரணத்தால் எக்கச்சக்கமாக சம்பளம் வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறார்கள்.

Zoho, நேராக 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறது. ஆனா இந்தக் காலத்தில் யார்தான் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தப் பார்க்கிறார்கள்? நாட்டில் இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அல்லவா படையெடுக்கிறார்கள்?

ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அவர்களால் மேற்கொண்டு படிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை சோதித்து, அவர்களைப் பயிற்சிக்கு எடுக்கிறது Zoho University. அங்கே அவர்களுக்கு உதவித் தொகை கொடுக்கப்பட்டு, அடிப்படைக் கணிதம், ஆங்கிலம், கணினி அல்காரிதம் ஆகியவற்றில் பயிற்சி தரப்படுகிறது. அத்தனையும் தமிழில்! இதனால் மாணவர்கள் பயப்படவேண்டியதில்லை.

வெறும் 18 மாதங்களில் இந்த மாணவர்களை மென்பொருள் எழுதும் திறன் கொண்டவர்களாக ஆக்கிவிடுகிறோம் என்கிறார் டீன் ராஜேந்திரன். ஊக்கம் கொண்ட பயிற்சியாளர்களை நான் சந்தித்துப் பேசினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கல்லூரிப் படிப்பு என்பது முக்கியமானது. அங்கே கிடைக்கும் அனுபவம் முக்கியமானது. ஆனால் இன்றைய கல்லூரிகள் இருக்கும் நிலையில், மிகச் சில கேம்பஸ்கள் தவிர்த்து மீதி இடங்களில் கல்வி என்று எதுவும் கற்றுத்தரப்படுவதே இல்லை.

ஆனால் மாறாக Zoho University போன்ற இடங்களில் நிச்சயமாக நல்ல தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது உறுதி. ஏனெனில் அவர்கள் கைக்காசைச் செல்வழித்து, உதவித்தொகை கொடுத்து கல்வி கற்றுத்தருகிறார்கள். அந்தக் கல்வியைப் பெற்ற மாணவர்களை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள்களை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்போகிறார்கள். எனவே ஏனோதானோவென்று கற்றுத்தந்தால் பிரயோஜனம் இல்லை.

Infosys கூட மைசூரில் மாபெரும் பயிற்சி மையம் அமைத்துள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். இன்ஃபோசிஸ் பொறியியல் படித்தவர்களை மட்டுமே பெரும்பாலும் பயிற்சிக்குச் சேர்க்கிறது. குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். காக்னசண்ட் போன்ற இடங்களில் பி.எஸ்சி இயல்பியல், கணிதம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் யாருமே 12-ம் வகுப்பு போதும் என்று யோசித்ததில்லை. அதுவும் Zoho தமிழகத்தின் கிராமப்புறங்கள் வரை சென்று பின்தங்கிய வகுப்பு மாணவர்களைத் தேடிப் பிடிக்கிறார்கள்.

12-ம் வகுப்பு முடித்துள்ளவரா? மேற்கொண்டு படிக்க உங்கள் சூழ்நிலை உதவவில்லையா? இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: univ@zohocorp.com

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography