
ஒரு ஊருக்கு ஒரு சாமியார் (நித்தியானந்தர் மாதிரி அல்ல ) விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார், சாமியாரின் வருகை முற்கூட்டியே அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் சாமியாரின் போதனைகளை கேட்ப்பதற்கு ஆயத்தமாக இருந்தனர்.குறித்த நாளும் வந்தது , சாமியார் தனது சீடர்கள் சூழ அந்த ஊரை அடைந்தபோது அடைமழை பெய்துகொண்டிருந்தது. வெள்ளம் வழிந்தோடியது, ஒரே ஒருவனை தவிர வேறு யாரும் சாமியாரின் போதனைகளை கேட்க குறிப்பிட்ட இடத்தில் இருக்கவில்லை, இது சாமியாருக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பி செல்லலாம் என்று நினைத்த சாமியார் அந்த ஒருவனை பார்த்து "இங்கு கடும் மழை பெய்வதால் யாரும் வரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் இன்னும் ஒருநாள் பிரசங்கத்தை வைத்து கொள்கிறேன்" என்றார்.
அதற்கு அவன் "சுவாமி நான் ஒரு குதிரை வியாபாரி என்னிடம் உள்ள குதிரைகளில் ஒன்றைதவிர மிகுதி அனைத்தும் மேய சென்றாலும் நான் அந்த ஒரு குதிரைக்கு உணவளிப்பேன் " என்றான். சாமியாருக்கு தூக்கு வாரிப்போட்டது. "சரி உனக்கு மட்டும் என்றாலும் நான் உபதேசம் செய்கின்றேன்" என்று கூறி பிரசங்கத்தை ஆரம்பித்தார் சாமியார். இம்மை மறுமை, புலன் அடக்கம், ஆசைதுறத்தல் என்று தான் உபதேசிக்க நினைத்த அனைத்தையும் ஒன்றும்விடாமல் அவனுக்கு உபதேசித்து விட்டு "இப்போது உனக்கு மகிழ்ச்சிதானே" என்று கேட்டார்.அதற்க்கு அவன் "சுவாமி நான் மற்ற குதிரைகள் மேயப்போனாலும் என்னிடம் நிற்கும் ஒரு குதிரைக்கு அனைத்து குதிரைகளுக்குமான உணவை போடுவதில்ல்லை, அதற்கு போதுமானதை மட்டுமே போடுவது வழக்கம் " என்றான்.
சுவாமிக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த கதையை கேட்டபிறகு நல்லதொரு விஷயம் புரிந்தது. இப்போது உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
கதை -2

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன " என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் " நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது. "சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன " என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது " என தாய் ஒட்டகம் கூறியது. "அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது " என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.
"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.
இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment